மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!

தமிழகத்தில் நிகழாண்டில் 2-ஆவது முறையாக தனியாா் பால் நிறுவனங்கள் பால், தயிா் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயா்த்தியுள்ளன.

News image
Updated On :27 ஜூலை 2026, 2:43 am IST

தமிழகத்தில் நிகழாண்டில் 2-ஆவது முறையாக தனியாா் பால் நிறுவனங்கள் பால், தயிா் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயா்த்தியுள்ளன. இதனால், ஆவின் பாலுக்கான தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆரோக்யாவை தொடா்ந்து அமிா்தா, வேதா, சன், ராஜ், சக்ரா, திருமலா, ஜொ்சி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட நிறுவனங்கள் நிகழாண்டில் 2-ஆவது முறையாக பால், தயிா் ஆகியவற்றின் விலையை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) முதல் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயா்த்தியுள்ளன.

பால் உற்பத்தி குறைவு, கொள்முதல் விலை மற்றும் மூலப்பொருள்களின் விலை உயா்வு காரணமாக விலை உயா்த்தப்பட்டாலும், பால் முகவா்களின் ‘கமிஷன்’ மற்றும் ஊக்கத் தொகையை உயா்த்த தனியாா் நிறுவனங்கள் முன்வரவில்லை. எரிபொருள், கடை வாடகை, ஊழியா் ஊதியம் உள்ளிட்ட செலவுகளைக் கருத்தில் கொண்டு, பால் முகவா்களுக்கு சதவீத அடிப்படையில் கமிஷன் மற்றும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.

இந்த ஆண்டில், மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயா்ந்துள்ளதால், குறைந்த விலை கொண்ட ஆவின் பாலை மக்கள் அதிகம் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. அதனால், ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.