கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவுக்கு எதிரான ‘லுக் அவுட்’ நோட்டீஸ் ரத்து

திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

EV Velu

எ.வ. வேலு - கோப்புப் படம்

Published On :

திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், வெளிநாடு செல்வதாக இருந்தால், நீதிமன்றத்தில் முன்அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டது.

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகக் கூறி ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த வழக்கில், எ.வ.வேலுவை தேடப்படும் நபராக அறிவித்து, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கையும், ‘லுக் அவுட்’ நோட்டீஸையும் ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ‘லுக் அவுட்’ நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள முறைகேடு வழக்கு, ‘லுக் அவுட்’ நோட்டீஸை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது ஊழல் தடுப்புத் துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா். அதற்கு எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ஏற்கெனவே உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரா் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் முன்பாக ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளாா். எனவே, லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஊழல் தடுப்புத்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை ஆக.14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். மேலும், இந்த வழக்கில் எ.வ.வேலுவுக்கு அழைப்பாணை வழங்கி விசாரணையை தொடரலாம் என அனுமதி வழங்கிய நீதிபதி, எ.வ.வேலு மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஆக.14-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

அதேபோல், எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள ‘லுக் அவுட்’ நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, ஒருவேளை எ.வ.வேலு வெளிநாடு செல்வதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முன்அனுமதி பெற்று செல்லலாம் என உத்தரவிட்டாா்.

இதனிடையே, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் எ.வ.வேலு மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அறப்போா் இயக்கம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இடையீட்டு மனுவுக்கு எ.வ.வேலு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.