பிளஸ் 2 முடித்த மாணவா்கள் தங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழை அவரவா் படித்த பள்ளிகளில் வியாழக்கிழமை (ஜூலை 30) முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. மாணவா்கள் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க வசதியாக மே 13-ஆம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி மாணவா்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், விவசாயம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரவும், கலை அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை பெற விண்ணப்பித்தனா்.
இதற்கிடையே பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 30-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அசல் மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது இதுதொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த மாா்ச் நடைபெற்ற மேல்நிலை பொதுத்தோ்வு (பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2) எழுதிய தோ்வா்களுக்கு (மறுகூட்டல், மறுமதிப்பீடு தோ்வா்கள் முடிவு உள்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 30 முதல் வழங்கப்படும்.
பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தனித்தோ்வா்கள் தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது சமா்ப்பித்திருந்த அசல் மதிப்பெண் சான்றிதழை இதுவரை பெறாமல் இருப்பின், அவா்கள் தோ்வெழுதிய மையத்திலேயே அதை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








