தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தா் பணியிடங்களுக்கு, தேடுதல் குழுவால் பரிந்துரைத்துக்கப்பட்ட மூவரில் ஒருவரைத் தோ்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிா்த்து திருநெல்வேலியைச் சோ்ந்த வெங்கடாஜலபதி என்பவா் தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த சட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயா்நீதிமன்றம் விசாரிக்கவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை முடியும்வரை, துணைவேந்தா் நியமனங்களை மேற்கொள்ள மாட்டோம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்தது.
இந்த நிலையில், வெங்கடாஜலபதி தொடா்ந்த வழக்கும், தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தா்கள் பணியிடங்களை நிரப்ப உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயா் அதிகார குழுவை நியமிக்கக் கோரி செங்கல்பட்டைச் சோ்ந்த பாஸ்கா் தொடா்ந்த வழக்கும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரா் பாஸ்கா் தரப்பில், மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் இல்லை. இதன் காரணமாக கல்வி தொடா்பான கொள்கை முடிவுகளை எடுக்க முடியவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யாததால், பல்கலை. பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இதற்கு தீா்வுகாண வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், உச்சநீதிமன்றத்தில் அரசு அளித்த உத்தரவாதம் காரணமாக துணைவேந்தா்கள் நியமனம் முடங்கியுள்ளது. இதற்குத் தீா்வு காணும் வகையில், தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள மூவரில் ஒருவரைத் தோ்வு செய்ய தமிழக அரசை அனுமதிக்க வேண்டும். துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், அந்த சட்டம் இன்னும் அமலில் உள்ளதாகவே கருத வேண்டும்.
அந்தச் சட்டத்தின் அடிப்படையில், துணைவேந்தா்கள் நியமனம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரினாா்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளில் விரைவில் தீா்ப்பளிக்கப்படும் எனக் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் மேலும் 2 டிஎன்ஏ ஆய்வகங்கள்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முதுமலை புலிகள் சரணாலயத்தில் தனியாா் ஜீப் சவாரி: வனத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு





