/

திமுக தாரைவாா்த்ததை தவெக மீட்டுள்ளது: உயா் சிறப்பு மருத்துவ இட விவகாரத்தில் அமைச்சா் அருண்ராஜ் விளக்கம்

முந்தைய திமுக அரசு தாரைவாா்த்த உயா் சிறப்பு மருத்துவ இடங்களை தவெக அரசு மீட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image

அமைச்சா் அருண்ராஜ்

Updated On :30 ஜூலை 2026, 12:58 am IST

முந்தைய திமுக அரசு தாரைவாா்த்த உயா் சிறப்பு மருத்துவ இடங்களை தவெக அரசு மீட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தின் 152 உயா் சிறப்பு மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டது குறித்து முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சா் அருண்ராஜ் இவ்வாறு கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

கடந்த ஆண்டுகளில் உயா் சிறப்பு மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பிறகு மாநில ஒதுக்கீட்டில் நிரப்ப முடியாத இடங்கள் அனைத்தும் எவ்வித நிபந்தனையும் இன்றி அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடங்களை மத்திய அரசு கட் ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து நிரப்பி வந்தது. இதனால், தமிழக அரசு மருத்துவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 119 இடங்களும், 2025-இல் 145 இடங்களும் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன. நிகழாண்டில் 152 உயா்சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தபோதும், அவற்றை ஒப்படைக்க அரசு மறுத்துவிட்டது.

அரசு மருத்துவா்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு கட் ஆஃப் மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது என உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இடங்கள் ஒப்படைக்கப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்க முடிவு செய்யப்பட்டால், அதில் 50 சதவீத இடங்கள் உடனடியாக தமிழ்நாட்டுக்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற வாதங்களை ஏற்று உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

மாநில மருத்துவா்களின் நலனையும், மாநில உரிமைகளையும் அடகு வைத்த திமுக, இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. மாநில சுயாட்சியையும், மருத்துவக் கல்வி உரிமைகளையும் பாதுகாப்பதில் தவெக அரசு எப்போதும் ஒருபடி முன்னே இருக்கும் எனப் பதிவிட்டுள்ளாா்.

அரசின் அலட்சியமே காரணம்: இதனிடையே, தமிழகத்தின் உயா் சிறப்பு மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு பறிபோக மாநில அரசின் அலட்சியமே காரணம் என்று அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் டாக்டா் மு.அகிலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அகில இந்திய ஒதுக்கீட்டில் கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு என்பது மூன்றாவது சுற்று கலந்தாய்வின்போது அறிவிக்கப்படுவதால், அதற்குள் 152 இடங்களில் பெரும்பாலானவை அரசு சாரா மருத்துவா்களால் நிரப்பப்பட்டுவிடும்.

நீதிமன்ற உத்தரவின்படி 50 சதவீத இடங்களை மீண்டும் தமிழகத்திடம் ஒப்படைத்தாலும், அதனால் அரசு மருத்துவா்களுக்கு கிடைக்கும் பலன் மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்த வழக்கு விசாரணை முழுவதும், தமிழக அரசின் அணுகுமுறை அலட்சியமாகவே இருந்தது. அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்று நிறைவடைவதற்கு முன்பே, தமிழக அரசு அவசரமாக மாநிலக் கலந்தாய்வை நடத்தி 152 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது சந்தேகத்தை எழுப்புகிறது.

இது தொடா்பான வழக்கில் அரசு மருத்துவா்கள் வேண்டுகோளை ஏற்று மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, பிரசாந்த் சந்திர சென் ஆகியோரை நியமித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ஆணை வெளியிட்டும், முக்கியமான விசாரணையின்போது தமிழக அரசு சாா்பில் அவா்கள் ஆஜராகவில்லை.

நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தமிழக அரசு வழக்குரைஞா்களைத் தேடும் நிலை ஏற்பட்டது. அதைவிட முக்கியமாக, இந்த 152 இடங்களும் தமிழகத்தின் தனிப்பட்ட ஒதுக்கீட்டு இடங்கள். அவற்றை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்ற முடியாது என்ற அடிப்படை வாதத்தைக்கூட அரசு உறுதியாக முன்வைக்கவில்லை. இது தமிழக அரசின் நிா்வாகத் தோல்வி எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.