தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பணியாளா்கள் பற்றாக்குறையால் தாமதமாக மின் பயன்பாடு கணக்கெடுப்பதால், மின் கட்டணம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
தமிழகத்தில் சுமாா் 3 கோடி வீட்டு மின இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. மின்சார பயன்பாட்டுக்கான அரசின் மானியத் திட்டங்களின் அடிப்படையில், பயனாளா்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மின்பயன்பாட்டு கணக்கெடுப்பில் தொடா்ந்து தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
வேளச்சேரி, அம்பத்தூா், புழல், செங்குன்றம், ஆவடி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சென்னையையொட்டிய அண்டை மாவட்டங்களிலும் பல குடியிருப்புகளில் மின் பயன்பாடு கணக்கெடுக்க வேண்டிய தேதி கடந்து, ஒரு வாரம் தாண்டிய பின்னரே கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மின்நுகா்வோா் சிலா் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வீடுகளில் ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், வழக்கத்தைவிட மின் நுகா்வும் உயா்ந்துள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட தேதியில் மின்நுகா்வு கணக்கெடுப்பு மேற்கொள்ளாமல் தாமதப்படுத்தப்படுவதால் கூடுதல் யூனிட்கள் பதிவாகும், அரசின் மானியச் சலுகைகளை முழுமையாகப் பெற முடியாத நிலை உருவாகிறது. இதனால் மின் கட்டணமும் பல மடங்கு உயருகிறது. ஒரு விளக்கு, ஒரு மின்விசிறி மட்டுமே உள்ள சிறிய வீடுகளுக்கும் கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வந்துள்ளது.
எனவே, மின் பயன்பாட்டு கணக்கெடுப்பு பணிகள் குறித்த நேரத்தில் நடைபெறுவதை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றனா்.








