/

தலைக்கவசம் அணியாமல் பலியானோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!

தலைக்கவசம் அணியாததால் பலியானவர்களின் எண்ணிக்கை பற்றி...

News image

தலைக்கவசம் அணியாமல் பலியானவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம். - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 1:40 pm IST

தலைக்கவசம் அணியாமல் பலியானவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதும், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவதும் போக்குவரத்து விதிகளின்படி கட்டாயமாக உள்ளன.

இதனை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவலர்களால், தினசரி அபராதங்கள் விதிக்கப்பட்டும் அவர்கள் தண்டிக்கப்பட்டும் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், காவல்துறையினர் அவ்வப்போது தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும், நாளுக்குநாள் தலைக்கவசம், சீட்பெல்ட் அணியாமல் ஏற்படும் விபத்துகள் குறையவில்லை. இது குறித்து, 2024 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரத்தை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சாலை விபத்துகளில் உயிரிழந்த 81,780 இருசக்கர வாகன ஓட்டிகளில் 40%-க்கும் அதிகமானோர், நல்ல தரமான தலைக்கவசங்களை அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கக் கூடும். அதே வேளையில், கார்களில் பயணித்து உயிரிழந்த 21,988 பேர்களில் பெரும்பாலானோர் சீட் பெல்ட் அணியாதவர்கள் ஆவர்.

இதில் தலைக்கவசம் அணியாததால் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 7,744 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் 5,946 இறப்புகளும், மத்தியப் பிரதேசத்தில் 5,543 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

சீட் பெல்ட் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 2,816 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 1,929 ஆகவும் மகாராஷ்டிரத்தில் 1,427 ஆகவும் இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Tamil Nadu ranks first in the number of fatalities involving people not wearing helmets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.