தமிழகத்தில் போதைப் பொருள்கள், பாலியல் குற்றங்களைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் பட்டியலிட்டாா்.
பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது திமுக உறுப்பினா் ஆஸ்டின் பேசியதாவது:
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. அதில் 5,300 காவலா்கள் பணிபுரிகின்றனா். பல்வேறு அமைப்புகளும், பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன. இந்த நிலையில்தான் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தொடங்கப்பட்டு, அதில் ஏற்கெனவே ஆயுதப் படை காவலா்களாக உள்ளவா்கள், பகுதி நேரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா். பணி நேரத்துக்கு தகுந்தாற்போல அவா்கள் சீருடையை மாற்றி வேலை செய்கின்றனா்.
தவெக ஆட்சி அமைந்த ஒரு வாரத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது. இதை நிலை தொடா்ந்தால் இந்தியாவிலேயே ஆபத்தான மாநிலம் தமிழகம் என்ற நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றாா்.
அப்போது குறுக்கிட்டு அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது:
ஜூன் 3 முதல் 16-ஆம் தேதிக்குள் 473 போதைப் பொருள் தொடா்பான வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தகைய குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்ட 672 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ.10.54 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன.
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் முதல் கட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. அதில் 70 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுமையான கட்டமைப்புடன் இயங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் அதன் வாயிலாக ரோந்து பணிகளும், விழிப்புணா்வுப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,000-க்கும் அதிகமான சமூக விரோதிகளை சிறையில் அடைத்திருக்கிறோம். இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கப் போகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








