எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை, கண்காணிப்பு அதிகாரிகளை அறிவித்தது தமிழக அரசு

எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் விசாரணை மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளை அறிவித்தது தமிழக அரசு

TVK MLA from Kallakurichi

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் - கோப்புப் படம்

Updated On :

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திருப்பூர் எஸ்.பி., சிருஷ்டி சிங் விசாரிப்பார் என்றும், நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி இந்த விசாரணைய கண்காணிப்பார் என்றும், தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த அதிமுக வழக்குரைஞர் ஆர்.திரிசூலி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிட வேண்டும், டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும் என, மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் உரிய தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவரின் கருத்தைக் கேட்டு, அதுதொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறி, முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கை மற்றும் முதல் தகவல் அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி, இந்த முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கமாட்டீர்களே? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பெண்களுக்கு எதிரான ஆபாசமான பதிவுகளை நீக்க வேண்டும் என ஏற்கெனவே வேறொரு வழக்கில் உத்தரவிட்டதைக் குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான பதிவுகளை நீக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தலைமைச் செயலர் முதல் தூய்மைப் பணியாளர் வரை யாராக இருந்தாலும் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான புகார் குறித்து விசாரிக்க மாநில அளவில் குழுக்கள் எதுவும் இல்லை என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி யார் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு காவல்துறை தரப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி, என பதிலளிக்கப்பட்டது. அப்போது பெண் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்குரைஞர், இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது நீதிபதி, வழக்கில் பெண், எதிர்மனுதாரரே இல்லை, அவரது தரப்பில் வழக்குரைஞர் ஆஜராகி இருக்கிறார், எம்எல்ஏ தரப்பு வழக்குரைஞர் எங்கே? எனக் கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த விவகாரத்தில் யாரையாவது காப்பாற்ற முயற்சித்து அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என தெரிவித்தார்.

இந்த வழக்கை மாவட்ட எஸ்பி-க்கு பதிலாக ஐஜி அந்தஸ்து கொண்ட அதிகாரி கண்காணிக்க வேண்டும் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை மாதம் எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தால், பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் உள்விசாணைக் குழு எதுவும் அமைக்கப் போகிறீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர், பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக் குறித்த விவரங்களை வெளியிடக்கூடாது என செய்தி ஊடகங்களுக்கு தடை விதித்த நீதிபதி, சமூக ஊடகங்களில் இதுதொடர்பான பதிவுகள் உடனடியாக நீக்கப்படுவதை சைபர் கிரைம் போலீஸார் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வரை, இந்த வழக்கு தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிடக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், காவல்துறையினர் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர், அரசியல் சாசன உயர் பதவியை வகித்து வருவதால், இந்த வழக்கின் விசாரணையை ஐஜி அந்தஸ்து அதிகாரி ஒருவர் கண்காணிக்க வேண்டும் எனவும், வழக்கில் டிச.22-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அதிமுக வழக்குரைஞர் திரிசூலி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவ.27-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

முன்னதாக, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திருப்பூர் எஸ்.பி., சிருஷ்டி சிங் விசாரிப்பார் என்றும், நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி இந்த விசாரணைய கண்காணிப்பார் என்றும், தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.