
தாராபுரத்தில் அதிமுக பிரசாரம் நடத்த அனுமதி மறுப்பு! முதல்வர்தான் காரணமா?
தாராபுரத்தில் அதிமுக பிரசாரம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக இன்பதுரை எம்.பி. குற்றஞ்சாட்டியது குறித்து...
இன்பதுரை எம்.பி. | முதல்வர் விஜய் - கோப்புப் படம்
தாராபுரத்தில் முதல்வர் பிரசாரத்தைக் காரணம் காட்டி, அதிமுக பிரசாரம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்பதுரை எம்.பி. பேசியதாவது, "தாராபுரத்தில் அதிமுக பிரசாரம் நடத்த ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்த 2 இடங்களில் பாதுகாப்பு அளிக்க முடியாது எனக் கூறி, அதிமுகவின் பிரசாரங்களை காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர். இருப்பினும், பிரசாரத்துக்குக் காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினோம்.
அனுமதி பெறப்பட்ட சூரியநல்லூர், நொச்சிப்பாளையம் ஆகிய இரு இடங்களில் கடைசி நேரத்தில் அதிமுகவின் பிரசாரத்தைக் காவல்துறையினர் ரத்து செய்தனர்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலுமே தவெக வேட்பாளர்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், அவர்களுக்குக் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர். ஏனெனில், பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல்துறையின் கடமை.
ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை, அதிமுக பிரசாரத்துக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறுகிறது என்றால், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா? தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்ததா என்ற கேள்வி எழுகிறது.
தாராபுரத்தில் அக். 4-ல் தேர்தல் பணிமனையில் இருந்து துர்க்கையம்மன் கோயில் வரையில் பிரசாரம் நடத்த அனுமதி கோரியிருந்தோம். அதற்கான விண்ணப்பத்தை இன்று காலையில் நிராகரித்துள்ளார்கள். முதல்வர் விஜய்யின் பிரசாரமும் அதே நாளில் இருப்பதால், அனுமதி வழங்க முடியாது என காரணம் கூறுகின்றனர்.
முதல்வர் என்பதற்காக அதிக பாதுகாப்பு வேண்டுமானால் கொடுக்கலாம்; அதற்காக மற்ற கட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கக் கூடாது.
தாராபுரத்தில் அதிமுகவினர் யாரெல்லாம் சிறப்பாகச் செயல்படுகிறாரோ அவர்கள் மீது யாரையேனும் பொய்ப் புகார் கொடுக்க வைத்து, அந்தப் புகாரின் மேல் எஃப்ஐஆர் பதிவு செய்கின்றனர். தொடர்ந்து, புகாரின் அடிப்படையில் அதிமுகவினர் மூவரைக் கைது செய்து, அவர்களுக்கு பிணை வழங்க விடாமல், மாநில அரசே அதனை எதிர்க்கிறது. இங்கிருக்கும் அமைச்சர்களைக் கண்டு தேர்தல் அதிகாரிகள் பயப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.
Summary
Permission denied for AIADMK campaign in Dharapuram, says Inbadurai MP
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






