
தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை
தொடர் வார விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை என போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பது பற்றி...
ஆம்னி பேருந்துகள் - பிரதிப் படம்
தொடர் வார விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அக்டோபர் 21 தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் சுமார் 5400 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 1000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் இயக்கப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து, நேற்றைய தினத்திலிருந்து, போக்குவரத்துத் துறை அமைச்சரின் உத்தரவின் படியும், போக்குவரத்து ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் முன்னோட்டமாக அக். 1 மாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் கோவை, காந்திபுரம் பகுதிகளில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்தார். அதன்படி, நேற்று தமிழ்நாடு முழுவதும் 2,247 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 664 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தீவிர தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்க கட்டணம் ரூ.11,75,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.4,32,670/- வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.41,15,116/- வசூலிக்கப்பட்டது. அபராதமாக ரூ.3,32,000/- வசூலிக்கப்பட்டது.
இதன் மூலம், நேற்றைய தினம் மட்டும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.44,47,116/- வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் வசூலிக்கப்பட்ட மற்றும் நிர்ணயிக்கப்ட்ட வரி, இணக்க கட்டணம் மொத்தம் ரூ.60,54,786/- ஆகும். மேற்கண்ட தணிக்கையின் போது, அக். 1 மாலை முதல் இன்று அதிகாலை வரை, அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.8,450/- பயணிகளுக்கு திரும்பப் பெற்று வழங்கப்பட்டது. மேலும், வரி செலுத்தாத மற்றும் தகுதிச் சான்று இல்லாத 8 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில் அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்தச் சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக அக்டோபர் 21ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். எதிர்வரும் நாட்களில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் பட்சத்தில், அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 6151
கைப்பேசி எண் : 9384808333.
புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
"The Directorate of Transport and Road Safety has announced that intensive vehicle checks will be conducted until October 21 to prevent overcharging on omnibuses in view of the long weekend holidays."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் - செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை: போக்குவரத்துத் துறை

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க செப்.16 வரை சிறப்பு தணிக்கை; புகார் எண்கள் அறிவிப்பு




