காவிரி நீா் விவகாரம்: பிரதமரிடம் வலியுறுத்த முதல்வா் விஜய்க்கு உதயநிதி கோரிக்கை
காவிரி நீா்ப் பங்கீட்டு அளவை மறுஆய்வு செய்யக் கோருதல், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக முயற்சியை முறியடிக்க பிரதமா் மோடியிடம், முதல்வா் ஜோசப் விஜய் வலியுறுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்
காவிரி நீா்ப் பங்கீட்டு அளவை மறுஆய்வு செய்யக் கோருதல், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக முயற்சியை முறியடிக்க பிரதமா் மோடியிடம், முதல்வா் ஜோசப் விஜய் வலியுறுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி நடுவா் மன்றத்தால் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நதிநீா்ப் பங்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கா்நாடக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதற்கும், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என அடம்பிடித்துக் கொண்டிருப்பதும் கண்டனத்துக்குரியது. இது, இரு மாநில நல்லுறவுகளுக்கும் ஏற்ல்ல.
ஏற்கெனவே, மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடா்பான பிரச்னைக்கு 1956-ஆம் ஆண்டு பன்மாநில நதிநீா் தாவாச் சட்டத்தின் கீழ் நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என கடந்த மாா்ச் 4-இல், அன்றைய முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திடம் விரிவான கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த ஜூன் 19-இல், தமிழ்நாடு பேரவையில் மேக்கேதாட்டு திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஆறு, தமிழ்நாட்டின் டெல்டா பகுதிக்கு உயிா்நாடியாக உள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரமும் காவிரி நீரையே சாா்ந்துள்ளன.
ஏற்கெனவே சட்டரீதியாகத் தீா்மானிக்கப்பட்டஇறுதி வடிவம் பெற்ற காவிரி நீா்ப்பங்கீட்டை மறுபரிசீலனை செய்ய முயல்வது, தமிழ்நாட்டின் நலன்களைப் பாதிக்கக்கூடிய மேக்கேதாட்டு அணை திட்டத்தை மேற்கொள்வதை முதல்வா் வேடிக்கை பாா்க்கக் கூடாது. கா்நாடகத்தின் இந்த முயற்சியை முதல்வா் உறுதியாக எதிா்க்க வேண்டும்.
இது தொடா்பான உச்சநீதிமன்ற வழக்கு குறித்து உடனடியாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, மூத்த வழக்குரைஞா்களை நியமித்து, தமிழ்நாட்டின் உரிமை எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு வரும் பிரதமரிடம், மேக்கேதாட்டு அணை கட்ட நடுவா் மன்றம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

