அரிசி, பருப்பு, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என மு.வீரபாண்டியன் வலியுறுத்தியிருப்பது குறித்து...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்
சென்னை: நாடு முழுவதும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையையும் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் கடுமையாக உயர்த்துள்ளன. பொன்னி உள்ளிட்ட சில அரிசி ரகங்களின் விலை 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் சில உயர்தர அரிசி ரகங்கள் கிலோ ரூ.90 வரை விற்பனையாகின்றன. இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.48-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்போது ரூ. 70 வரை விலை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலப்பு என்ற மத்திய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம் ஆகும். தற்போது தீபாவளி போன்ற விழா காலங்கள் நெருங்கி வரும் காலத்தில் சர்க்கரை தேவை அதிகரிக்கும். இந்த நிலையில் அதன் விலை ஏற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். சர்க்கரை விலை உயர்வால் ஹோட்டல்களில் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ விலை ரூ. 15 வரை உயர்ந்தது. காபி விலை ரூ 20 வரை உயர்ந்தது. தற்போது அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் பதுக்கல்கள், ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களால் இந்த விலையேற்றம் நடந்துள்ளது.
பொன்னி அரிசி ரூ. 90-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இட்லி அரிசி ரூ.35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பருப்பு வகைகளும் விலை உயர்ந்துள்ளன. உளுத்தம் பருப்பு கிலோ ரூ.120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.80 லிருந்து 100 ஆகவும், தனியா ரூ.160 லிருந்து 250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசும் - மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Governments must take action to curb the rise in prices of rice and sugar: Communist Party of India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

