கனமழை எச்சரிக்கை: 17 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!
17 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டது தொடர்பாக...

மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் விஜய் ஆலோசனை. - படம்: TNDIPR
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து 17 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (அக். 22) சென்னை, எழிலகத்திலுள்ள வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகைதந்து, தற்போதைய வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக சென்னையைத் தவிர இதர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் கலந்துரையாடி, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.
மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று (அக். 22) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல் நினோ (El Nino) தொடர்பான முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை அலுவலர்களான மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் செயல்பாடுகள்
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், மாநில அவசரகால செயல்பாட்டு மையமானது மழையளவு மற்றும் வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் அடிப்படையில், மாவட்ட நிர்வாகங்களுக்கும், பொதுமக்களுக்கும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
Summary
With heavy rain warnings issued for 17 districts in Tamil Nadu, Chief Minister Vijay held a meeting with 17 district collectors from the State Emergency Operations Centre in Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

