
ரூ. 2 கோடியில் அம்பத்தூர் பால்பண்ணை மேம்படுத்தப்படும்: பால்வளத் துறை அறிவிப்புகள்!
பால்வளத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து...

பால்பண்ணை - படம்: எக்ஸ்
சட்டப்பேரவையில் பால் வளத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதிலளித்த அமைச்சர் சி. விஜயலட்சுமி புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
* ரூ. 10 கோடி மதிப்பீட்டில் ஜெர்சி கலப்பின கன்றுகளில் பால் உற்பத்தி திறன் மேம்படுத்த விஞ்ஞான பூர்வமான கன்று வளர்ப்பு மற்றும் இனவிருத்தி மேலாண்மை பணிகள் செயல்படுத்தப்படும்.
* ரூ. 10 கோடி மதிப்பீட்டில் 50,000 கறவை மாடுகளில் கன்று ஈனும் கால இடைவெளியை குறைக்கும் வகையில் இனவிருத்தி மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படும்.
* ரூ. 25.45 கோடி மதிப்பீட்டில் கிராமப்புறங்களில் கொள்முதல் செய்யப்படும் ஆரம்ப நிலை பாலின் தரத்தினை பாதுகாக்க 60 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் மற்றும் 40 தொகுப்பு குளிர்விப்பு நிலையங்களுக்கான கட்டடங்கள் நிறுவப்படும்.
* ரூ. 8.81 கோடி மதிப்பீட்டில் 100 தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்களை மேம்படுத்தும் விதமாக துணை உபகரணங்கள் நிறுவப்படும்.
* ரூ. 1.76 கோடி மதிப்பீட்டில் 15,000 பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்பு மற்றும் தூய பால் உற்பத்தி குறித்த பயிற்சி மற்றும் 700 ஒன்றிய பணியாளர்கள் மற்றும் 1000 சங்கப் பணியாளர்களுக்கு தர மேலாண்மை பயிற்சி வழங்கப்படும்.
* செயற்கைமுறை கருவூட்டல் பணிக்காக 100 புதிய செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
* ரூ. 31.5 லட்சம் மதிப்பீட்டில் ஈரோடு ஒன்றியத்தில் தர ஆய்வகம் மற்றும் ரூ. 11.25 லட்சம் மதிப்பீட்டில் திருவண்ணாமலை ஒன்றியத்தில் தர ஆய்வகத்திற்கு கூடுதல் உபகரணங்கள் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் பால்பண்ணை மேம்படுத்தப்படும்.
* பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதி திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விபத்து இழப்பீடு மற்றும் நிதியுதவிகள் உயர்த்தி வழங்கப்படும்.
* பால் கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, தடமறிதல் (Traceability) மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்தும் நோக்கில், பால் பண்ணைகளில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒருங்கிணைந்த தன்னியக்கமாக்கும் (End-to-End Automation) ரூ. 5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
Summary
Minister C. Vijayalakshmi announced new initiatives while replying to the debate on the demand for grants for the Dairy Development Department in the Legislative Assembly.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






