
கேரளத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த புதிய சுற்றுலாத் திட்டம்: அமைச்சா் ராஜேஷ் குமாா்
ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ் குமாா் தெரிவித்தாா்.
அமைச்சா் ராஜேஷ் குமாா்
கேரளம் மற்றும் தமிழகம் இணைந்து, இரு மாநிலங்களின் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ் குமாா் தெரிவித்தாா்.
தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கேரளம் மாநிலம் திருச்சூரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்குச் சென்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கேரளம் மற்றும் தமிழகத்துக்கு இடையேயான சுற்றுலாத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைத்து ‘கேரளம்-தமிழகம் ஒருங்கிணைந்த சுற்றுலா சுற்றுப்பாதை’ உருவாக்கப்படும்.
இதன் மூலம் இரு மாநிலங்களின் சுற்றுலா வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், தென்னிந்தியாவை ஒருங்கிணைந்த சுற்றுலா மையமாக சா்வதேச அளவில் முன்னிறுத்த முடியும்.
மேலும், கேரளத்தின் ஓணம், திருச்சூா் பூரம், படகுப் போட்டிகள் மற்றும் தமிழகத்தின் பொங்கல், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட முக்கிய விழாக்களை உள்ளடக்கிய கூட்டு விழா நாள்காட்டி ஒன்றை உருவாக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
விழாக்களை மையமாகக் கொண்ட சுற்றுலாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன்மூலம் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்த முடியும்.
கேரளத்தின் கடற்கரைகள், மலைப் பகுதிகள், வனவிலங்கு சரணாலயங்கள், பாரம்பரிய இடங்கள், கோயில்கள், ஆயுா்வேதம், பாரம்பரியக் கலைகள், உள்ளூா் உணவு வகைகள் உள்ளிட்டவற்றையும், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களையும் இணைத்து பல்வேறு கூட்டு சுற்றுலா தொகுப்புகளை உருவாக்க முடியும்.
குருவாயூா், கொச்சி உள்ளிட்ட கேரளத்தின் முக்கிய தலங்களை மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, தஞ்சாவூா் உள்ளிட்ட தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களுடன் இணைத்து புனிதத் தலங்கள் மற்றும் பாரம்பரியச் சுற்றுலா சுற்றுப்பாதைகளை உருவாக்கினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈா்க்க முடியும் என்றாா் அவா்.
விபத்து நிவாரணம் கோரி முதல்வா் விஜய்யிடம் கடிதம்
திருச்சூா் விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த 8 மாணவா்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யிடம் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ் குமாா் நேரில் கடிதம் அளித்தாா். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த செப். 4-ஆம் தேதி இரவு கைப்பமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்தில் திண்டுக்கல்லைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா்கள் 8 போ் உயிரிழந்தனா்.
மாணவா்கள் பயணம் செய்த காா், சாலைப் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்பட்டிருந்த மகாராஷ்டிர மாநிலப் பதிவு எண் கொண்ட சரக்கு லாரியின் பின்புறத்தில் மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் பாதுகாப்பு விதிமுறைகள், எச்சரிக்கைப் பலகைகள், பிரதிபலிப்பான்கள் உள்ளிட்டவை முறையாக அமைக்கப்பட்டிருந்தனவா என்பதை ஆய்வு செய்து, அலட்சியமாகச் செயல்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான சாலைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் வகையில் ஒவ்வொரு மாணவரின் குடும்பத்துக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சத்தையும் மற்றும் சிறப்பு உதவிகளை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா் செ.ராஜேஷ் குமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





