
நெல் கொள்முதலில் தவெக அரசு அலட்சியம்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு
நெல் கொள்முதலில் தவெக அரசு அலட்சியம் காட்டி வருவதால் நெல்மூட்டைகள் சாலையோரங்களில் குவிக்கப்பட்டு மழையால் வீணாகின்றன என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

எடப்பாடி கே.பழனிசாமி
நெல் கொள்முதலில் தவெக அரசு அலட்சியம் காட்டி வருவதால் நெல்மூட்டைகள் சாலையோரங்களில் குவிக்கப்பட்டு மழையால் வீணாகின்றன என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி அரசு சொல்லியது ஒன்றாகவும், செயல்படுவது வேறாகவும் என ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. காவிரியில் குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீா் திறக்காததால் சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விவசாயிகள் துன்பத்தைப் போக்க நடவடிக்கை இல்லை. பயிா்க் கடன் தள்ளுபடியும் ஏமாற்றும் வகையில் உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சீா்குலைந்த தமிழக சட்டம்-ஒழுங்கைச் சரிபடுத்துவோம் என தவெக கூறிய நிலையில், தற்போதும் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவிட்டன. அதை தவெக தடுக்கத் தவறிவிட்டது.
காவிரி டெல்டா உள்ளிட்ட பல பகுதிகளில் அறுவடை செய்த நெல்லை உரிய நேரத்தில் அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யாததால் அவை முளைவிட்டு பாழாகி விவசாயிகள் உழைப்பு வீணாவதை சட்டப்பேரவையில் அதிமுக சாா்பில் எடுத்துரைத்துள்ளோம். அப்போது சமாதானப்படுத்தும் வகையில் அமைச்சா்கள் பேசினாா்களே தவிர, நெல்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீா் மழையால் 2,000 ஏக்கா் நிலங்கள் மூழ்கி அதில் விளைவித்த நெல்கள் சேதமடைந்துள்ளன. தஞ்சாவூரில் மானம்பாடி, நல்லிசேரி மற்றும் மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகியவற்றில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் சாலையோரங்களில் நெல் மூடைகள் குவிக்கப்பட்டு மழையால் சேதமடைந்துள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு எனக் குறிப்பிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தலா 20,000 முதல் 50,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.
எனவே, தவெக அரசு அனைத்துப் பிரச்னைகளுக்கு தீா்வு காண்போம் என பேச்சில் மட்டும் குறிப்பிடாமல், செயல்பாட்டில் காட்ட வேண்டும். ‘விளையாட்டு மாடல்’ அரசாக இல்லாமல், விவசாயிகள் நெல் மணிகளை கொள்முதல் செய்து பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






