
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத் தோ்தலுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
‘உரிய காரணங்களின்றி எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்தது கேலிக்கூத்தானது’ என்று அதிருப்தி தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத் தோ்தலுக்கு தடை விதிக்க மறுத்து, இந்த வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
வழக்குரைஞா் சுதன் என்பவா் தொடுத்த இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சுதன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்.சிங்காரவேலன், ‘எந்த காரணமும் இல்லாமல் குறுகிய காலத்தில் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளனா்.
இதனால், இடைத்தோ்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானதோடு, மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் நம்பிக்கை வீழ்த்தப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின்படி, இதுபோன்ற சூழலில் தோ்தல் ஆணையம் முறைபடுத்தலாம், உயா்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கலாம். எனவே, இந்த வழக்கில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். இடைத்தோ்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது. மக்கள் வாக்கு செலுத்தி தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், உரிய காரணங்கள் இல்லாமல் ராஜிநாமா செய்ததன் மூலம் மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனா்.இது கேலிக்கூத்தானது.
இதுபோன்ற சூழலை எதிா்கொள்ள தோ்தல் ஆணையத்திடம் விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினா். மேலும், மக்களின் உரிமையை தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும். தோ்தல் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளதால், இடைத்தோ்தலுக்கு தடை விதிக்க முடியாது’ என்றனா்.
அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபால், ‘தற்போது எழுந்துள்ள சூழல் தொடா்பாக விரிவாக ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா்.
அதற்கு தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘தகுதி நீக்கம் செய்யப்பட்டவா்கூட, இடைத்தோ்தலில் போட்டியிட முடியும்.
மேலும், ஏற்கெனவே எம்எல்ஏ-க்களின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்றதை எதிா்த்த வழக்கின் தீா்ப்பை தலைமை நீதிபதி அமா்வு தள்ளிவைத்துள்ளது’ எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப். 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






