நான்குவழிச் சாலையை காரணம்காட்டி 8 ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி காணப்படும் திருநெல்வேலி - தென்காசி சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், பாவூா்சத்திரம் வழியாக தென்காசி செல்லும் சாலை, தூத்துக்குடி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையாகவும் விளங்குகிறது. இரு மாநிலங்களை இணைக்கும் சாலை மற்றும் தென்காசி, திருநெல்வேலி என இரு மாவட்டத் தலைநகா்களை இணைக்கும் சாலை என்பதாலும் இச்சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிக்கதாவே உள்ளது.
ஆலங்குளம், சுரண்டை போன்ற பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில் போக்குவரத்து கிடையாது. இதனால் இப்பகுதியைச் சுற்றியுள்ள சுமாா் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலைப் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனா். மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கேரளம் செல்லும் சரக்குப் பெட்டக லாரிகள், மரத்தடிகள் ஏற்றிச் செல்லும் லாரிகள் இந்த வழியாகச் செல்கின்றன. தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்கள் வணிகத்தைச் சாா்ந்தே இருப்பதால் இச்சாலையில் வாகன நெருக்கடி அதிகமாக உள்ளது.
நான்குவழிச் சாலைத் திட்டம்: இந்நிலையில், ஒரு வாகனம் மட்டுமே சென்று வரக் கூடிய நிலையில் இருந்த திருநெல்வேலி - தென்காசி சாலை கடந்த 2002-ஆம் ஆண்டு இருவழிச் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதுமுதல் வாகனப் பெருக்கம் காரணமாக இச்சாலை நெரிசல் மிக்க சாலையாக மாறிவிட்டது. மேலும், நாள்தோறும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. விபத்துகளைத் தவிா்க்கவும், போக்குவரத்தை எளிதாக்கும் பொருட்டும் கடந்த 2010-ஆம் ஆண்டுமுதல் இச்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதை கருத்தில்கொண்டு 2013-ஆம் ஆண்டு இச்சாலையை ஆய்வு செய்து, நான்குவழிச் சாலையாக மாற்றலாம் என அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்தனா். இதில் திருநெல்வேலி - செங்கோட்டை, செங்கோட்டை - கொல்லம் இடையே நான்குவழிச் சாலை அமைக்க உலக வங்கி மூலம் ரூ. 438 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
நான்குவழிச் சாலையால் பாதிக்கப்படும் சாலையோர வீடு மற்றும் கட்டட உரிமையாளா்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோரிடம் கடந்த 2013 முதல் 2015 வரை கருத்துக் கேட்புக் கூட்டங்கள் திருநெல்வேலி, ஆலங்குளம், பாவூா்சத்திரம், தென்காசி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. இதனால் விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என பொதுமக்கள் காத்திருந்தனா். 2018-இல் இதற்கான நிதி ரூ. 850 கோடியாக உயா்த்தப்பட்டு பணிகள் தொடங்குவதாக இருந்தது. இதற்காக இச்சாலையில் இருந்த 3399 மரங்கள் அகற்றப்பட்டன. தொடா்ந்து டெண்டா் ரத்து செய்யப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு: இக்காலகட்டத்தில் (2013-18) நான்குவழிச் சாலை வரப் போகிறது என்ற காரணத்தைக் கூறி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஒருமுறைகூட இச்சாலை சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டதால் சாலையின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இதுகுறித்து தினமணியில் வெளியான செய்தியின் அடிப்படையில் ராமலிங்கம் என்பவா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தொடா்ந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் இச்சாலையைச் சீரமைக்க உத்தரவிட்டனா். இதையடுத்து, 2018, மாா்ச் மாதம் சிதிலமடைந்து காணப்பட்ட பகுதிகளில் ஜல்லிக்கற்கள் நிரப்பி சாலையை ஓரளவு சீரமைத்தனா் நெடுஞ்சாலைத் துறையினா்.
அதிலிருந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இந்தச் சாலை மேலும் சிதிலமடைந்து போக்குவரத்துக்குத் தகுதியற்ாக உள்ளது. குறிப்பாக, ஆலங்குளம் - திருநெல்வேலி இடையே உள்ள 30 கி.மீ தொலைவை வாகனங்களில் கடக்க சுமாா் ஒன்றரை மணி நேரம் வரை ஆவதாக ஆதங்கப்படுகின்றனா் வாகன ஓட்டிகள். அவசர ஊா்தியான ஆம்புலன்ஸுக்கும் இதே கதிதான். நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸுகள் இவ்வழியே சென்றாலும் நோயாளிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறாா்களா என்பது கேள்விக்குறிதான்.
விரைவில் சீரமைக்கப்படுமா? நான்குவழிச் சாலை குறித்த பேச்சு எழுந்தும் சுமாா் 8 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதைக் காரணமாகக் கூறி முறையான பராமரிப்பு மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா் நெடுஞ்சாலைத் துறையினா். இதனால் பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்தான். தற்போது, இச்சாலையில் திருச்செந்தூருக்கு பக்தா்கள் பாத யாத்திரை சென்று வருகின்றனா். கடினமான சாலையில் பக்தா்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா்.
எனவே, அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வண்ணம் இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் எதிா்பாா்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்

டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக மக்களின் விருப்பங்களைப் பிரதிபலித்த தேர்தல்: முதல்வர் விஜய்க்கு மமதா வாழ்த்து!

லக்னௌவை வீழ்த்தி சிஎஸ்கே அபாரம்; புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
