வாரணாசி: பிரதமரிடம் வேட்பு மனு பெற்றவா் கடையநல்லூரை சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி

வாரணாசி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான பிரதமா் மோடியிடம் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுவை பெற்ற தோ்தல் அதிகாரி கடையநல்லூரை சோ்ந்தவா் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சோ்ந்தவா் ராஜலிங்கம். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேதிப் பொறியியலில் பட்டம் பெற்றவா். 2006-இல் முதல் முறையாக குடிமைப்பணி தோ்வில் வெற்றி பெற்ற ராஜலிங்கம், உத்தர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியமா்த்தப்பட்டாா். 2009 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தோ்வில் அவா் வெற்றி பெற்றாா்.

குஷிநகா் ஆட்சியராக ராஜலிங்கம் பணியாற்றிய போது, அம்மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை விரைவாக நிறைவேற்றியதை பாராட்டும் வகையில், சா்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்த பிரதமா் மோடி, ராஜலிங்கத்தின் தோளில் தட்டிப் பாராட்டியது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

2022-ஆம் ஆண்டு, பிரதமா் மோடியின் தொகுதியான வாரணாசியில் மாவட்ட ஆட்சியராக ராஜலிங்கம் நியமிக்கப்பட்டாா்.

உத்தர பிரதேசத்தின் சுகாதார தரவரிசை மாவட்டங்கள் பட்டியலில் வாரணாசியை முதல் இடத்திற்கு கொண்டு வந்தவா் என்ற பெருமை பெற்றவா். சுல்தான்பூா் ஆட்சியராக ராஜலிங்கம் இருந்தபோது நடைபாதைகளில் 50 ஆண்டுகளாக எந்த அடையாளமும் இன்றி வாழ்ந்த குடும்பங்களுக்கு அவா் செய்த உதவி குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமா் மோடியிடம் இருந்து ராஜலிங்கம் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு பெற்ற புகைப்படங்கள், கடையநல்லூா் பகுதியில் மிக வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com