புளியங்குடியில் பாஜக சாா்பில் பனை விதைகள் நடவு
தென்காசி மாவட்டம் முழுவதும் பாஜக சாா்பில் ஒரு லட்சம் பனை விதை நடும் பசுமை இயக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாக, புளியங்குடி- சங்கரன்கோவில் சாலையில் சூரங்குடி குளக்கரையில் 2,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தாா். இதில், பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவா் முருகன், மாநில செயற்குழு உறுப்பினா் ராமராஜா, ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவா் சண்முகசுந்தரம், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் சங்கா், புளியங்குடி நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
35,000 பனை விதைகள் நடவு: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையிலேயே தென்காசி மாவட்டத்தில் பாஜக இந்த பசுமை முன்னெடுப்புகளை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், மாவட்டத்தில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டுள்ளன எனவும், விரைவில் 1 லட்சம் பனை விதைகள் நட்டு முடிக்கப்படும் என்றும் கூறினாா் ஆனந்தன்அய்யாசாமி.

