வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கணக்கீட்டு படிவங்களை நூறு சதவீதம் பதிவேற்றிய வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்டத்தில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் எஸ்ஐஆா் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களிடம் இருந்து திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளான கணக்கீட்டு படிவங்களை வாக்காளா்களுக்கு முழுமையாக வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை விடுதலின்றி திரும்பப் பெற்று, பெறப்பட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்து, தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பாகங்களில் பணிகளை முழுமையாக நிறைவு செய்த 40 வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், 40 வாக்குச் சாவடி நிலை அலுவலா்களை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினாா். கணக்கீட்டு படிவங்கள் கிடைக்கப் பெறாதவா்கள், படிவம் தொடா்பான சந்தேகங்களுக்கு 04633-1950 என்ற எண்ணில் வாக்காளா்கள் தொடா்புகொள்ளவும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

