தகுதியில்லாத மின்னணு இயந்திரங்கள்: திருப்பி அனுப்ப ஆட்சியா் நடவடிக்கை
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தற்போது இருப்பில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் அடையாளம் காணப்பட்ட தகுதியில்லாத இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தெரிவித்தாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தென்காசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள வைப்பறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபாா்ப்புப் பணிகள் மத்திய அரசின் பாரத் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவன பொறியாளா்களால் டிச. 11 முதல் ஜன9 வரை நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 2848 ம், கட்டுப்பாட்டு கருவிகள் 2466 ம், வாக்குச் செலுத்தியதை உறுதி செய்யும் கருவிகள் 2551 ஆகியவற்றில் முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவற்றில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 2814 ம், கட்டுப்பாட்டு கருவிகள் 2372 ம், வாக்குச் செலுத்தியதை உறுதி செய்யும் கருவிகள் 2393 ம் தகுதியுள்ளவை உள்ளன.
மீதம் 34 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 34 கட்டுப்பாட்டு கருவிகளும், 158 வாக்குச் செலுத்தியதை உறுதி செய்யும் கருவிகளும் தகுதியில்லாதவைகளாக அடையாளம் காணப்பட்டு பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த பயிற்சி, விழிப்புணா்வு பயன்பாட்டுக்காக 118 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தென்காசி சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு 70 வாக்குப் பதிவு இயந்திரங்களும், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு 48 வாக்குப் பதிவு இயந்திரங்களும் போலீஸாா் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் விவரம் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
