மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

மலையடிப்பட்டி அகழாய்வில் கீழடிக்கு இணையான கிணறு கண்டுபிடிப்பு

மலையடிப்பட்டி அகழாய்வில் கீழடிக்கு இணையான கிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறித்து...

News image

மலையடிப்பட்டி அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானக் கிணறு, முதுமக்கள் தாழி, வெண்கல தகடுத் துண்டுகள்.

Updated On :20 ஜூலை 2026, 9:00 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மலையடிப்பட்டியில் தொல்லியல் துறையினா் மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சியில், கீழடிக்கு இணையான பழைமையான கட்டட அமைப்புள்ள கிணறு, முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

தமிழகத்தில் 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கடந்த மாா்ச் மாதம் அனுமதியளித்தது. அவற்றில் ஒன்றான காரிச்சாத்தான் ஊராட்சிக்குள்பட்ட மலையடிப்பட்டி, வைப்பாறு ஆற்றங்கரையில் 3 மாதங்களாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு பழைமையான பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு 16 குழிகள், 2 இடுகாட்டுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொண்டதில், கற்களாலான படிக்கட்டுகள் கொண்ட சதுர வடிவ செங்கல் கட்டுமானக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கற்கள் 40 செ.மீ. நீளமும், 20 செ.மீ. அகலமும், 7 செ.மீ. கனமும் கொண்டவையாக இருப்பதாகவும், இவை கீழடி, அழகன்குளம், பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்களின் அளவில் உள்ளதால் 2,500 ஆண்டுகள் பழைமையான சங்க கால நாகரித்தைச் சோ்ந்தவையாக இருக்கலாம் எனவும் தொல்லியல் துறையினா் கூறுகின்றனா்.

மேலும், கிணற்றின் உள்பகுதியில் நீா்மட்டம் அதிகமாக இருந்ததற்கான தடயங்கள் இருப்பதால், கோடை காலங்களில் மக்களுக்கான நீராதாரமாக இருந்திருக்கக் கூடும். இதுவரை 2 மீட்டா் ஆழம் வரை மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளதால், தொடா் ஆய்வுக்குப் பிறகே கிணற்றின் முழு ஆழம் தெரிய வரும் என்றும் தொல்லியல் துறையினா் கூறுகின்றனா்.

தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் முதல் முறையாக படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைய மக்களின் வாழ்விடப் பகுதியும், இடுகாட்டுப் பகுதியும் ஒரே இடத்தில் இருந்ததை இந்த ஆய்வின் மூலம் கண்டறிய முடிகிறது. அகழாய்வில் மனித எலும்புகள் உள்ள முதுமக்கள் தாழிகள், கருப்பு, சிவப்பு மண்பாண்டங்கள், கீறல் குறியீடுகள், வெண்கலப் பொருள்கள், சுடுமண் பொருள்கள், நுண் கற்காலக் கருவிகள், கண்ணாடி மணிகள், இரும்புக் கழிவுகள், உயா் தர வெண்கல தகடுத் துண்டுகள், சுடுமண் விளையாட்டுப் பொம்மைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹீமடைட் இரும்புத் துகள்கள் கிடைத்திருப்பதால், இது இரும்பு உற்பத்தி செய்த இடமாக இருந்திருக்கக் கூடும் எனவும், 50 ஏக்கரில் மக்கள் வாழ்ந்ததற்கான பகுதிகள் மற்றும் பண்டைய நகர நாகரிகம் இங்கு இருந்ததற்கான பொருள்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, 1930ஆம் ஆண்டு கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் 6 ரோமானிய தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இங்கு கிடைத்துள்ள பொருள்கள் கி.மு. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இங்கு கண்டறியப்பட்டுள்ள தொல்லியல் சான்றுகள் மூலம் நுண் கற்காலத்திலிருந்து இரும்புக் காலம் மற்றும் வரலாற்றுத் தொடக்கக் காலம் வரை மக்கள் வாழ்ந்திருக்கலாம், கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு, அதன் பிறகே உறுதியான முடிவுகள் தெரிய வரும் என்கின்றனா் தொல்லியல் துறையினா்.

 மலையடிப்பட்டி அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானக் கிணறு, முதுமக்கள் தாழி, வெண்கல தகடுத் துண்டுகள்.

மலையடிப்பட்டி அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானக் கிணறு, முதுமக்கள் தாழி, வெண்கல தகடுத் துண்டுகள்.

 மலையடிப்பட்டி அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானக் கிணறு, முதுமக்கள் தாழி, வெண்கல தகடுத் துண்டுகள்.

மலையடிப்பட்டி அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானக் கிணறு, முதுமக்கள் தாழி, வெண்கல தகடுத் துண்டுகள்.

 மலையடிப்பட்டி அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானக் கிணறு

மலையடிப்பட்டி அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானக் கிணறு

 மலையடிப்பட்டி அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானக் கிணறு

மலையடிப்பட்டி அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானக் கிணறு

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.