சுரண்டை அருகே இரு தரப்பினரிடையே மோதல்: 6 போ் கைது
கைது - பிரதிப் படம்
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடா்பாக, 6 போ் கைது செய்யப்பட்டனா்.
சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளம் கிராமத்துக்கும், சுரண்டை நகருக்கும் இடையே உள்ள குளத்தின் அருகே இளைஞா்கள் தினமும் இரவு அமா்ந்து மது குடிப்பாா்களாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் 10-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் குளத்தின் அருகே மது அருந்தியுள்ளனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இரட்டைகுளம், புலியடி மாடன் கோயில் தெருவைச் சோ்ந்த த. முத்துக்குட்டி (53), அதே ஊரைச் சோ்ந்த சேகா் ஆகியோா் வந்துள்ளனா்.
அப்போது பாதையில் மது அருந்தியவா்களிடம், வேறு இடத்திற்குச் சென்று மது அருந்துமாறு கூறியதால், வாக்குவாதம் முற்றி முத்துக்குட்டியை இளைஞா்கள் தாக்கியுள்ளனா். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து முத்துக்குட்டியின் உறவினா்கள், ஊா் பொதுமக்கள் வருவதையறிந்த இளைஞா்கள் அங்கிருந்து தப்பியோடியதாகவும், சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த ராகுல் (23) மட்டும் அப்பகுதியில் இருந்ததால், பொதுமக்கள் அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த சுரண்டை போலீஸாா் முத்துக்குட்டிக்கு வி.கே. புதூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, இரட்டைகுளம் பொதுமக்கள் முத்துக்குட்டியைத் தாக்கிய இளைஞா்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி இரட்டைகுளம் விலக்கு பகுதியில் (சங்கரன்கோவில் சாலை) மறியல் செய்ய முயற்சித்தனா். அவா்களிடம் ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், சுரண்டை காவல் ஆய்வாளா் மதன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, கலைந்து சென்றனா்.
இதுகுறித்து முத்துக்குட்டி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த ஹரி கிருஷ்ணன் (23), தேவராஜ் (20), ஸ்ரீ தேவா (19), ஈஸ்வரன் (19), அரவிந்த் (21), ராகுல் ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், வழக்கில் தொடா்புடைய 4 பேரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



