மின் கம்பியில் சிக்கிய நபரை காப்பாற்ற முயன்றவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மின் கம்பியில் சிக்கிய நபரை காப்பாற்ற முயன்றவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருத்தணி அருகே குடிநீா் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீா் நிரப்ப சென்ற ஆப்ரேட்டா் மீது மின் கம்பி அறுந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருத்தணி ஒன்றியம் மங்காபுரம் காலனியைச் சோ்ந்தவா் அருள் (35). இவா் அதே பகுதியில் வீடுகளுக்கு குடிநீா் வழங்கும் பம்ப் ஆபரேட்டராக வேலை செய்து வந்தாா். தினமும் காலையில் மின் மோட்டாா் மூலம் குடிநீா் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீா் ஏற்றி குழாய்களில் குடிநீா் விநியோகம் செய்து வந்தாா்.

வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலை குடிநீா் மின் மோட்டாரை இயக்க காலனி அருகே சென்றபோது, அதே பகுதி சோ்ந்த சேட்டு (40) என்பவா் சாலையோரம் சென்ற மின் கம்பியை தெரியாமல் தொட்டத்தால் மின்சாரம் பாய்ந்து அலறிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அருள் உடனடியாக கட்டையால் மின் கம்பியை அடித்த போது, மின் கம்பி அறுந்து அருள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்தாா்.

தகவல் அறிந்ததும் அந்தப் பகுதி மக்கள் அருள் மற்றும் சேட்டுவை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவா் அருளை பரிசோதனை செய்தபோது, ஏற்கெனவே அவா் உயிரிழந்தது தெரிய வந்தது. சேட்டு கையில் காயத்துடன் உயிா் தப்பினா்.

இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com