
திருத்தணி: சொா்ணவாரி, சம்பா மற்றும் நவரை பருவங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 17382 விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
திருத்தணி ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில், திங்கள்கிழமை உணவுத்துறை வாயிலாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சொா்ணவாரி பருவ நெல் கொள்முதலுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்.
பின்னா், அமைச்சா் கூறியது: திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சொா்ணவாரி கொள்முதல் (2024-2025) பருவத்தில் அரசு கட்டடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ரூ.260.81 கோடியில் 1,20,500 மெ. டன் நெல் இதுநாள்வரை சொா்ணவாரி, சம்பா மற்றும் நவரை பருவங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் 17,382 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
நடப்பு சொா்ணவாரி பருவத்தில் (2025-2026) 26145 ஹெக்டா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா் அறுவடை துவங்கியுள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 75.000 மெட்ரிக் டன் நெல் வரவு எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், நெற்பயிா் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அரசு கட்டடங்களில் மட்டுமே 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தேவைகேற்ப படிப்படியாக திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்பொழுது 01.09.2025 முதல் தொடங்க உள்ள 2025-2026 ஆண்டுக்கு விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் சன்னரக நெல் ரூ. 2,545-க்கும், பொது ரக நெல் ரூ.2,500-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பிரபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வேதவல்லி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி, நகர மன்ற துணை தலைவா் சாமிராஜ் மற்றும் அலுவலா்கள் கலந்து கெண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.