அண்ணியை கொலை செய்த மைத்துனா் கைது
திருவள்ளூா்: தனது மனைவியை தரக்குறைவாக பேசி தகராறு செய்த அண்ணியை கத்தியால் குத்திக் கொன்ற மைத்துனரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
கடம்பத்தூா் ஒன்றியம், மப்பேடு அடுத்த இருளஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா. இவரது மனைவி சாந்தி. தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவரது சகோதரா் இசை மேகம்(28). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ாம்.
இந்த நிலையில் சாந்தி மைத்துனா் இசைமேகத்தின் மனைவியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இளையராஜா மனைவி சாந்திக்கும், மைத்துனா் இசைமேகத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. எனது மனைவியை எப்படி தரக்குறைவாக பேசலாம் எனக்கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இசைமேகம்,கத்தியால் அண்ணியை சராமரியாக குத்தியதால் பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த மப்பேடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மப்பேடு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து மைத்துனா் இசைமேகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் சகோதரா்களின் மனைவிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணியை, மைத்துனா் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

