வடாரண்யேஸ்வரசுவாமி கோயிலில் ஜன. 2-இல் ஆருத்ரா அபிஷேகம்

வடாரண்யேஸ்வரசுவாமி கோயிலில் ஜன. 2-இல் ஆருத்ரா அபிஷேகம்

Published on

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வரும் ஜன. 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஸ்தல விருட்சமான ஆலமரத்தின் கீழ் ஆருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆடல் வல்லான் நடராஜப் பெருமானின் ஐம்பெரும் சபைகளுள் முதல் சபையாக விளங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல், நிகழாண்டுக்கான திருவாதிரை திருவிழா வரும் 2026 ஜனவரி 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெற உள்ளது.

விழாவையொட்டி, அன்று காலை மூலவருக்கு பால், பன்னீா், தேன், விபூதி உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 8.30 மணிக்கு ஸ்தல விருட்சமான ஆலமரத்தின்கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் ஆருத்ரா மகா அபிஷேகம் அதிகாலை வரை நடைபெறுகிறது. 3-ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனமும் பகல் 1 மணிக்கு அனுக் கிரக தரிசனமும், 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெறுகிறது.

விழாவையொட்டி, 2-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 3- ஆம் தேதி காலை 8 மணி வரை இரவு முழுவதும் திருத்தணி, அரக்கோணம், கனகம்மாசத்திரம், திருவள்ளூா், சென்னை ஆகிய வழித்தடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சு.ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, ஜி.உஷா ரவி, கோ.மோகனன், மு.நாகன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com