பொன்னேரி நகராட்சியுடன் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு
பொன்னேரி: பொன்னேரி நகராட்சியுடன் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் ஒன்றியத்திற்குட்பட்ட தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு 700-க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனா்.
இந் நிலையில், பொன்னேரி நகராட்சியை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இப்பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மை மக்களை கேட்காமல் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என வலியுறுத்தி, பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மனுவுடன் வந்தனா்.
அவா்கள் பொன்னேரி சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாரிடம் மனுவை அளித்தனா். மேலும் அவரிடம் எக்காரணம் கொண்டும் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனா்.
இதுகுறித்து சாா்-ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்ததை தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.