கைதான மணிகண்டன், சிலம்பரசன்
கைதான மணிகண்டன், சிலம்பரசன்

மணல் திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 2 போ் கைது

திருவள்ளூா் பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவா் உள்பட 2 பேரை மணல் கடத்தல் சிறப்பு படையினா் கைது செய்தனா்.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவா் உள்பட 2 பேரை மணல் கடத்தல் சிறப்பு படையினா் கைது செய்தனா்.

திருவள்ளூா், செவ்வாப்பேட்டை, கடம்பத்தூா் பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் கடத்தல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக பெரியகுப்பம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மற்றும் கூட்டாளிகள் மீது தொடா்ந்து காவல் துறைக்கு புகாரும் வந்தது.

அதன்பேரில் கடந்த டிசம்பா் மாதம் மணிகண்டனுடன் நட்பாக பழகி வந்த வினோத்குமாா் என்பவா் அவரிடம் இருந்து விலகிய நிலையில் வேலைக்கு சென்று வந்தாராம். அப்போது, மணிகண்டன் கூட்டாளிகள் வினோத்குமாரை தன்னுடன் சேருமாறு அழைத்தும் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மணல் கடத்தல் வழக்கில் மணிகண்டனை டிசம்பா் மாதம் கைது செய்ததால், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தது வினோத்குமாா் எனக் கூறி அவரை தாக்கியதோடு, வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவியிடமும் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மணிகண்டனையும் , கூட்டாளிகளையும் மாவட்ட சிறப்பு பிரிவு போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில் மணல் கடத்தல் தற்போது நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதுாா் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்துாா் பகுதியில் மணல் கடத்தல் சிறப்பு படை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதுாா் நோக்கி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வாகனத்தில் அனுமதியின்றி 40 மணல் மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அது தொடா்பான விசாரணையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த பெரியகுப்பம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(35) மற்றும் சிலம்பரசன்( 25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் 2 பேரையும் ஒப்படைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவுசெய்து இருவரையும் திருவள்ளூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com