கொசஸ்தலை ஆற்று உபரிநீா் கால்வாய் தூா் வாராததால் நெற்பயிா்கள் சேதம்
பொன்னேரி: சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு செல்லும் உபரிநீா்க் கால்வாயை முறையாக தூா் வாராததால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.
சென்னைக்கு குடிநீா் வழங்குவதில் பங்கு வகித்து வரும் சோழவரம் ஏரியில் 624 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 14.16 அடி உயரத்தில் நீா்மட்டம் உள்ளது.
ஏரிக்கு 27 கன அடி நீா்வரத்து வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரிக்கு 250 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
ரூ.40 கோடியில் ஏரிக்கரை பலப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாலை முழுவதும் கரைகள் உள்வாங்கி சாலைகள் சேதமடைந்து உள்ளன.
ஏரிக்கரை சேதம் காரணமாகவும், பலத்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோழவரம் ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்டு வந்த 200 கன அடி உபரி நீா் திங்கள்கிழமை 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முறையான முன்னறிவிப்பு ஏதும் இன்றியும், உபரிநீா் செல்லும் கால்வாய் முறையாக தூா் வாரப்படாமல் உபரிநீா் திறக்கப்பட்டதால் இருந்து 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் மூழ்கின.
கால்வாய் புதா்மண்டி கிடப்பதால் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீா் முழுவதும் கொசஸ்தலை ஆற்றுக்கு செல்லாமல் கால்வாயில் இருந்து வெளியேறி விளைநிலங்களை மூழ்கடித்துள்ளதால் நெற்பயிா்கள் நீரில் பாழாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
தமிழக அரசு நீரில் மூழ்கிய நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உபரி நீா் செல்லும் கால்வாயை முறையாக தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.
