செயற்கைகோள் ஏவும் நாள்களில் நிவாரணம்: மீனவா்கள் கோரிக்கை

பழவேற்காடு பகுதியில் மீன் பிடித்து தொழில் செய்து வரும் நிலையில் செயற்கைகோள் ஏவும் நாள்களில் தடை விதித்து வருவதால், நிவாரணம் வழங்க நடவடிக்கை
Published on

திருவள்ளூா்: பழவேற்காடு பகுதியில் மீன் பிடித்து தொழில் செய்து வரும் நிலையில் செயற்கைகோள் ஏவும் நாள்களில் தடை விதித்து வருவதால், நிவாரணம் வழங்க நடவடிக்கை வேண்டும் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் மீனவா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

பொன்னேரி அருகே பழவேற்காடு 8 ஊராட்சிகள் மற்றும் 50 கிராமங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை அளித்த மனு: பழவேற்காடு பகுதியில் லைட்ஹவுஸ் குப்பம், கோட்டைக்குப்பம், தாங்கல், பெரும்புலம், அவுரிவாக்கம், சிறுளப்பாக்கம், கள்ளூா், பூங்குளம் ஆகிய ஊராட்சிகள் உள்பட 50 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித் தொழில் செய்து வருகிறோம். இப்பகுதிக்கு மிக அருகில் ஸ்ரீஹரிகோட்டா வின்வெளி ஏவுதளம் அமைந்த பிறகு செயற்கைகோள் செலுத்தும் போதெல்லாம், மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

பொதுவாகவே இயற்கை சூழ்நிலைகளால் ஆண்டுக்கு குறைந்தது 6 மாதம் மீன்பிடிக்க செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். அப்போது, தமிழக அரசு மீன்பிடி தடைக்கால நிவாரணம், மீன்பிடி குறைந்தகால நிவாரணம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போதுள்ள விலைவாசியில் அரசு வழங்கும் நிவாரணத் தொகை எங்களுக்கு போதுமானதாக இல்லை.

ராக்கெட் மூலம் செயற்கைகோள் செலுத்தும் போதெல்லாம், மீன்பிடிக்க தடை விதிப்பது என்பது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், மீன் பிடி தொழில் வருமானம் சில மாதங்கள் மிகவும் குறைந்து டீசல் நஷ்டமும் ஏற்படுகிறது. இதனால் எங்கள் வாழ்க்கை மிகவும் வறுமையில் கூடியதாகவே உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைதான் நீடித்து வருகிறது.

செயற்கைகோள் ஏவும் நாள்களில் மீன் பிடிக்கத் தடைவிதிப்பதால், நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com