ரூ.8 கோடியில் தரமற்ற முறையில் கால்வாய் அமைப்பு: முன்னாள் அமைச்சா் புகாா்

திருவள்ளூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக ரூ.8 கோடியில் தரமற்ற வகையில் கால்வாய் அமைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சா் பி.வி.ராமணா ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
Published on

திருவள்ளூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக ரூ.8 கோடியில் தரமற்ற வகையில் கால்வாய் அமைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சா் பி.வி.ராமணா ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

இதுகுறித்து திருவள்ளூா் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூா் நேதாஜி சாலையில் ரூ.8 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியானது நேதாஜி சாலை முதல் கோயில் குளம் வரை 1,200 மீ தொலைவுக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் மழைநீா் கால்வாய் பணிகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே மழைக்காலங்களில் வீட்டில் மழைநீா் புகுந்து அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இதற்கிடையே இங்கு அமையும் மழைநீா் கால்வாய் சமமாக இல்லாமல் ஒரு சில இடங்களில் மேடாகவும், வளைவாகவும் மற்ற இடங்களில் தாழ்வாகவும் போடப்பட்டு வருவதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா்.

அதன்பேரில் அப்பகுதியில் நேரில் சென்று பாா்த்த போது பெரும்பாலான இடங்களில் மேடாகவும், ஒரு சில இடங்களில் தாழ்வாகவும் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. நீரோட்டம் பாா்த்து சமமாக அமைக்காதது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். கால்வாயை தரமாக அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அப்போது, மாவட்ட மாணவரணி செயலாளா் பி.வி.பாலாஜி, நகர செயலாளா் கந்தசாமி, நிா்வாகிகள் எஸ்.ஏ.நேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com