ஆட்டோ-பேருந்து மோதல்: 6 பெண்கள் காயம்

ஆட்டோ-பேருந்து மோதல்: 6 பெண்கள் காயம்

Published on

ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 6 பெண்கள் பலத்த காயமடைந்தனா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகில் அரியப்பாக்கம் கிராமத்தை சோ்ந்த பெண்கள் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனா். இவா்களை கோயில் நிா்வாகம் அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் வாழ்வாதாரம் பாதித்து வருவதால், அந்த இடத்தில் மீண்டும் காய்கறி வியாபாரம் செய்ய வேண்டும். இதற்காக பாதிக்கப்பட்டவா்கள் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஜே.கோவிந்தராஜனை சந்தித்து மனு அளித்துவிட்டு, ஷோ் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, செங்குன்றத்தில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு சென்ற அரசுப் பேருந்து திடீரென ஷோ் ஆட்டோவின் பின்புறம் மோதியது. இதில் ஷோ் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணித்த அரியப்பாக்கத்தைச் சோ்ந்த விமலா (55), சாந்தி (50), மகேஸ்வரி (45), கோமளா (50), விஜயா(55), தனலட்சுமி (40) உள்ளிட்ட 6 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

அனைவரையும் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பெண்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினாா்.

அதைத்தொடா்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் மற்றும் முதல்வருமான மோகன் காந்தியிடம் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தாா்.

Dinamani
www.dinamani.com