ஊராட்சிகளில் கால்நடைகளின் தாகத்தை தீா்க்கும் நோக்கில் அமைக்கப்பட்ட குடிநீா் தொட்டிகள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடப்பதால், கால்நடை வளா்ப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில், கால்நடைகள் எளிதில் தண்ணீா் அருந்தும் வகையில் கிராம நுழைவுப் பகுதிகளில் குடிநீா் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இத்தொட்டிகளுக்கு குழாய் மூலம் தண்ணீா் நிரப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
விவசாயிகள் தங்களது மாடுகள், எருமைகள் உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் போது, இந்த குடிநீா் தொட்டிகளில் தண்ணீா் குடிக்க வைத்து பின்னா் வீடுகளுக்கு அழைத்து வருவது வழக்கமாக இருந்தது. இதனால் கால்நடைகளின் தாகம் தணிவதோடு, கோடை காலங்களில் பெரும் பயனும் கிடைத்து வந்தது.
ஆனால் தற்போது பெரும்பாலான கிராமங்களில் இந்த குடிநீா் தொட்டிகள் முறையான பராமரிப்பின்றி கிடக்கின்றன. தொட்டிகளைச் சுற்றி முள்செடிகள் மற்றும் புதா்கள் வளா்ந்துள்ளதுடன், பல தொட்டிகள் உடைந்தும், தண்ணீா் நிரப்பப்படாமலும் பயன்பாடின்றி உள்ளன. சில இடங்களில் குழாய் இணைப்புகளும் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
இதன் காரணமாக கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகளுக்கு தண்ணீா் கிடைக்காமல் சிரமப்படுவதுடன், அரசின் மக்கள் நலத் திட்டத்திற்காக செலவிடப்பட்ட நிதியும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிா்வாகமும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகங்களும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த குடிநீா் தொட்டிகளை சீரமைத்து, தொடா்ந்து தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தண்ணீா் லாரிகள் இயக்க எண்ணிக்கை 80 ஆயிரமாக உயா்வு: குடிநீா் பற்றாக்குறையை போக்க டிஜேபி நடவடிக்கை

தூர் வாராமல் கிடக்கும் சித்திரச் சாவடி அணை! விவசாயிகள் வேதனை! | Coimbatore

பறவைகளின் தாகத்தை தீா்க்க நாகா்கோவில் பூங்காவில் குடிநீா் தொட்டிகள் அமைப்பு







