Enable Javscript for better performance
அத்தியாயம் 47 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 40- Dinamani

சுடச்சுட

  

  அத்தியாயம் 47 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 40

  By த. பார்த்திபன்  |   Published on : 07th April 2017 12:00 AM  |   அ+அ அ-   |    |  

   

  பெருங்கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

  தமிழக உலைக்கல அகழாய்வுகள்

  தகடூர்ப் பகுதியின் குட்டூர் இரும்பு உலைக்கல அகழாய்வு குறித்து முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பட்டது. கொடுமணல், மேல்-சிறுவளூர், காட்டான்குளத்தூர், பெருக்கலூர், வேப்பங்குடி அகழாய்வுகள், ஏறத்தாழ சங்க கால இரும்பு உலைக்கலன்களையும் அவற்றின் சிறப்புகளையும் நமக்கு அடையாளப்படுத்தியுள்ளன. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அவை புகழ்ந்துள்ள ஊர்களின் அகழாய்வுகளைவிட, அவை அறியத்தராத ஆதிச்சநல்லூர், குட்டூர், அரிக்கமேடு, அழகன்குளம், பெரும்பேர், மயிலாடும்பாறை, சானூர், பையம்பள்ளி போன்ற இடங்கள் வெளிப்படுத்தியுள்ள சான்றுகள் மிகையானவை; வலுவானவை. தொன்மையில், அவை சங்க காலத்துக்கு முற்பட்ட சான்றுகளை மட்டுமல்லாது, புதிய கற்காலத்திலிருந்து அதன் தொடர்ச்சியாக வளர்ச்சியுற்ற இரும்புக் காலத்தையும் அடையாளப்படுத்துபவையும்கூட.

  கிருஷ்ணாபுரமும் எஃக்கூரும்

  சில பண்டைய தமிழக ஊர்களின் பெயர்கள், சில இரும்புத் தொழிலின் அடிப்படையில் வைக்கப்பட்டதாக உள்ளது. சசிசேகரன் குழுவினர், ஆதிச்சநல்லூரின் இரும்புச் சுரங்கத் தொழில் பற்றிய கள ஆய்வின்பொழுது, திருநெல்வேலியில் இருந்து ஆதிச்சநல்லூர் செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரத்தில் திறந்தவெளி வார்ப்பிரும்பு செய்யப்பட்ட சுரங்கத்தைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தது. அலெக்சாண்டர் ரீ, கிருஷ்ணாபுரத்தில் இருந்த புதைகுழி மேடுகள் குறித்து மட்டும் பதிவு செய்துள்ளார். கிருஷ்ணாபுரத்தின் பெயரே இரும்பினைக் குறிக்கும் “கிருஷ்ண அயஸ்” (Krisna ayas - as found in Brahamanas - அதாவது கருப்பு உலோகம்) என்ற சொல்லில் இருந்து பிறந்தது என சுட்டிக்காட்டுவர்.*1

  தமிழில், ‘‘கரும்பொன்” என்பது இரும்பைக் குறிக்கும் என்பது நினைவுகொள்ளத்தக்கது. இரும்போடு தொடர்புடைய ஊர்ப்பெயராக கிருஷ்ணாபுரத்தை ஆராய்வது, ஊர்ப்பெயர் ஆய்வை புதிய திசைகளுக்கு அழைத்துச்செல்லக்கூடியது. இப்பெயராய்வு மேலாய்வுக்குரிய முடிவு என்றாலும், இங்கு செயல்பட்ட இரும்பு உலைக்கலமானது சங்க காலத்தைச் சார்ந்தது என்பதாலும், இடைக் காலத்தில் இரும்பு வெட்டி எடுத்தமைக்குச் சான்றுகள் இல்லை என்பதாலும், ஆதியில் “கரும்பொன்னூர்”, “கரும்பொன்புரம்” “இரும்பூர்” போன்று வடமொழி சார்பற்ற ஒரு பெயரில் அழைக்கப்பட்டு, பல்லவர் காலத்தில் இருந்து தொடங்கிய வடமொழியாக்க மரபின் வழி “கிருஷ்ணாபுரம்” ஆகியுள்ளது எனலாம். தகடூரின் பகுதியான இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “எஃகூர்” அல்லது “எக்கூர்” பெயரில் ஓர் ஊர் உள்ளது. இதனை, தீர்த்த மலைத்தொடரின் குன்றுகளின் அடிவாரத்தில் அமைந்த ஊர்களில் ஒன்றாகக் குறிப்பிடலாம். இது எஃகு இரும்பை அடியாகக் கொண்ட ஊர்ப்பெயரில் முன்னோடியாகலாம். தீர்த்த மலைத்தொடர் உயர்தர இரும்பு வளத்துக்குப் புகழ்பெற்றது என்பது அறிந்ததே.

  ஆதிச்சநல்லூர்

  ஆதிச்சநல்லூரில் புலப்படும் பண்பாடு குறித்து ஆய்வுகளும், ஆய்வு அறிக்கைகளும், அதன் பன்முகப்பட்ட உச்ச செழுமைக்கு நியாயம் செய்பவையாக இல்லை என்றே குறிப்பிடமுடியும். ஆதிச்சநல்லூரின் ஒருமுகம்தான் அதன் இரும்புப் பண்பாடு.

  சிந்துவெளி நாகரிகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் வெளிப்படுவதற்கு ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னரே, தாமிரபரணியின் தென்கரையில் ஆதிச்சநல்லூர் அடையாளம் காணப்பட்டது. இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரின் தாழிக்காட்டின் 10 சதவீதத்துக்கும் குறைவான பகுதியே இந்நாள்வரை அகழாய்வுக்கு உட்படுத்தப்படுள்ளது. இங்கு ஏறத்தாழ 114 ஏக்கர் பரப்பு தாழிக்காடு உள்ளதாக அளவிடப்பட்டுள்ளது. பொ.ஆ. 1876-ல், ஜெர்மனி நாட்டின் ஆன்ரூ யகோர் (Andrew Jagor), இங்குள்ள ஈமச்சின்னங்களை தோண்டி தாழிகளையும், எலும்புத்துண்டுகளையும், பலவகை இரும்புக் கருவிகளையும், செம்புப் பொருட்களையும் எடுத்தார். இவரது சேகரிப்புகள் குறித்து முழுமையான அறிக்கையோ, விவரங்களோ இல்லை.*2 இவை பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்று அறியமுடிந்தாலும், மேல்விவரங்களோ, மேலாய்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை.

  அலெக்சாண்டர் ரீ (Alexander Rea) அவர்கள், பொ.ஆ. 1899 முதல் 1906 வரை ஐந்து கட்டங்களாகத் தோண்டி பலவகையான தொல்பொருட்களைச் சேகரித்தார். இப்பொருட்களைப் பற்றிய விவரப்பட்டியல் வெளிவந்துள்ளது.*3 ரீ-க்குப் பிறகு, 1903-04-ம் ஆண்டுகளில், லூயிஸ் லாப்பிக் (Louis Lapicque), 1915–ல் ஜெ.ஆர். ஹெண்டர்சன் (Dr. J.R. Henderson) ஆகியோர் ஆதிச்சநல்லூரில் தோண்டும் பணியைத் தொடர்ந்தனர். இவ்விருவரின் சேகரிப்புகள் குறித்தும் முழுமையான செய்திகள் கிடைத்தில.

  இவர்களுக்குப் பிறகு ஏறத்தாழ 100 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் இரண்டு காலகட்டமாக, இந்திய அரசுத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை - சென்னை வட்டத்தைச் சார்ந்த டி.சத்தியமூர்த்தி (T. Sathyamurthi) அவர்களால் அறிவியல் முறைப்படியாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

  (இதற்கிடையில், 1926-ம் ஆண்டுகளில், சிந்துவெளி நாகரிகம் உலகம் வியக்கும்படி வெளிப்பட ஆரம்பித்தது. அவ்வாய்வுகளின் விவரங்கள் விரிவாக வெளிவந்து விவாதிக்கப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் திராவிட என்ற முந்து தமிழர்ச் சார்புகள் நிறுவப்பட்டு வருகின்றன).

  1902-03-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கை சிறுகுறிப்பு ஒன்று, ரீ-யின் முதல் அகழாய்வில் 1892 தொல்பொருட்களும், இரண்டாவது அகழாய்வில் ஏறத்தாழ 4000 தொல்பொருட்களும், பின்னர் மேற்கொண்ட அகழாய்வுகளில் ஏறத்தாழ 3000 தொல்பொருட்களும் சேகரிக்கப்பட்டன என்ற தகவலைத் தருகின்றன.*4 மொத்தமாக, ஏறத்தாழ 9000 தொல்பொருட்கள்.

  இவை தற்சமயம் எங்கு உள்ளன, யாருடைய பாதுகாப்பில் உள்ளன என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. எவ்வாறாயினும், தொல்லியல் அகழாய்வு அறிவியலுக்கு எதிராக அகழகாய்வுச் சான்றுகள் புலப்படுத்தும் உண்மையை வெளிப்படுத்தத் தயக்கம்; உதாசீனம்; புறக்கணிப்பு போன்ற நேர்மையற்ற காரணங்கள் தவிர வேறு காரணங்களை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கைகள் வெளியிடப்படாமையில் காணமுடியாது.

  ரீ-யின் வெளியீட்டுக்குப் பிறகு, ஆதிச்சநல்லூரில் பி. சசிசேகரன் குழுவினர்*5 மேற்கொண்ட ஆய்வுகள், “வரலாற்றுக்கு முற்பட்ட உலோக - கனிமச் சுரங்கம்” பற்றிய செய்திகளை வழங்கியுள்ளன.*6

  ஆதிச்சநல்லூர் தொல்பொருள் சான்றுகள், பலவகைத் தொழில் நடந்த நகரத்தை அடையாளப்படுத்துகின்றன. இதற்கு இணையான மற்றொரு தொழில் நகரமாக கொடுமணல் மட்டுமே அகழாய்வு மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

  சசிசேகரன் குழுவினர் ஆதிச்சநல்லூரில் காணப்பட்ட சுட்ட செங்கற்கள், உருக்கிய உலோகக் கசடுகள், உலையிலிடப்பட்ட கரிக்கட்டைகள், பயன்படுத்தப்பட்ட மூலத் தாதுப் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இங்கு ஈமத்தாழிகளில் கிடைத்துள்ள தங்கம், இரும்பு, தாமிரம் ஆகிய உலோகங்கள் நெடுந்தொலைவிலுள்ள இடங்களில் இருந்து கொண்டுவரப்படாமல், அவை உள்ளூரிலேயே தோண்டி எடுக்கப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவையே என நிறுவியுள்ளனர்.

  நிலத்தின் மேற்பரப்பிலேயே இரும்பு, தாமிரம் ஆகியவற்றின் தாதுப் பொருட்கள் கிடைத்ததால், உலோகங்களைப் பிரித்தெடுக்கும் நேர்த்தியான தொழில்நுட்பத்தை அப்பகுதி மக்கள் அறித்துவைத்திருந்தனர் என்றும், இரும்பு மாதிரிகள் எல்லாவற்றிலும் சுண்ணாம்பு இருப்பது கொண்டு, அவர்கள் கரிக்கட்டை, சுண்ணாம்பு ஆகியவற்றை கலவைப் பொருட்களாகக் கொண்டு இரும்பை எளிதில் உருக்கி எடுக்கும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனர் என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும், ஆதிச்சநல்லூரில் தாதுப் பொருட்கள் கிடைக்கும் வழியாகவே சென்று உலோகங்களைப் பிரித்தெடுத்தனர் என்றும், அதன்படி கிழக்கு, வடகிழக்குத் திசையிலிருந்து, மேற்கு-தெற்காகச் சுரங்கம் தோண்டப்பட்டது என்றும், அது ஒரு திறந்தவெளி சுரங்கமாகும் என்றும் தெரிவிக்கின்றனர்.

  இருப்புப் பொருட்களில் பலவகையான வடிவங்களில், பல அளவுகளில் செய்யப்பட்ட இரும்பு வாள்களைவிட, திணைவாழ் சமூக மாற்றத்துக்கு வித்திட்ட இரும்புக் கோடாரிகளும், மண்வெட்டிகளும் இன்றியமையாதவை. இங்கு கிடைத்த இரும்புக் கோடாரிகள் கனமானவும், தட்டையாகவும் இரு பக்கங்களில் நேராகவும் செய்யப்பட்டவை. கைப்பிடியை இணைக்கும் பகுதியைவிட வெட்டும் பகுதி தட்டையாகவும், அகலமாகவும் கூராகவும் செய்யப்பட்டவை. 5.5 அங்குலம் முதல் 9 அங்குலம் வரை நீளம் கொண்ட பல அளவுகளில் கோடாரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மண்வெட்டிகளைப் பொருத்த அளவில், வடிவமைப்பு ஒன்றுபோல் இருந்தாலும், சிற்சில வேறுபாடுகளையும் கொண்டிருக்கின்றன. வெட்டும் பகுதி அகலமாக உள்ளவையும், உள்பகுதி வளைந்தும் உள்ள சிலவும் சேகரிக்கப்பட்டுள்ளன. இவையும், பருத்த கடினத் தன்மையுள்ள இரும்பு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளவையே.

  (ஆதிச்சநல்லூர் - மண்வெட்டிகள் – நன்றி: Alexander Rea from Catalogue of Pre-Historic Antiguities from Adichanallur and Perumbair)

  ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டுப் பகுதியில் இருந்து பழைய கற்காலத்தையோ, புதிய கற்காலத்தையோ சேர்ந்த கற்கருவிகள் கிடைக்கவில்லை என்பதால், அது தனிப்பட்ட வகையிலான பண்பாடு என்றும், முன்பின் தொடர்புகள் அற்ற திடீர் வெளிப்பாடு என்பது போன்ற சொல்லாடல்கள் அதன் உண்மைத்தன்மையின் மீது செலுத்தப்படும் திசைத்திருப்பல்களே. மேலும், இங்கு கிடைத்துள்ள வெண்கலப் பொருட்கள் குறித்து முழுமையான ஆய்வு இல்லாநிலை கொண்டும்; அறுபடா தொடர்ச்சியுடன் பழைய கற்காலம் முதல் அண்மைக்காலம் வரையிலான பரிணாம வளர்ச்சிப் போக்குகளை வெளிப்படுத்தியுள்ள தென்னிந்தியாவின் பரப்பினை கவனத்திக்கொண்டும் பார்க்கையில், மேற்கண்ட சொல்லாடல்கள் விவாதத்துக்கு உட்படுத்த வேண்டாதவை.

  மேலும், இதனைப் பெருங் கற்காலப் பண்பாட்டின் அங்கமாக எடுத்துக்கொள்வதிலும் வரலாற்று ஆசிரியர்கள் முரண்படுவது உண்டு. தாழிக்குழியை சுற்றி நிலமட்டத்தில் கல்வட்டத்தை, பெருங் கற்படைச் சின்னத்தின் ஒரு பொதுக்குணமாகக் கொண்டு, அதனை கல்வட்டம் இடம்பெறாத தாழிச்சின்னத்தை கண்டு, அதனை பெருங் கற்படைப் பண்பாடாகக் கருதும் போக்கும் நிலவிவருகிறது. இந்த யுத்தபூமி தொடரின் 15 முதல் 40 வரையிலான அத்தியாயங்கள் வழியாக, தனி தாழிவகைச் சின்னங்களும், பெருங் கற்படைச் சின்ன வகைகளில் ஒன்றாக ஆய்ந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நினைவுக்குக் கொண்டுவரலாம்.

  ஒரு முழுமையான தொழில் நகரமொன்றின் அனைத்துக் குணங்களும் ஆதிச்சநல்லூர் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, இங்கு எட்கர் தஸ்டர்ன் தெரிவித்த நீண்ட தாடையுடைய மக்களும், ஆஸ்ட்ரலாயிடு மற்றும் மத்திய தரைக்கடல் சார்ந்தது என இரண்டு வெவ்வேறு இனத்தைச் சார்ந்த மண்டையோடுகளை எலியட் சுமித் அடையாளம் கண்டதும்; ஆல்பைன் இனத்தின் ஆர்மினிய மக்களுடையது என்றும், திராவிட இனத்தின் ஒரு கலவைக்கூறாக இவரே கருதியதும்; சிக்கர்மேன் திராவிட இனத்தைச் சேர்ந்த மண்டையோடு ஒன்றை அடையாளம் கண்டதும் காரணம் ஆகும்.

  தமிழகத்தில் வட இந்திய மக்கள் மட்டுமல்லாது, சிறுசிறு அயல்நாட்டுக் குடியேற்றங்கள் வணிக நோக்கில் நிகழ்ந்தமையை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்திவருகின்றன. சிறிய அளவிலான இக்குடியேற்றங்களால், திராவிடர் பண்பாடு தாக்குண்டதைவிட, குடியேறியவர்கள் திராவிட வாழ்வியலை தம் பண்பண்பாட்டுக் கூறாக ஆக்கிக்கொண்டுள்ளனர் எனக் கொள்ளலாம்.

  பெருங்கற்காலப் பண்பாட்டின் ஒரு கூறாகிய பெருங் கற்படைப் புதைவழக்கில் தம்முடலை உட்படுத்திக்கொண்டதே இதற்கு சான்றாகக் கொள்ளலாம். கொடுமணலில் கிடைத்த விசாகி முதலான பிராகிருத பெயர் பொறித்த தாழிகள், வட இந்திய மக்கள் தமிழகத்து பெருங் கற்படைத் தாழிப் பண்பாட்டில் கரைந்துள்ளர் என்று முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளதைக் காண்க. பெருங் கற்படை மரபு வெளிப்படையாக தென்னிந்திய தமிழ் மரபாக இருப்பதாகும். மொ.பொ.ஆ. 1000 அளவிலோ அதற்குப் பிறகோ ஆர்மீனியாவிலோ, மத்திய தரைக்கடல் பகுதியிலோ பெருங் கற்படை பண்பாடு நிகழவில்லை என்பதும், இக்காலகட்டத்துக்கு ஏறத்தாழ 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அதாவது அப்பகுதியில் பெருங் கற்படைப் பண்படு முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவ்விடத்து அகழாய்வுகள் உறுதிசெய்துள்ளன.   

  ஆதிச்சநல்லூர் பண்பாட்டின் காலம் முறையாக அறிவிக்கப்படாமையால், ஒரு புதிர் நிலையிலேயே அது உள்ளது. அலெக்சாண்டர் ரீ, இப்பொருட்கள் 400 முதல் 4000 ஆண்டுகள் வரை பழமையானவைகளாக இருக்கலாம் என்றும், அதில் எதனையும் மறுக்கமுடியாது எனவும் குறிப்பிடுகின்றார். அங்கு கிடைத்த மரத்துண்டு ஒன்றின் மீது செய்யப்பட்ட கரிம ஆய்வு (C14), அதன் காலத்தை பொ.ஆ. 775 ± 95 என்று காட்டுகிறது. இக்காலக்கணிப்பு மிகவும் வேறுபாடு கொண்டது என்றும் பொருட்படுத்தாமல் விடப்பட்டது.

  ஆனால், இதனை வெண்கலம் மற்றும் டின் உலோகக் கலவை அதிக அளவில் முறையே 22 முதல் 25 சதவீதமும், 18 முதல் 26 சவீதமும் பல்லவர் கால நாணயங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பது கொண்டும், அது ஆதிச்சநல்லூர் பொருட்களின் காணப்படும் அளவோடு ஒத்திருப்பது கொண்டும், பொ.ஆ. 775 ± 95 அளவில், பல்லவர் காலத்தில் இங்கு சுரங்கத்தொழில் நடைபெற்றதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதில் இருந்தும், இங்கு இடைக் காலம் வரை தாழிகளில் புதைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

  அதே சமயத்தில் இங்கு கிடைத்த செம்புப் பொருட்களின் காலம், 1. 3000 ± 700 BP, அதாவது மு.பொ.ஆ. 1000 ± 700; 2. 2770 ± 600 BP, அதாவது மு.பொ.ஆ. 770 ± 600; 3. 3160 ± 600 BP, அதாவது மு.பொ.ஆ. 1160 ± 600; 4. 3400 ± 700 BP, அதாவது மு.பொ.ஆ. 1400 ± 700; 5. 2600 ± 500 BP, அதாவது மு.பொ.ஆ. 600 ± 500; 6. 2500 ± 530 BP, அதாவது மு.பொ.ஆ. 500 ± 530; 7. 1920 ± 350 BP, அதாவது பொ.ஆ. 80 ± 350 என பலவாறாகக் கணிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இவற்றுள் வரிசை எண் 4-ல் கண்டபடி, ஆதிச்சநல்லூர்ப் பண்பாடு மு.பொ.ஆ 1000 அளவில் சிறப்புற்றிருந்த பெருங் கற்காலப் பண்பாடு என அறுதியிடலாம் என குறிப்பிடுகின்றனர்.*7

  கொடுமணல்

  கொடுமணலில், 1985 முதல் 1996 வரை பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், அங்கு இரும்பு உலோகத்தொழிலும், அணிமணிகள் தொழிலும் மிகச் செழுமையாக மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதை வெளிப்படுத்தியுள்ளன. சிறந்த வணிக மையமாகத் திகழ்ந்த இவ்விடம், இந்தியாவின் பிற பகுதிகளுடனும், மேற்கு ஆசிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தது. இங்கு உடைந்த நிலையில் வெளிப்படுத்தப்பட்ட கிண்ண வடிவ உலைக்கலன் (Bowl furnace), எரிந்த நிலையில் வழவழப்பான மேற்பரப்பை உடைய வட்ட வடிவ களிமண்ணைக் கொண்டிருந்ததும், உலையில் படர்ந்திருந்த வெண்படலம் இரும்பை உருக்கும் மிக உயர்நிலை வெப்பத்தால் உருவானது என்பதையும் காட்டுகிறது. உலைக்கலன் உடைந்திருந்ததால், அதன் உயரத்தை அளவிடமுடியாமல் போனது.

  இருந்தாலும், உலைக்கலனின் அடிப்பகுதி 115 செ.மீ. விட்டம் (1.15 மீ) கொண்டுள்ளது கொண்டு, இது 18-19-ம் நூற்றாண்டுகளில் சேலம் மற்றும் கோயமுத்தூர் பகுதிகளில் உபயோகத்தில் இருந்த உலைக்கலன்களைவிட பெரியது என அறியமுடிகிறது. இவ்வளவைக்கொண்டு ஒப்பிட்டால், இதற்கிணையாக இந்த உலைக்கலன் 4 அடி உயரம் கொண்டிருக்க வேண்டும் என மதிப்பிடலாம். இது, 19-ம் நூற்றாண்டில் பயன்பாட்டில் இருந்த உலைக்கலன்களின் உயரத்தைவிட கூடுதலாகும். மேலும், இந்த உலைக்கலனுக்கு அருகிலேயே மேலும் இரு உலைக்கலன்கள் சிதைந்த நிலையில் மண்ணடுக்கில் காணப்பட்டதைக் கொண்டு, இங்கு இரும்பு உருக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்றது என்பதற்குச் சான்றுகளாகின்றன. உலைக்கலனுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மெல்லிரும்புத் துண்டு (Wrought Iron piece), கருங்கல் பலகைக் கற்களும் (granite slabs) இங்கு என்னவகையான உருக்கும் தொழில் நடைபெற்றது என்பதை தெரிவிக்கிறது.

  (கொடுமணல் - உலைகலம் மற்றும் புடமிடும் கலன்கள். - நன்றி: கா. ராஜன், from Plate No. 1.09 of Early Writing System - A Journey from Graffiti to Brahmi, p.36)

  முன்பே குறிப்பிட்டதுபோல், இரும்பை உருக்க 11000 சென்ட்டிகிரேடு வெப்பநிலையும், எஃகாக மாற்ற 13000 சென்ட்டிகிரேடு வெப்பநிலையும் தேவை. இந்த உலைக்கலன்கள் இவ்வெப்பநிலையை அடைந்தன என்பதை லண்டன் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் பள்ளியின் ஆய்வாளர் சாரதா சீனிவாசம் நடத்திய உலோகவியல் பகுப்பாய்வும், இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தின் ஆய்வாளர்கள் ரகுநாத ராவ் மற்றும் சசிசேகரன் நடத்திய பகுப்பாய்வும் தெளிவாக்குகின்றன.*8 சசிசேகரன், இந்த வெப்பநிலை இரும்புத் தாதுவில் இருந்து இரும்பு உலோகத்தை பிரித்தெடுக்கப் போதுமான வெப்பத்தைவிடக் கூடுதலானது என்றும், இரும்புத் தாதுவில் இருந்து இரும்பு உலோகத்தைப் பிரித்தெடுக்கப்பட்ட இருப்பானது, கசடுகளுடன் செறிவற்ற அதாவது கடற்பஞ்சு பண்புள்ள இரும்பு (Sponge Iron) போன்றது. இது அரை - உறுதிநிலை இரும்பாகும் (Semi-solid iron). இவ்விரும்பு, நெகிழ்விணக்கமுடையதாக (Malleable), அதாவது தகடாகவும், நீட்டக்கூடியதாகவும், வளைந்து தரக்கூடியதாகவும், உபயோகிக்கத் தகுந்த இரும்பாக மாற்ற, மேலும் வெப்பமூட்டப்பட வேண்டும் என சுட்டிக்காட்டுவார்.

  இதனால், இரும்புத் தாதுவில் இருந்து இரும்பு உலோகத்தை பிரித்தெடுக்கத் தேவையான வெப்பத்தைவிட கூடுதலான வெப்பத்தை அடைந்த கொடுமணல் உலைக்கலன்கள், எஃகு என்ற உருக்கு இரும்பை உற்பத்தி செய்தன எனச் சுட்டிக்காட்டுவதும் கவனிக்கத்தக்கதாகிறது. இங்கு காணப்பட்ட பலகைக் கற்கள், கொல்லுலைகளின் (forging) பட்டடைக் கல்லாக (anvil) பயனாகியுள்ளன என்பதையும் காட்டுகின்றன.*9

  கொடுமணலில், புடக்குகை (Crucible) உலை முறையில் இரும்பை உருக்கி எஃகு தயாரிக்கப்பட்டதைக் காட்டுகின்றன. இது மிக முக்கியமான தொழில்நுட்ப அறிவாகும். இத்தொழில்நுட்பம், மு.பொ.ஆ. 300 அளவிலேயே தமிழர் பெற்றிருந்தனர் என்பதற்கு சான்றாகவும் அமைகிறது. இங்கு அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட இரு புடக்குகை உலைகளில் ஒன்று, உபயோகப்படுத்தப்பட்டாத நிலையில், புதியதாக நிலமட்டத்தில் இருந்து 125 செ.மீ. ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புடக்குகை உலை முட்டை வடிவில் உள்ளது. இதனைச் சுற்றி 12 சிறிய உருக்குலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இம்முட்டை வடிவ புடக்குகை உலை, வடக்கு - தெற்காக 112 செ.மீ. அளவும், கிழக்கு – தெற்காக 100 செ.மீ. அளவும் கொண்டதாகும். இதன் உள்ளாழம் 40 செ.மீ. ஆகும். இதனைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுவர் 20 செ.மீ. தடிமன் கொண்டிருந்தது. இந்தச் சிறிய உருக்குலைகள் 30 செ.மீ. விட்டம் கொண்ட சிறுவட்டமாக அமைக்கப்பட்டும், அவற்றின் வாய்ப்பகுதியின் மத்தியில் சிறுதுளை அல்லது பள்ளத்துடன் உள்ளதும் அறியப்பட்டது.

  முதன்மையான பெரிய உருக்குலையின் வாய்ப்புறத்துக்கு அருகில், செவ்வக ஓட்டை இடப்பட்டிருந்தது. அது, சிறிய உருக்குலைகளை மிகச்சரியாக இணைக்கும்விதமாக, ஒரு சுடு களிமண் குழாய் கொண்டு இணைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிறிய உருக்குலைகள், முதன்மை உலையில் இருந்து வெளிவரும் உருகிய குழம்பை காற்றின் உதவியுடன் குளிர்விக்கும் கலன்கலாகச் செயல்படும்படியாக அமைக்கப்பட்டிருந்ததும் அறியமுடிகிறது. இந்த அமைப்பு மூலம், 10000 செல்ஷியஸுக்கும் மேலான வெப்பத்திலிருந்து, குழம்பானது நீரில் மூழ்கி குளிர்விக்கப்பட்டாமல் காற்றின் உதவியுடனே மெள்ள மெள்ள குளிர்விக்கப்படும் தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. இவ்வகை தொழில்நுட்ப அமைப்பை விட்மென்ஸ்டட்டன் (Widmanstatten) என்று அழைப்பர்.

  (தொடரும்)

  மேற்கோள் குறிப்புகள்

  1. B.Sasisekaran, (with others), Adichanallur: A Prehistoric Mining Site, Indian Journal of History and Science, 45.3, 2010, p.381.

  2. Foote, R.B-ன் 1901 Catalogue of the Pre-historic Antiquities (Madras) நூல் யகோர் சேகரிப்பின் சில விவரங்களைத் தருகின்றன.

  3. Catalogue of Pre-Historic Antiguities from Adichanallur and Perumbair, Madras Government Museum, Madras, 1915.

  4. Annual Report 1902-03, Archaeological Survey of India, New Delhi, 2002, p.117.

  5. Team consists of B.Sasisekaran, S.Sundarajan, D.Venkata Rao, B.Ragunatha Rao, S. Badrinarayan and S.Rajavel.

  6. B.Sasisekaran, (with others), Adichanallur: A Prehistoric Mining Site, Indian Journal of History and Science, 45.3, 2010, pp.369-394.

  7. Ibid., p.383.

  8. கா. ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004, பக்.129-130; Sasisekaran. B, Metallurgy and Metal Industries in Ancient Tamil Nadu - An Archaeological Study, Indian Journel of History of Science, 37, (2002), p.23.

  9. Sasisekaran, op.cit.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp