Enable Javscript for better performance
அத்தியாயம் 74 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி- Dinamani

சுடச்சுட

  

  அத்தியாயம் 74 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

  By த. பார்த்திபன்  |   Published on : 22nd June 2018 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kanthirusti-parikarangal-today-horoscope

   

  மந்திரத்தையும் ரிக் வேதத்தில் மந்திரத்தையும் அதன் உள்ளார்ந்தப் பொருளில் புரிந்துகொள்ள ஆவி/ஆன்மா வழிபாடு (யுத்தபூமி, அத்.67), உயிரியம்/மனா வழிபாடு (அத்.68), இயற்கை வழிபாடு (அத்.69), குலக்குறி வழிபாடு (அத்.70), விலக்கு (அத்.71), போலிப்பொருள் வழிபாடு (அத்.72), முன்னோர் வழிபாடு (அத்.73) ஆகிய தொல்சமய நம்பிக்கைகள் விளக்கப்பெற்றன. இவை தொல் சமய நம்பிக்கைகள் என்பதால், இறந்துபட்டவை அல்லது வழங்கு நீங்கியவை என்ற பொருள் இல்லை. இவை இன்றும் உயிருடன் தொடரப்படுபவை. சில மாற்றங்களை ஏற்றும், புதியன உருவாக்கிக்கொண்டும் வெளிப்படுபவை.

  சமயக் கோட்பாடுகள் பல சமயம் இவற்றை வார்த்தைகளால் கேலி புரிந்தும், நிராகரித்தும் இருந்தாலும், சில பொழுது கடுமையான தாக்குதல்களை இவற்றின் மீது தொடுத்தாலும், சமயங்கள் இந்நம்பிக்கைகளின்றி அல்லது சமயம் சார்ந்த மக்கள் இந்த தொல்நம்பிக்கைகள் இன்றி இயங்குவதில்லை. இதன் காரணமாக தொல்சமய அல்லது சமயங்களுக்கு முற்பட்ட மனிதயின நம்பிக்கைகள் சமய நிலையில் வெளிப்படும்பொழுது மனிதனின் மூடநம்பிக்கைகளாகின்றன. நம்பிக்கைகள் அறிவியல் பூர்வமானது; சமயங்கள் அறிவியல் பூர்வமற்றவை என்ற கோட்பாடு இப்புள்ளியில் இருந்துதான் பிறக்கிறது.

  மந்திர வழிபாடு

  மந்திரம் (magic), அறிவியல் தோன்றுவதற்கு முந்தைய கலை எனக் குறிப்பிடும் மானுடவியலாளர்கள், தொன்மைச் சமயத்தில் மந்திரம் ஒரு பிரிக்கவியலாத கூறாக உள்ளது என குறிப்பிடுகின்றனர். மந்திரத்தின் தோற்றம் அதன் செயல்முறைகள் ஆகியவை தொன்மை மக்களிடம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். பரந்த அளவில் மேற்கொண்ட பிரேசர் அவர்களின் ஆய்வு, மந்திரத்தின் அமைப்பையும் செயல்பாட்டினையும் அறிந்துகொள்ள உதவும் கருவியாக விளங்குகிறது. பிரேசர் மந்திரத்தை கொள்கை சார்ந்தது அல்லது மந்திரம் ஒரு போலி அறிவியல் (theoretical - (magic as pseudo-science) என்றும் செயல்முறை சார்ந்தது அல்லது மந்திரம் ஒரு போலிக்கலை (practical - magic as pseudo-art), என்றும் இரண்டாகப் பகுத்து வழங்குகிறார். மேலும் செயல்முறை சார்ந்த போலிக் கலையை ஆக்கநிலை சார்ந்தவை, எடுத்துக்காட்டாக சூனியம், பில்லிசூனியம் (positive - witchcraft, sorcery) என்றும், எதிர்நிலை சார்ந்தது எடுத்துக்காட்டாக விலக்குகள் (negative - taboos) என்றும் மேலும் இரண்டு உட்பிரிவுகளாகக் காட்டுகிறார்.

  அவரது வரைபடங்கள் இதனை நமக்கு நன்கு விவரிப்பவையாக உள்ளன.

  மந்திரத்தின் செயல்பாடு குறித்து பிரேசர் மேலும் விளக்கமளிக்கும்பொழுது - 1. ஒத்தது ஒத்ததை உருவாக்கும் (like produces like), 2. ஒருமுறை தொடர்புகொண்டால் தொடர்ந்து தொடர்புகொண்டிருக்கும் (once in contact continues to act) என்று இரு கோட்பாடுகளின் அடிப்படைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

  ஒத்தது ஒத்ததை உருவாக்கும் என்ற முதல் கோட்பாடு, ‘ஒத்தவிதி’ (law of similarity) என்றும் குறிக்கப்படும். இவ்விதியோடு தொடர்புடைய மந்திரம் ‘ஒத்த மந்திரம்’ அல்லது ‘பாவனை மந்திரம்’ (homoeopathic magic - imitative or mimetic magic) என்றும் குறிக்கப்படும். இரண்டாம் கோட்பாடு, ‘தொத்துவிதி’ என்றும் இதனுடைய தொடர்பு கொண்ட மந்திரம் ‘தொத்து மந்திரம்’ (law of conduct or contagion - contagious magic) என்றும் குறிக்கப்படும். இந்த இரு விதிகளும் மந்திரச் செயலுறவைப் பொறுத்த அளவில் ஒரே வகையாக இருப்பதால், அவற்றை ‘ஒத்துணர்வு மந்திரம்’ (sympathethic magic) என்னும் ஒரே வகைக்குள் அடக்கி, இவ்விரண்டின் ‘‘வினையும் பயனும்’’ (case and effect) ஒன்றாக இருப்பதே இதற்குக் காரணம் என்று விளக்குவார்.

  ஒத்தமந்திரம் என்பது, ‘ஒத்தது ஒத்ததை உருவாக்குகிறது’ என்ற விதியாகும். இவ்விதிப்படி என்ன விளைவு ஏற்பட வேண்டுமென்று விரும்பப்படுகிறதோ அதற்கேற்றார்போல் செய்யப்படும் செயலும் ஒத்திருக்கும். சான்றாக, குழந்தைப்பேறு வேண்டுவோர் சிறு மரத்தொட்டிலைச் செய்து கோயிலுக்கு நேர்த்திக்கடன் செய்வதும், உடல் உறுப்பின் குறைபாட்டை நீக்க அதேபோன்ற உறுப்பை நேர்த்திக்கடனாகத் தருவது என்ற தமிழக வழக்கத்தைக் காணலாம்.*1

  தொத்துமந்திரம் மூலம் விரும்பியது ஒருமுறை தொடர்புகொண்டால், அது அதனுடன் தொடர்புகொண்டு எண்ணியதை நிறைவேற்றும் என்பதற்குக்காட்டாக, நோயால் பீடிக்கப்பட்டவர்களின் தலையை கோழிமுட்டையால் மூன்றுமுறை சுற்றி, பின்னர் அதனை வீதியில் எறிவது, மிளகாய் வற்றலையும், உப்பையும் சிறு பொட்டலமாகக் கட்டி அப்பொட்டலத்தால் உடலைத் தடவிப் பின்னர் அதனை நெருப்பில் போடுவது என்பது தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மந்திர சிகிச்சை முறையாகும். இவ்வாறே கன்றை ஈன்ற பசுவின் இளங்கொடியினை ஆல், அத்தி போன்ற பால் மரத்தின் மீது கட்டும் பழக்கம் தொத்துமந்திரத்தின் அடிபடையிலானதே. பசுவுடன் தொடர்புடைய இளங்கொடியைப் பால் மரத்துடன் இணைப்பதன் மூலம், பசுவும் பால்மரத்தைப்போல பால் வளத்துடன் இருக்கும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இது நிகழ்த்தப்படுகிறது.*2

  தொன்மை சமயம் சார்ந்தாக உள்ள மந்திரம் தவிர்க்க இயலாதபடி நவீன சமயங்களில் இருந்தும் பிரிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், தொல் மனிதனின் மந்திரமும், சமயத்தில் மந்திரமும் நிச்சயமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. இவ்வேறுபாட்டை மந்திரத்தின் உற்பத்தி, மற்றும் பயன்பாடு என்ற செயல்முறைகளில் இருந்து அறியலாம். இவற்றுக்கு இடையிலான வேறுபாடு குறித்தும் அறிஞர்களால் ஆராயப்பட்டுள்ளன. லெவி ஸ்ட்ராஸ்*3 (Levi-Strauss), மந்திரம் இயற்கை உருவாக்கிய மனிதச் செயல்பாடு ஆகும் என்றும், சமயம் மனிதன் உருவாக்கிய இயற்கை சட்டங்கள் என்றும், மந்திரம் மற்றும் சமயம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை விளக்குவார். இதனை மாலினோஸ்வஸ்கி*4 (Malinowski), சமயமும் மந்திரமும் வெவ்வாறானவை என்று நீண்ட காலத்துக்கு முன்னரே அறிவிக்கின்றார். மாலினோஸ்வஸ்கிக்கு முன்னர் ஆர்.ஆர். மாரட் (R.R. Marett), மந்திரச் சமயம் (Magico Religious) என்ற சொல்லை தொல்சமய நிலையில் மந்திரத்தைக் குறிக்கப் பயன்படுத்தினார்.

  காலம் செல்லச் செல்ல மக்கள், தொல்பழங்கால மக்களிலிருந்து இக்கால மக்கள்வரை மந்திர ஆற்றல்களைப் பலவகைகளில் அவரவர் விருப்பம்போல் பயன்படுத்தி வருவதைக் காணமுடிகிறது. இவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் தூய மந்திரம் (white magic), தீய மந்திரம் (black magic), உற்பத்தி மந்திரம் (productive magic), பாதுகாப்பு மந்திரம் (protective magic), அழிப்பு மந்திரம் (destructive magic) எனப் பலவகையாக அமைந்தன.

  தூய மந்திரம்

  இன்றைய நிலையில், தூய மந்திரம் தனிமனித நலனுக்காகவும், சமுதாயத்தில் அனைவரின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகள் கிடைக்கவும், விளைச்சல் பெருக்கவும், போரில் வெற்றி பெறவும், நோய்களைத் தீர்க்கவும் தூய மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. வளமை வேண்டி செய்யப்பட்டும், உதாரணமாக மேய்த்தல் சமூகத்தினரின் சன்யாசிக்கல் வளமைச் சடங்குகள் இந்தவகையில் தூய மந்திரத்தின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

  தீய மந்திரம்

  தீய மந்திரம் இதற்கு நேர்மாறானது. பகைவனைக் கொல்லவும், இடையூறு செய்யவும் இவ்வகை மந்திரம் பயன்படுகிறது. சூனியம் பில்லிசூனியம், ஏவல் சூனியம், கெட்ட ஆவி, பேய் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு அல்லது ஒரு சமூகத்துக்கு எதிராக ஏவுவது போன்றவை இம்மந்திரத்தின் தன்மைகளாகும். இயற்கையின் கொடூரங்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பு மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. தங்களிடம் உள்ள குறைகள், தீமைகள் போன்றவறைப் பிற உயிரிகள் அல்லது பொருட்களுக்கு மாற்றுவிக்கும் மந்திரம் (transfer of evil) பயன்படுத்தப்படுகிறது.

  உற்பத்தி மந்திரம்

  எல்லா சமுதாய மக்களாலும் வளமை சார்ந்து மேற்கொள்ளப்படும் உத்தியே, அதாவது பாவனைச் செயல்களே ‘உற்பத்தி மந்திரம்’ என்ற பொதுச் சொல்லால் அடையாளப்படுத்தப்படுகிறது. வேட்டையாடுதல், மீன்பிடித்தல், வேளாண்மை போன்ற தொழில்களில் நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்வது போன்றே, மழை வளம் வேண்டியும், குழந்தைப்பேறு வேண்டியும், செல்வ வளம் வேண்டியும், கால்நடைகளின் நலம், நோயிலிருந்து நலம் வேண்டியும் மேற்கொள்ளப்படுவதும் உற்பத்தி சார்ந்த மந்திரங்களே.

  பாதுகாப்பு மந்திரம்

  தீமைகளில் இருந்து காக்கும் மந்திரங்கள், உதாரணமாக பில்லி, சூனியம் முதலான ஏவல்களில் இருந்தும், உயிரினங்கள் நோய்நொடிகள் அண்டாதிருக்கவும், இயற்கைச் சீற்றங்களில் இருந்தும் மேற்கொள்ளப்படுபவை பாதுகாப்பு மந்திரங்கள் ஆகும்.

  தீமை மாற்று மந்திரமும் பாதுகாப்பு மந்திரமும் பலியாடு கோட்பாடும்

  தீமை மாற்று மந்திரம் என்பது பாதுகாப்பு மந்திரத்தில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. பிரேசரின் விளக்கம் தீமை மாற்று மந்திரத்தை நமக்கு சரியாக விளக்குகிறது. ‘‘குற்றங்களையும், துயரங்களையும் மற்ற உயிர்களுக்கு மாற்ற முடியும். அவற்றை அந்த உயிர்கள் நமக்காகத் தாங்கிக்கொள்ளும் என்ற எண்ணம் நாகரிகமற்ற அதாவது தொல் மனித அறிவுக்குப் புலப்பட்டிருந்தது, இந்த எண்ணம் உடலுக்கும் - அறிவுக்கும், பொருள்களுக்கும் -பொருள்கள் அல்லாதவற்றுக்கும் இடையே உள்ள வெளிப்படையான குழப்பத்தில் இருந்து தோன்றியதே. மரக்கட்டுகளையோ கற்களையோ மற்ற பாரங்களையோ நம்முடைய முதுகில் இருந்து மற்றவர்களின் முதுகுக்கு மாற்றுவது சாத்தியம். அதேபோல், நம்முடைய துயரங்களையோ துன்பங்களையோ மற்றவர்களுக்கு மாற்றுவதும் அவர்கள் நமது பாரங்களைச் சுமப்பதும் சாத்தியமே என்று அந்த அநாகரிக மனிதன், அதாவது தொல் மனிதன் கற்பனை செய்கிறான்’’.

  பலியாடு

  மேற்கண்ட கற்பனையின் அடிப்படையிலேயே. தீமைகளையும் நோய்களையும் பாவங்களையும் மாற்றியமைக்க விலங்குகள், பறவைகள் மற்றும் பிற பொருள்களை மனிதன் பயன்படுத்துகிறான். இப்படி பயன்படுத்தும் பொருட்களை ‘பலியாடு’ (Scopegoat) என குறிக்கப்படுகிறது.

  தீய மந்திரங்களான பில்லி, சூனியம் முதலான ஏவல்களையும், உயிரினங்களுக்கு நோய்நொடிகளை உண்டாக்குவதற்காக மேற்கொள்ளப்படுபவை அழிப்பு மந்திரங்கள் ஆகும். இந்தவகையில், வசிய மந்திரம் தவிர பெரும்பாலான பிற தீய மந்திரங்கள் அழிப்பு மந்திரங்கள் என்றே வகைப்படுத்தப்படும்.

  (மந்திரம் பகுதி தொடரும்)

   சான்றெண் விளக்கம்

  1. சிவசுப்பிரமணியன்.ஆ, மந்திரமும் சடங்குகளும், காலச்சுவடு பதிப்பகம், 2015, ப.37.

  2. மேலது, ப.39.

  3. Levi-Strauss,The Savage of Mind, 1966.

  4. Malinowski, Coral Gardens and their magic, 1935.

  5. R. R. Marett, The Threshold of Religion, 1929.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai