பங்குச் சந்தையை திசை திருப்பிய "2011'
கடந்த 2009, 2010 ஆகிய இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஏறுமுகம் கண்டிருந்த பங்குச் சந்தைக்கு இந்த ஆண்டு (2011) போதாத காலமாக மாறிவிட்டது. உயர்ந்து வந்த பணவீக்கம், வங்கி வட்டி விகிதம் உயர்வு, உலக அளவில் நிலவி


கடந்த 2009, 2010 ஆகிய இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஏறுமுகம் கண்டிருந்த பங்குச் சந்தைக்கு இந்த ஆண்டு (2011) போதாத காலமாக மாறிவிட்டது.
உயர்ந்து வந்த பணவீக்கம், வங்கி வட்டி விகிதம் உயர்வு, உலக அளவில் நிலவிய பொருளாதார தேக்க நிலை மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் நிலவி வரும் நிதி நெருக்கடி போன்றவை நிதிச் சந்தைகளை சர்வதேச அளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதன் தாக்கம் பங்குச் சந்தைகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து இதுவரை கண்டிராத குறைந்தபட்ச அளவைப் பதிவு செய்ததும் பங்குச் சந்தையின் சரிவுக்குக் காரணமாகியது. மேலும், உள்நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை உள்பட பல நெருக்கடிகளும் என்று சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
சர்ச்சைக்கு உள்ளாகிய முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், அனில் அம்பானி தலைமையிலான அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனங்கள், அதானி மற்றும் வேதாந்தா குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில் 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி ஆகிய இரண்டும் இந்த ஆண்டு சுமார் 25 சதவீதம் சரிந்துள்ளது. மேலும், புதிய குறைந்தபட்ச அளவையும் பதிவு செய்து முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மட்டுமின்றி புரோக்கர்களையும், வல்லுநர்களையும் திகைப்படையச் செய்துள்ளது.
சென்செக்ஸ் இந்த ஆண்டு இதுவரை 5052 புள்ளிகளை (-25%) இழந்து 15,454-ல் நிலைகொண்டுள்ளது. சென்செக்ஸ் டிசம்பரில் 15,135 வரை குறைந்து புதிய குறைந்தபட்ச அளவைப் பதிவு செய்தது. கடந்த ஆண்டு இறுதியில் சென்செக்ஸ் 20,509-ல் நிலைகொண்டிருந்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 1,517 புள்ளிகளை (-25%) இழந்து 4,624-ல் நிலைபெற்றுள்ளது.
இந்தியாவில் பங்குச் சந்தைகளை ஆட்டிப் படைத்து வரும் அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடுகளை வாபஸ் பெற்றதும் சந்தை இறங்கியதற்கு காரணம் என்கின்றனர்.
இவர்கள் கடந்த ஆண்டு (2010) சுமார் ரூ.1,33,266 கோடிக்கு (29.36 பில்லியன் டாலர்) முதலீடுகளை மேற்கொண்டனர். ஆனால், டிசம்பர் 19-ம் தேதி புள்ளிவிவரப்படி, இதுவரை சுமார் ரூ.2,497.50 கோடி அளவுக்கு (318.00 மில்லியன் டாலர்) பங்குச் சந்தையில் இருந்து முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
அதே சமயம், ரூ.39,637.50 கோடி அளவுக்கு (8.2 பில்லியன் டாலர்) கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது செபியின் புள்ளிவிவரத்திலிருந்து அறிய முடிகிறது.
கடந்த 2009-ல் சென்செக்ஸ் 7,817 புள்ளிகள் (81.03%) உயர்ந்தது. மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஒரே ஆண்டில் மிகவும் அதிகப் புள்ளிகள் உயர்ந்த பெருமையையும் பெற்றது. அடுத்த ஆண்டான 2010-ல் 3044 புள்ளிகள் (17.43%) உயர்ந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 2009-ல் 2241 புள்ளிகளும் (75.76%), 2010-ல் 933 புள்ளிகளும் (17.95%) உயர்ந்தது.
ஆனால், 2011-ல் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. எஃப்ஐஐக்கள் முதலீடுகளை வாபஸ் பெற்றதன் காரணமாக மும்பை பங்குச் சந்தையில் மொத்தமுள்ள 13-ல் 12 துறைகளின் குறியீட்டு எண்கள் (இன்டெக்ஸ்) சரிவைச் சந்தித்துள்ளது. இதில் பல கடும் சரிவைச் சந்தித்து கடந்த 52 வாரங்களில் புதிய குறைந்தபட்ச அளவையும் பதிவு செய்துள்ளது. நுகர்வோர் பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் (எஃப்óஎம்சிஜி) மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆதாயம் பெற்றுள்ளது. அதுவும் 9 சதவீதமே உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு நடந்துள்ள இந்த துயரம் அடுத்த ஆண்டும் தொடராமல் இருக்க வேண்டும் என்பதே பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக
உள்ளது.
சென்செக்ஸ் கடந்து வந்த பாதை
30 டிசம்பர் 2010 20,509
02 ஜனவரி 2011 18,327
31 ஜனவரி 17,823
28 பிப்ரவரி 19,445
01 மே 18,503
31 மே 18,845
30 ஜூன் 18,197
31 ஜூலை 16,676
01 செப்டம்பர் 16,453
02 அக்டோபர் 17,705
31 அக்டோபர் 16,123
30 நவம்பர் 15,543
30 டிசம்பர் 2011 15,454
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...