எங்கே செல்கிறது சென்செக்ஸ்...?
இந்த ஆண்டு கடும் சரிவைச் சந்தித்துள்ள மும்பை பங்குச் சந்தை, இன்னும் மீள முடியாத நிலை தொடர்கிறது.


இந்த ஆண்டு கடும் சரிவைச் சந்தித்துள்ள மும்பை பங்குச் சந்தை, இன்னும் மீள முடியாத நிலை தொடர்கிறது. ஆனால், அடுத்த ஆண்டில் (2016) பங்குச் சந்தை உத்வேகம் பெறும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
2014 மக்களவைத் தேர்தலையொட்டி, இந்திய பங்குச் சந்தைகள் வெகுவாக ஏற்றம் பெற்றன. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அப்போதும் சந்தை ஏற்றம் பெற்றது.
பொதுவாக பங்குச் சந்தையைப் பொருத்த வரையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல் 15 மாதங்களில் அதிக அளவு ஏற்றம் கண்டுள்ளது. ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பெரிதாக சாதனை நிகழவில்லை (பார்க்க அட்டவணை- வரலாறு கூறும் உண்மை).
அதாவது, 2014-ஆம் ஆண்டில் பங்குச் சந்தை சுமார் 30 சதவீதம் ஏற்றம் பெற்றது. ஆனால், அதன் பிறகு பங்குச் சந்தைகள் எதிர்பார்த்த திசையில் செல்லாமல் தத்தளித்தது. குறிப்பாக இந்த ஆண்டு (2015) பங்குச் சந்தைகள் பெரும் சவாலை எதிர்கொண்டன.
இந்நிலையில், சீன அரசு தனது நாணய மதிப்பை 3 முறை குறைத்ததைத் தொடர்ந்து, உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது.
அப்போது சென்செக்ஸ் ஆகஸ்ட் 24-ஆம் தேதி 1,153 புள்ளிகள் சரிந்து கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவைச் சந்தித்தது (பார்க்க அட்டவணை- சென்செக்ஸ் அதிகபட்சம் சரிந்த நாள்கள்).
மொத்தத்தில் சென்செக்ஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 10.2 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து இதுவரை சுமார் 10 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன. தற்போது சென்செக்ஸ் 25,044 புள்ளிகளிலும், நிஃப்டி 7,610 புள்ளிகளிலும் நிலைபெற்றுள்ளது.
உலக அளவில் நிலவிய பொருளாதார ரீதியிலான தாக்கம், உள்நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஏற்பட்ட தொய்வு, சரக்கு, சேவை வரி மசோதா விவகாரம், நில சீர்திருத்த மசோதா விவகாரம் போன்றவை சந்தைக்குப் பெரும் நெருக்கடியாக அமைந்தது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் எதிர்பாராத வீழ்ச்சியைச் சந்தித்தது. தொழில் நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகளும் சந்தை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போனதால் பங்குகள் விற்பனை தொடர்ந்து அதிகரித்தது.
இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது, இந்திய பங்குச் சந்தைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்படுகிறது. குறிப்பாக, வரும் 2016-ஆம் ஆண்டில் பங்குச் சந்தைகள் ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். நிதி ஆய்வு நிறுவனங்களும் இதே கணிப்பை வெளியிட்டுள்ளன.
இதற்குப் பல்வேறு சாதகமான காரணிகளை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து ஏறுமுகம் கண்டுள்ளது. குறிப்பாக நிகழ் நிதியாண்டின் (2015-2016) இரண்டாம் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4% உயர்ந்து சீனாவை முந்தியுள்ளது. இதே கால கட்டத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக இருந்தது.
இது ஒருபுறம் இருக்க, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. பணவீக்கமும் வெகுவாகக் குறைந்துள்ளது. நிகழ் கணக்குப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் உள்ளன.
இது போன்ற காரணங்கள் சந்தை மீள்வதற்கு ஊக்கம் அளிக்கும் என்று கணிக்கப்படுகிறது.இந்நிலையில், நாட்டின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி கடந்த அக்டோபர் மாதத்தில் 9.8% உயர்ந்தது. இது கடந்த ஆண்டு (2014) இதே மாதத்தில், பூஜ்ய நிலைக்கும் கீழே சென்று, (-)2.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினாலும், அது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்காது என்றும், அது பெரும்பாலும் இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலையையே ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக சரக்கு- சேவை வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது சந்தைக்குப் பெரும் பலமாக அமையும். பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்களிப்பு மட்டுமே சுமார் 1.5% முதல் 2% வரை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வரும் மாதங்களில் உத்வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் பங்குச் சந்தைக்கு கண்டிப்பாக உத்வேகம் அளிக்கக்கூடும்.
மும்பை பங்குச் சந்தை, தேசியப் பங்குச் சந்தை ஆகிய இரண்டும் அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 10% வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதாவது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, இதற்கு முன் பதிவு செய்த 52 வார அதிகபட்ச அளவுகளைத் தகர்த்துச் செல்லும் என்று மார்க்கெட் வட்டாரம் எதிர்பார்க்கிறது.
2015-இல் சென்செக்ஸ் கடந்து வந்த பாதை
மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 2015-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 29,182.95 புள்ளிகளில் நிலைபெற்றது. டிசம்பர் 1-ஆம் தேதி 25,638.11 புள்ளிகளில் நிலைபெற்றது. இந்த ஆண்டு இதுவரை சென்செக்ஸ் கடந்து வந்த பாதை:
ஜனவரி 1 29182.95
பிப்ரவரி 1 29361.50
மார்ச் 1 27957.49
ஏப்ரல் 1 27011.31
மே 1 27828.44
ஜூன் 1 27780.83
ஜூலை 1 28114.56
ஆகஸ்ட் 1 26283.09
செப்டம்பர் 1 26154.83
அக்டோபர் 1 26656.83
நவம்பர் 1 26145.67
டிசம்பர் 11 25044.43
அதிகபட்சம் சரிந்த நாள்கள்!
2009-ஆண்டுக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தையில் ஒரே நாளில் சென்செக்ஸ் குறியீட்டில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 24-இல் 1,153 புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாகும். வரலாறு கூறும் புள்ளிவிரவம் வருமாறு:
2008 ஜனவரி 21 2,062.20 புள்ளிகள்
2008 ஜனவரி 22 2,272.93 புள்ளிகள்
2008 பிப்ரவரி 11 1,007.15 புள்ளிகள்
2008 மார்ச் 17 1,022.25 புள்ளிகள்
2008 அக்டோபர் 10 1,088.60 புள்ளிகள்
2008 அக்டோபர் 24 1,204.88 புள்ளிகள்
2008 அக்டோபர் 27 1,003.68 புள்ளிகள்
2009 ஜூலை 6 953.61 புள்ளிகள்
2015 ஆகஸ்ட் 24 1,153.16 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...