வட்டியில்லா கடன் அளிப்பு முறை: இந்தியா வருமா இஸ்லாமிய வங்கிகள்
வங்கிக் கடன் இல்லாத நடுத்தர வர்க்கத்தினரை நம் நாட்டில் காண்பது மிக அரிது. வீட்டுக் கடன், வாகனக் கடன், நகைக் கடன் போன்றவற்றுக்கு வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டியே சோர்ந்துவிடுகின்றனர்.


வங்கிக் கடன் இல்லாத நடுத்தர வர்க்கத்தினரை நம் நாட்டில் காண்பது மிக அரிது. வீட்டுக் கடன், வாகனக் கடன், நகைக் கடன் போன்றவற்றுக்கு வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டியே சோர்ந்துவிடுகின்றனர்.
இந்தியாவின் முதுகெலும்பு என்று போற்றப்படும் விவசாயிகளோ வாங்கிய கடனுக்கான வட்டி கட்ட முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
வட்டியில்லாமல் கடன் கிடைக்குமா? அடாவடித்தனம் இல்லாமல் கடன் திருப்பி வசூலிக்கப்படுமா? என்பது அவர்களின் நீண்ட நாள் கனவு.
இதை நனவாக்கும் வகையில் வட்டியில்லா கடன்களை வழங்கும் இஸ்லாமிய வங்கிகளை இந்தியாவில் தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.
இஸ்லாமிய சட்டமான "ஷரிஅத்'தின்படி இயங்கும் இந்த வங்கிகளில் முதலீடு செய்யப்படும் தொகைக்கும் வட்டி வழங்கப்பட மாட்டாது; வாங்கும் கடன்களுக்கும் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது. இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வங்கிகள் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2008ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார சரிவால், நூற்றாண்டு கால பழைமை வாய்ந்த சர்வதேச வங்கிகளே நிதி நெருக்கடியில் சிக்கின. பொருளாதார மந்தநிலையால் வங்கிகளில் கடன் பெற்ற நிறுவனங்கள் வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால் உலகம் முழுவதும் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.
ஆனால், இந்த நிதி நெருக்கடி பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய வட்டியில்லா வங்கிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக வங்கிகளுக்குத் தொடர்ந்து லாபத்தையே ஈட்டிக் கொடுத்தன.
இது, வளர்ச்சி அடைந்த நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளை இஸ்லாமிய வட்டியில்லா வங்கியின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. கடனுக்கு வட்டி வசூலிக்காமல் வங்கிகளை வெற்றிகரமாக நடத்த முடியமா? என்ற கேள்விக்கு அப்போதுதான் விடை கிடைத்தது.
1975ஆம் ஆண்டு துபையில் முதல் இஸ்லாமிய வங்கி தொடங்கப்பட்டது. வட்டி பெறும் வங்கிகளைவிட அதிக லாபம் தருவதால் இஸ்லாமிய வட்டியில்லா வங்கிகள் முதலீட்டாளர்களை அதிகம் கவருகின்றன.
2009ஆம் ஆண்டு வரை 36 நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த இஸ்லாமிய வங்கிகள் தற்போது 75 நாடுகளுக்கு விரிவடைந்துள்ளன.
வட்டியில்லா கடன்: ஒப்பந்த அடிப்படையிலேயே இஸ்லாமிய வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்றன. வங்கியில் செய்யப்படும் முதலீடு, பெறப்படும் கடன் ஆகிய எதற்கும் வட்டியே கிடையாது. முதலீட்டால் ஏற்படும் லாபம், நஷ்டம் ஆகியவற்றை வாடிக்கையாளர்களும், வங்கிகளும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வகையான ஒப்பந்தங்கள் பல்வேறு வகையில் உள்ளன.
தொழில் கடன் (முதாரபா): தொழில்முனைவர் தங்கள் உழைப்பை மூலதனமாக வைத்து வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கடன் பெறுவார். இதில் வரும் லாபத்தை வங்கியும் தொழில்முனைவோரும் ஒப்பந்தப்படி பகிர்ந்து கொள்வார்கள். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் அது வங்கியைச் சாரும். தொழில்முனைவோருக்கு அவரது உழைப்பு மட்டும்தான் நஷ்டம். தொழில்முனைவோர் நஷ்டம் ஏற்படக் கூடாது என தனது முழுத் திறனை வெளிப்படுத்துவதால் பெரும்பாலும் லாபம்தான் ஏற்படுகிறது.
இதனால் சாதாரண தொழில்முனைவோருக்கும் வங்கிக் கடன் கிடைக்க வழிவகை செய்கிறது. பெரும்பாலான இந்திய வங்கிகள் சொத்து பின்பலமின்றி கடன் வழங்குவதில்லை. பெரு நிறுவனங்கள், பணக்காரர்கள் மட்டும் எளிதாக கடன் பெறுகிறார்கள். மல்லையா போன்றவர்கள் வங்கியில் பெற்ற பெருங்கடனை எதில் முதலீடு செய்கிறார்கள் என்று தெரிவிப்பதில்லை. பின்னர் தொழிலில் நஷ்டம் என்று கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பி செலுத்துவதில்லை. இது வங்கிகளுக்கு வாராக் கடனாக மாறிவிடுகின்றன.
ஆனால், இஸ்லாமிய வங்கிகள் தொழில்முனைவோருக்குத் தேவையான உபகரணங்களைத் தாங்களே வாங்கிக் கொடுத்து, ஒப்பந்த அடிப்படையில் தாங்களும் பங்குதாரர்களாக இணைந்து செயல்படுவதால், வங்கிகளுக்கு எப்போதும் நஷ்டம் ஏற்படுவதில்லை.
இதேபோல் வீட்டுக் கடனும் வட்டியில்லாமல் குறிப்பிட்ட லாபத்தை வைத்து பங்கு பத்திரமாக அவ்வப்போது வாங்குவதாலும் அல்லது மாத வாடகை முறையில், கடன் தொகையைக் கால வரையறை இல்லாமல் செலுத்துவதாலும் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுவதில்லை.
வீட்டுக் கடன் தொகையை செலுத்த முடியவில்லை என்றால் அதுவரை வாங்கிய பங்குப் பத்திரங்களை உடனடியாக விற்றுவிடலாம்.
கூட்டு முயற்சிக் கடன் (முஷாரகா): ஒரு விமான நிலையமோ அல்லது பெரிய கட்டுமானத் திட்டத்தையோ நிறைவேற்றப் பெருந்தொகை வட்டியில்லாமல் வழங்கப்படும்.
இதில் முதலீட்டாளர்களும், வங்கியும் பங்குதாரர்களாக சேர்ந்து திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்துடன் லாப, நஷ்ட விகிதத்தை முடிவு செய்து ஒப்பந்தம் மேற்கொள்வார்கள். திட்டம் முடிவடையும் வரையில் வட்டியில்லாமல் கடன் வழங்கி, பின்னர் அதில் வரும் லாபம், நஷ்டத்தை குறிப்பிட்ட காலத்துக்கு பகிர்ந்து கொள்வார்கள். வாகனக் கடன், நிரந்தர வைப்பு போன்ற திட்டங்களும் இஸ்லாமிய வங்கிகளில் உள்ளன.
ஆடம்பரங்களில் முதலீடு இல்லை: சூதாட்டம், ஆயுத உற்பத்தி, ஐ.பி.எல், ஆபாசம், மதுபானம் போன்ற துறைகளுக்கு இந்த வங்கிகள் கடன் வழங்குவதில்லை. மாறாக வேளாண் உற்பத்தி, கட்டமைப்பு, கல்வி, உணவு, ஜவுளி போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் துறைகளில் மட்டுமே முதலீடு செய்கின்றன. இந்த வங்கிகளில் முதலீடு செய்ய சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தயாராக உள்ளன. பெரும் பணக்காரர்களாக உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்கள் நாட்டில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடமும் இது தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இஸ்லாமிய வங்கிகளை நம் நாட்டில் உள்ள தேசிய வங்கிகளில் ஒரு பிரிவாக படிப்படியாக அமல்படுத்தலாம் என்றும் இதற்காக மத்திய அரசு அரசாணை மட்டும் வெளியிட்டால் போதும் என்றும் ரிசர்வ் வங்கி மத்திய நிதியமைச்சகத்துக்கு அண்மையில் பரிந்துரைத்தது. இது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
2 லட்சம் கோடி டாலர்: இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்லாமல், ஜப்பான், சிங்கப்பூர், பிரிட்டன், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளிலும் வட்டியில்லா வங்கிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
கம்யூனிஸ நாடான சீனாவும் இஸ்லாமிய நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க கடந்த ஆண்டுமுதல் இஸ்லாமிய வங்கிகளை தொடங்கிவிட்டது. வேகமாக வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவிலும், சீனாவிலும் முதலீடு செய்ய வளைகுடா நாடுகள் முன்வருகின்றன. இந்தியாவில் இந்த முதலீடு சுமார் 2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதுடன், திறமை உள்ள சாதாரண தொழில்முனைவோரும் வளர்ச்சி அடைவார்கள். இந்தியாவும் பொருளாதாரத்தில் வல்லரசாகும்.
முஸ்லிம்களுக்கு மட்டும்தான் கடனா?
"இஸ்லாமிய வங்கிகள் அனைவருக்கும் பொதுவானவை. தொழில் முனைவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒப்பந்தத்தின்படி வட்டியில்லா கடன் வழங்கப்படும்' என்று இஸ்லாமிய நிதியத்துக்கான இந்திய மையத்தின் (ஐசிஐஎஃப்) பொதுச்செயலர் ஹெச். அப்துர் ரகீப் தெரிவித்தார்.
இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகளைக் கொண்டு வர கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை இவர் மேற்கொண்டு வருகிறார். அவர் மேலும் கூறுகையில், "மலேசியாவில் உள்ள இஸ்லாமிய வங்கிகளில் 40 சதவீதம் முஸ்லிம் அல்லாதவர்கள் உள்ளனர். இதேபோல் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம் அல்லாதவர்கள் இந்த வங்கிகள் மூலம் கடன் பெற்று லாபகரமாக தொழில் நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் தொடங்கினால் ஏழை மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படும், சிறு வணிகர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். அனைவருக்கும் வட்டியில்லா கடன் வழங்கி, ஏழைகளையும் பணக்காரர்களாக இஸ்லாமிய வங்கிகள் மாற்றும்; இந்தியாவின் வளர்ச்சிக்கும் வித்திடும் என்பதால் மத்திய அரசு உடனடியாக இஸ்லாமிய வங்கிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என்றார்.
இஸ்லாமிய வங்கி முதலீடுகளில் முதல் 9 இடத்தில் உள்ள நாடுகள்
சவூதி அரேபியா 31.70%
மலேசியா 16.70%
ஐக்கிய அரபு அமீரகம் 14.60%
குவைத் 10.50%
கத்தார் 7.70%
துருக்கி 5.80%
இந்தோனேசியா 3.80%
பஹ்ரைன் 1.70%
பாகிஸ்தான் 1.20%
உலக பொருளாதார
கூட்டமைப்பின் 2015-ஆம் ஆண்டு புள்ளிவிவரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...