மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேலும் ஜொலிக்கப் போகும் தங்கம்!

தங்கம் என்றவுடன் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் அனைவருக்கும் நம்மை அறியாமலேயே ஓர் ஈர்ப்பு வந்துவிடுகிறது.

News image
Updated On :10 ஜூலை 2016, 8:07 pm

எம். சடகோபன்

தங்கம் என்றவுடன் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் அனைவருக்கும் நம்மை அறியாமலேயே ஓர் ஈர்ப்பு வந்துவிடுகிறது. இப்போது 10 கிராம் சொக்கத் தங்கத்தின் (பியூர் கோல்ட்) விலை கிட்டத்தட்ட ரூ.32 ஆயிரத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது. இன்றைய நிலவரப்படி ரூ.31,950-இல் உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இந்த நிலையை எட்டியுள்ளது. ஓர் ஆண்டில் லாபம் அமெரிக்க டாலர் மதிப்பில் 16 சதவீதமாகவும், இந்திய ரூபாய் மதிப்பில் 24 சதவீதமாகவும் உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில், எப்போதுமே தங்கத்துக்கு மவுசு சற்று அதிகம்தான். குறிப்பாக கிராமப்புறங்களில் தங்கம் சேமிப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளனர். இப்போது நகர்ப்புறங்களிலும் பல்வேறு வகைகளில் தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளதை புள்ளி விவரங்களின் வாயிலாக அறிய முடிகிறது. குறிப்பாக "பிரெக்ஸிட்' வாக்கெடுப்புக்கு பிறகு தங்கத்துக்கான மவுசு இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் அதிகரித்துள்ளது. "பிரெக்ஸிட்' முடிவு வெளியான அன்று முன்பேர வர்த்தகச் சந்தையில், 1 அவுன்ஸ் (31.1035 கிராம்) தங்கத்தின் விலை சுமார் 100 டாலர்கள் எகிறியது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், தங்கத்தின் விலை மேலும் உயருமா? அல்லது கடந்த ஆண்டுகளைப் போல உச்சாணியிலிருந்து சரியுமா? என்ற பதற்றம் பொதுமக்களிடமும், முதலீட்டாளர்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது.

ஆனால், உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக தங்கத்துக்கு மவுசு மேலும் உயரும் என்றே பெரும்பாலான சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை ரூ.34 ஆயிரத்தை முத்தமிடும் என்று கணித்துள்ளனர். நியூயார்க் பண்டகச் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் இப்போதைய விலையான 1,360 டாலரிலிருந்து 2 மாதங்களில் 1,400 டாலராக உயரும் என்று ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் கணித்துள்ளது. மேலும், சர்வதேச அரசியல், நாணயச் சந்தை, பொருளாதாரம் ஆகியவற்றில் ஸ்திரதன்மை தொடரும் பட்சத்தில், 1 அவுன்ஸ் தங்கம் 1,500 டாலரை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறுகிறது அந்நிறுவனம். அதாவது இந்திய ரூபாயில் சொல்லப் போனால் 10 கிராம் தங்கம் ரூ.36,000-க்கு செல்லவும் வாய்ப்பு.

கடந்த 2015 ஆண்டின் முற்பகுதிக்கு முன்பு வரை 3 ஆண்டுகளாக தங்கத்துக்கு மவுசு சற்று குறைந்திருந்தது. ஆனால், "பிரெக்ஸிட்' வாக்கெடுப்புக்குப் பிறகு தங்கத்துக்கு திடீர் மவுசு ஏற்பட்டுவிட்டது எனப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தின் விலை பெரும்பாலும் அமெரிக்க டாலரில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் நவம்பரில் நடைபெள்ள அதிபர் தேர்தல் மற்றும் அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய யூனியனில் நிலவும் ஸ்திரமற்ற பொருளாதார நிலை உள்ளிட்டவற்றால் மற்ற நாடுகளின் நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். இதுவும் தங்கம் மீதான மோகம் அதிகரிக்க வாய்ப்பு உண்டாக்கும்.

இதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு வரிசையில் தங்கத்துக்கும் தற்போது மதிப்பளிக்கலாம். இதுவே முதலீட்டுக்குத் தக்க தருணம். நீண்ட கால முதலீட்டாளர்கள் கோல்ட் பாண்டுகளில் முதலீடுகளை அதிகரிக்கலாம் என்று வல்லுநர்கள் யோசனை தெரிவித்து வருகின்றனர்.

முதலீட்டாளர்களுக்கு தங்கம் கடந்த ஓராண்டில் சுமார் 17% லாபம் அளித்துள்ளது. வெள்ளி (1 கிலோ) சுமார் 29% லாபம் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி ரூ.36,500 ஆக இருந்த வெள்ளியின் விலை இப்போது ரூ.47,000-க்கு முன்னேறியுள்ளது.

தங்கத்தைவிட வெள்ளிக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளியில் முதலீடு செய்வது சிறப்பு என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், அதிக ரிஸ்க்கை ஜீரணிக்கக் கூடிய முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை சிறிதளவு உயர்த்தியது. மேலும், இந்த ஆண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து, தங்கத்தில் முதலீடு ஏற்ற } இறக்கத்துடன் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போதைய உலகப் பொருளாதார நிலை, அமெரிக்க பொருளாதார வளர்ச்சி நிலவரம், பணவீக்கம் உள்ளிட்டவற்றை மத்திய வங்கி கவனமாக கண்காணித்து வருகிறது. இதனால், வட்டி விகிதம் உயர்த்தப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் மீதான முதலீடு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க உலக அளவில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகள் இந்த ஆண்டு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள சீன பங்குச் சந்தைகள் 2015 ஜூலையிலிருந்து இதுவரை சுமார் 47% வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு முதல் 12 வாரங்களில் மட்டும் தங்கம் விலை 18% உயர்ந்துள்ளது. ஆனால், டோவ் ஜோன்ஸ் 8.3%, எல் அண்ட் பி பூல் 8.8%, நாஸ்டாக் பங்குச் சந்தை 13.4% வீழ்ச்சி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சுரங்கங்களில் தங்கம் உற்பத்தி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 100 டன் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. (கடந்து ஆண்டு உற்பத்தி 3,150 டன்.) இது தங்கத்தின் தேவைப்பாட்டை அதிகரிக்கச் செய்து, அதன் விலை மேலும் உயரச் செய்யும் என்கின்றனர் நகைக் கடை வியாபாரிகள்.

இந்தியாவைப் பொருத்தவரையில், தென்மேற்குப் பருவ மழை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன் காரணமாக வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். இதனால், கிராமப் பொருளாதாரம் உயரும். மேலும், ஜூலை மாதத்திலிருந்து பண்டிகைக் காலம் தொடங்குகிறது. அப்போது ஆபரணத் தங்கம் வாங்க மக்கள் அதிக நாட்டம் கொள்வர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,000 டாலருக்கும் கீழே செல்ல வாய்ப்ப்பு குறைவு என்றும், முதலீட்டுக்கு இதுவே நல்ல தருணம் என்றும் பதிவு செய்யப்பட்டது. அப்போதிலிருந்து தொடர்ந்து தங்கம் ஏறுமுகம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது முன்பேர வர்த்தகத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,366 டாலர் ஆக உள்ளது. ஆனால், வரலாற்று அதிகபட்ச விலை 1,920.84 டாலராக 6.9.2011-இல் பதிவாகியுள்ளது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.