பங்குச் சந்தை: ஆகஸ்ட் "கரடி' சரித்திரம் மாறுமா
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப் பெரிய பங்குச் சந்தைகளான தேசிய, மும்பை பங்குச் சந்தைகள் ஆகஸ்ட் மாதங்களில் "கரடி'யின் பிடியிலேயே இருந்து வந்துள்ளதை புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.


கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப் பெரிய பங்குச் சந்தைகளான தேசிய, மும்பை பங்குச் சந்தைகள் ஆகஸ்ட் மாதங்களில் "கரடி'யின் பிடியிலேயே இருந்து வந்துள்ளதை புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு நிலைமை எப்படி இருக்கும் என்று முதலீட்டாளர்களும், தின வர்த்தகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
ஜூலையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி-50 சுமார் 4% ஏற்றம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப (டெக்னிக்கல்) அடிப்படையில் பார்த்தால் சந்தை மேலே செல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். முன்பேர வர்த்தகத்தில் சந்தை மேலே செல்லும் என்ற எதிர்பார்ப்பில்,"நிஃப்டி-50 ஆகஸ்ட் 9,000 கால் ஆப்ஷன்' மற்றும் சந்தை கீழே வரும் என்ற எதிர்பார்ப்பில் "8,500 புட் ஆப்ஷன்' ஆகிய இரண்டும் அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் பார்த்தால் 9,000 கால் ஆப்ஷன் சுமார் 40 லட்சம் கான்ட்ராக்டுகள் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளன. எனவே, அதிகபட்சமாக 9,000 புள்ளிகளும், குறைந்தபட்சமாக 8,500 புள்ளிகளும் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தொழில்நுட்ப ரீதியான கணக்கு தெரிவிக்கிறது. இருப்பினும் ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் சந்தை மிகுந்த தள்ளாட்டத்தில்தான் இருந்தது.
ஏற்கெனவே ஆகஸ்ட் மாதத்துக்கான முன்பேர வர்த்தக கான்ட்ராக்டுகள் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிவிட்டன. பங்குச் சந்தை இதே நிலையில் சென்றால் நிஃப்டி-50 மீண்டும் 9,000 புள்ளிகளை தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சந்தை வல்லுநர்களும், புரோக்கிங் நிறுவனத்தினரும் கணித்து வருகின்றனர்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் (2006-2015) பங்குச் சந்தையின் புள்ளிவிவரத்தைப் பார்த்தால், "காளை'க்கு ஆகஸ்ட் நல்ல மாதமாக அமையவில்லை. மாறாக கரடியின் ஆதிக்கம் அதிகம் இருந்துள்ளது. 2006-இல் மட்டுமே சுமார் 8.6 சதவீதம் உயர்ந்துள்ளது. 2008 முதல் 2010 வரை மிகச் சிறிதளவாக 0.60 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. மற்ற ஆண்டுகளில் 2 முதல் 8 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதாவது இந்த ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு சராசரியாக 5 சதவீதம் நஷ்டத்தை அளித்த மாதமாக ஆகஸ்ட் இருந்துள்ளது என்பதே உண்மை. 2001, ஆகஸ்டில் நிஃப்டி 8.8 சதவீதம், 2015-இல் 6.6 சதவீதம், 2013 -இல் 5.8 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. மொத்தத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பங்குச் சந்தை முதலீடு சராசரியாக 1 சதவீதம் நஷ்டத்தை அளித்துள்ளது.
பொதுவாக இந்திய பங்குச் சந்தைகளை அன்னிய முதலீட்டாளர்கள்தான் ஆட்டிப் படைத்து வருகின்றனர். அவர்கள் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் ரூ.9,000 கோடிக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். மாறாக உள்நாட்டு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை விற்றுள்ளனர்.
தேசிய, மும்பை பங்குச் சந்தை ஜூலை மாதத்தில் மட்டும் 4% உயர்ந்துவிட்டது. இதனால், காளையின் முன்னேற்றம் ஆகஸ்டில் தொடருமா என்ற ஐயப்பாடும் இருந்து வருகிறது.
சந்தை முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு வந்தாலும், முதலீட்டாளர்களும், தின வர்த்தகர்களும் பங்குகளை வாங்கும் போதும், விற்கும் போதும் நஷ்ட இலக்கை வைத்துக்கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மாநிலங்களவையில் ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. மசோதாவை நிறைவேற்றுவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், இந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் ரிசர்வ் வங்கிக் கொள்கைக் கூட்டத்தில் வங்கி வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இவை அனைத்தும் சந்தைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்று சந்தை வல்லுநர்களும், புரோக்கிங் நிறுவனத்தினரும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை சந்தையில் வர்த்தகம் முடிந்த போது 8,638.50 புள்ளிகளில் நிஃப்டி-50 நிலைகொண்டுள்ளது. மேலும் கடந்த வாரத்தில் நிஃப்டி, 8,674.70 வரை உயர்ந்து 52 வார (ஓராண்டு) அதிகபட்ச அளவையும் பதிவு செய்துள்ளது. அதாவது இந்த அதிகபட்ச அளவை மீண்டும் பிரேக் செய்து தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மேல் நிலைகொண்டிருந்தால், காளை மேலும் துள்ளிக்குதித்து விளையாடும்.
ஆனால், பங்குச் சந்தையைப் பொருத்தவரையிலும், ஒரே நாள் இரவில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளதை புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. எனவே, பல்வேறு காரணிகளால் கரடியின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டால் தொழில்நுட்ப ரீதியான கணக்கில் நிஃப்டி 8,500 புள்ளிகளை பிரேக் செய்யும் பட்சத்தில் சந்தை வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று கணித்துள்ளனர். மொத்தத்தில் நிஃப்டி 8,500-8,890 என்ற கோட்டுக்குள் இருக்கும் என்றே பெரும்பாலான வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.
சந்தை மேலே சென்றாலும் சரி, கீழே வந்தாலும் சரி முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தாங்கள் வாங்கியுள்ள / விற்றுள்ள பங்குகளுக்கு நஷ்ட இலக்கு வைத்து வர்த்தகம் செய்வதே புத்திசாலித்தனம் என்கிறது சந்தை வட்டாரம்.
சந்தையின் போக்கை கணிக்க முடியாதவர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. இருப்பினும், முதலீட்டாளர்களைப் பொருத்தவரையிலும், நிஃப்டி 8,300 புள்ளிகளுக்கு வந்தால் முதலீட்டுக்கு சிறந்த இடம் என்கிறது சந்தை வட்டாரம்.
நிஃப்டி-50 கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டு வாரியாக ஆகஸ்ட் மாதங்களில் அளித்த லாபம் / நஷ்டம் விவரம்:
ஆண்டு லாபம் /நஷ்டம்
2015 -6.60%
2014 +3.00%
2013 -5.80%
2012 +0.60%
2011 -8.80%
2010 +0.60%
2009 +0.60%
2008 +0.60%
2007 -0.40%
2006 +8.60%
சராசரி -0.86%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...