உற்சாகத்தில் அரசு வங்கிப் பங்குகள்!
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்திய பங்குச் சந்தைகள் நேர் கோட்டில் மேலும், மேலும் உற்சாகத்துடன் பயணித்து வருகின்றன.


இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்திய பங்குச் சந்தைகள் நேர் கோட்டில் மேலும், மேலும் உற்சாகத்துடன் பயணித்து வருகின்றன. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் கடந்த ஒரு மாதத்தில் 1.70 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோன்று மூன்று மாதங்களில் 7.40 சதவீதம், 6 மாதங்களில் 7.10 சதவீதம், ஓராண்டில் 16.90 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சென்செக்ஸ் 32.20 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.
தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2.20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோன்று மூன்று மாதங்களில் 7.80 சதவீதம், 6 மாதங்களில் 7.70 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 18.60 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நிஃப்டி. மொத்தத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 37.60 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ரத்து நடவடிக்கை, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் எதிர்பாராத வெற்றி, சர்வதேச அளவில் நிலவும் அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்து வந்தன. ஆனால், இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து மீண்டும் ஏறுமுகம் கண்டது. குறிப்பாக, பொதுத் துறை வங்கிப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, ஐடிபிஐ வங்கி, ஓரியண்ட்டல் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஆகிய 11 பொதுத் துறை வங்கிப் பங்குகளை உள்ளடக்கியது நிஃப்டி பேங்க் குறியீடு. இந்தக் குறியீடு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்செக்ஸ், நிஃப்டியை விஞ்சி சுமார் 6.60 சதவீதம் உயர்ந்துள்ளது.
மூன்று மாதங்களில் 13.50 சதவீதம், 6 மாதங்களில் 15.20 சதவீதம், ஓராண்டில் 47.40 சதவீதம், ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிஃப்டி பேங்க் குறியீடு 5.40 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மூன்று ஆண்டுகளில் 21.30 சதவீதம்தான் லாபத்தை அளித்துள்ளது.
தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 11 பொதுத் துறை வங்கிப் பங்குகள் கடந்த வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் குறைந்தபட்சம் 3 சதவீதம் முதல் அதிகபட்சம் 9 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடனை வெகுவாகக் குறைக்கும் வகையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பல்வேறு ஊக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் விளைவாக பங்குச் சந்தையில் பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு அதிகத் தேவை காணப்படுகிறது என்று சந்தை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் பொதுத் துறை வங்கிப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு அதிகபட்சமாக 37 சதவீதமும், குறைந்தபட்சமாக 3 சதவீதமும் லாபம் அளித்துள்ளது.
இதில் பேங்க் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக 36.37 சதவீதம் உயர்ந்துள்ளது. சிண்டிகேட் வங்கி (17.40%), கனரா வங்கி (20.46%), ஆந்திரா வங்கி (19.93%), ஓரியண்ட்டல் வங்கி (21.10%) ஆகியவை வெகுவாக உயர்ந்துள்ள பட்டியலில் வந்துள்ளன. யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி, பரோடா வங்கி பங்குகள் 7 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. ஆனால், மிகவும் பாரம்பரிய வங்கியும், மிகப் பெரிய வங்கியுமான பாரத ஸ்டேட் வங்கிப் பங்கின் விலை கடந்த ஒரு மாதத்தில் 2.59 சதவீதம்தான் ஏற்றம் பெற்றுள்ளது. இதேபோல ஐடிபிஐ வங்கிப் பங்கும் 2.97 சதவீதம்தான் லாபம் அளித்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான பங்குகள் 52 வார அதிகபட்ச விலைக்கு அருகில் வர்த்தகம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வரும் நாள்களிலும் பொதுத் துறை வங்கிப் பங்குகள் நல்ல முறையில் பரிணமிக்க வாய்ப்பு இருப்பதாக பங்குத் தரகு நிறுவனங்கள், பங்கு ஆய்வாளர்கள், நிதி நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து முதலீட்டுக்கு வாங்க வேண்டிய பொதுத் துறை வங்கிப் பங்குகளையும் முதலீட்டாளர்களுக்கு அவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
வங்கியின் பெயர் தற்போதைய விலை 52 வார அதிகம் / குறைவு
சிண்டிகேட் வங்கி ரூ.082.75 ரூ.086.45 / ரூ.059.20
கனரா வங்கி ரூ.358.00 ரூ.361.70 / ரூ.170.78
யூனியன் வங்கி ரூ.171.50 ரூ.173.00 / ரூ.104.50
அலகாபாத் வங்கி ரூ.082.45 ரூ.088.40 / ரூ.049.10
ஆந்திரா வங்கி ரூ.068.90 ரூ.069.80 / ரூ.044.70
ஐடிபிஐ வங்கி ரூ.078.00 ரூ.086.40 / ரூ.062.75
ஓரியண்ட்டல் வங்கி ரூ.169.30 ரூ.172.50 / ரூ.076.75
பேங்க் ஆஃப் இந்தியா ரூ.185.40 ரூ.189.55 / ரூ.078.40
பரோடா வங்கி ரூ.187.65 ரூ.191.70 / ரூ.128.25
எஸ்பிஐ ரூ.289.40 ரூ.298.75 / ரூ.166.40
பஞ்சாப் வங்கி ரூ.168.75 ரூ.170.70 / ரூ.071.05
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...