அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்செக்ஸ் அடுத்த இலக்கு 35,700!

பங்குச் சந்தை என்றாலே ஏற்றம், இறக்கம் நிறைந்தது என்பதை அனைவரும் அறிவர்.

News image
Updated On :4 டிசம்பர் 2017, 4:59 am

எம். சடகோபன்

பங்குச் சந்தை என்றாலே ஏற்றம், இறக்கம் நிறைந்தது என்பதை அனைவரும் அறிவர். ஆனால், பங்குச் சந்தையில் நடப்பது சூதாட்டம்தான் என்று ஒரு சிலர் சொல்லி வந்தாலும், நீண்ட கால அடிப்படையில் நல்ல வலுவான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரும் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைப் பெற்றுள்ளனர் என்பதற்கு பங்குச் சந்தை வரலாறு கூறுகிறது.

நல்ல சந்தை மூலதன மதிப்பைக் கொண்டுள்ள முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து இதுவரை சுமார் 23 சதவீத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவை இரண்டும் 31 சதவீதம் வரை ஏற்றம் பெற்றது நினைவிருக்கும். உலகளாவிய பொருளாதாரக் காரணிகள், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, மத்தியில் ஆளும் அரசின் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள், அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் தாக்கம் அனைத்தும் உடனடியாக பங்குச் சந்தையில் அவ்வப்போது எதிரொலிப்பதன் காரணமாக சந்தையில் ஏற்றமும், இறக்கமும் இருப்பது சகஜமான ஒன்று. நிறுவனப் பங்குகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பது சரித்திரம் கூறும் உண்மை. இதற்குப் பல்வேறு சான்றுகளைக் கூற முடியும்.

இந்த அடிப்படையில் பார்த்தால், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி-50, நிஃப்டி நெக்ஸ்ட்-50, நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால் கேப் பட்டியல்களில் இடம் பெற்றுள்ள முன்னணி நிறுவனப் பங்குகள் கடந்த ஓராண்டில் நல்ல லாபத்தை அளித்துள்ளன. நிஃப்டி-50 பட்டியலில் 9 நிறுவனப் பங்குகள் தவிர்த்து மற்றவை லாபம் அளித்த பட்டியலில் உள்ளன.
 
மேலும் சில நிறுவனப் பங்குகள் குறைந்தபட்சமாக 3 முதல் 20 சதவீதம் வரை லாபம் அளித்த பட்டியலில் வந்துள்ளன. அதே சமயம், இப்பட்டியலில் உள்ள பார்மா நிறுவனப் பங்குகள் மட்டும் கடும் பின்னடைவைச் சந்தித்து முதலீட்டாளர்களுக்கு கடும் நஷ்டத்தை அளித்த பட்டியலில் உள்ளன. 

இதேபோல ஆட்டோ, பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி, ஆயில், ஐடி, எரிசக்தி, நிதி சேவை, மீடியா, மெட்டல் ஆகிய துறை நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான அளவு லாபத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன. சில பங்குகள் 100 சதவீதத்துக்கும் மேல் லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளது. இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்கு இரட்டிப்பு லாபத்தை (203%) அளித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 33,865 வரை உயர்ந்து 52 வார அதிகபட்ச அளவை கடந்த நவம்பர் 7-ஆம் தேதி பதிவு செய்துள்ளது. அதே சமயம், சென்செக்ஸ் 25,753 வரை குறைந்து கடந்த ஆண்டு டிசம்பர் 26-இல் 52 வார குறைந்தபட்ச அளவைப் பதிவு செய்துள்ளது. இதேபோல நிஃப்டி, அண்மையில் 10,490 வரை உயர்ந்து 52 வார அதிகபட்ச அளவைப் பதிவு செய்துள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு டிசம்பரில் 7,893 வரை குறைந்து 52 வார குறைந்தபட்ச அளவைப் பதிவு செய்துள்ளது. இதனால், நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை பங்குச் சந்தை அளித்துள்ளது என்பது கண்கூடு. 

இந்நிலையில், சர்வதேச முதலீட்டு வங்கியும், புரோக்கிங் நிறுவனமுமான மோர்கன் ஸ்டான்லி வரும் 2018-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் சென்செக்ஸ் 35,700 புள்ளிகûளைத் தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ளது. மேலும், உலக அளவில் பணப்புழக்கமும், பொருளாதாரமும் வளர்ச்சி பெறும் பட்சத்தில் சென்செக்ஸ் 2018 டிசம்பருக்கு பிறகு அதிவிரைவாக 41,500 புள்ளிகளைக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கணித்துள்ளது. இந்தக் கணிப்பு பங்குச் சந்தையில் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வோரிடையே அதிக கவனத்தைப் பெற்றுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொருத்தவரையில், பருவமழை சிறப்பாக இருந்தது.

நுகர்வோரிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, வளர்ச்சி பெற்று வரும் கிராமப் பொருளாதாரம், செழிப்பான விவசாயம், தொழில் துறை வளர்ச்சி, உத்வேகம் பெறும் பொருளாதார வளர்ச்சி, மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் தொழில் துறையினர் கொண்டுள்ள அதீத நம்பிக்கை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்வு ஆகியவை வரும் ஆண்டில் பங்குச் சந்தை மேலும் உத்வேகம் பெறுவதற்கு முக்கியக் காரணிகளாக உள்ளன என்று மோர்கன் ஸ்டான்லி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவை தவிர ஏற்றுமதி, நுகர்வுத் திறன், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள கூடுதல் மூலதனம் ஆகியவையும் சந்தைக்கு மேலும் வலுசேர்க்கும். இதன் காரணமாக முதலீட்டாளர்களிடையே பங்குச் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவர் என்றும் மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. 

மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-19 நிதியாண்டில் 8 சதவீதமாக இருக்கும் என்றும், பொருளாதாரக் கொள்கைகளில் பெரிய அளவில் பாதகமான செய்திகள் வருவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு எனக் கருதப்படுவதால், பங்குச் சந்தை மேலும் வலுப்பெறுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

அதே சமயம், 2019-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு அதிக நிதியை மத்திய அரசு செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது என்ற எச்சரிக்கையையும் மோர்கன் ஸ்டான்லி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

குறிப்பாக கடந்த 2010-ஆம் ஆண்டில் இருந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி நிறுவனங்களின் வருவாய், நிகர லாபம் உள்ளிட்டவை சில காலாண்டுகளில் தொய்வைச் சந்தித்திருந்தாலும், பெரும்பாலான காலாண்டுகளில் ஏறுமுகத்திலேயே இருந்துள்ளது என்பதையும் மோர்கன் ஸ்டான்லி சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், சந்தைக்குப் பண வரவும், மக்களிடம் ஏற்பட்டுள்ள பணப் புழக்கமும் தனது கணிப்புக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாகக் கூறியுள்ளது. இதையெல்லாம் விட வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகளிடையே இந்திய பங்குச் சந்தை வரும் ஆண்டு சிறப்பான ஏற்றத்தைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சர்வதேச முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் ஸாக்ஸ், தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி அடுத்த ஆண்டு டிசம்பரில் 11,600 புள்ளிகளைத் தொடும் என்று கணித்துள்ளது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்நிலையில், உள்கட்டமைப்பு, நுகர்பொருள் உற்பத்தி, வங்கி, மென்பொருள் உள்ளிட்ட துறை நிறுவனப் பங்குகள் வரும் நாள்களில் முதலீட்டாளர்களின் கூடுதல் கவனத்தைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. 

இது தவிர, மத்தியில் ஆளும் பாஜக, அடுத்த மாதம் நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்கும் பட்சத்தில் அது பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்று சந்தை வல்லுநர்கள், ஆய்வாளர்கள், பங்குத் தரகர்கள் நம்புகின்றனர். இதனால், அடுத்த ஆண்டும் முதலீட்டாளர்களிடமும் கொண்டாட்டம் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை...! 

எதிர்பார்ப்பு என்ன?

30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இந்த ஆண்டு இதுவரை 23 சதவீதமும், மிட்கேப், ஸ்மால் கேப் இன்டெக்ஸ் 50 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து இதுவரை, மொத்தம் நடைபெற்ற 228 வர்த்தக நாள்களில் 11 நாள்களில் மட்டுமே சென்செக்ஸ் 1 சதவீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

தொழில்நுட்ப ரீதியாகவும், அடிப்படைகளின் ரீதியாகவும் பார்க்கும் போது சந்தை சற்று அதிக விலையில் வர்த்தகம் நடைபெறுவதாகவே கருதப்படுகிறது. இதனால், நல்ல ஆரோக்கியமான சரிவை சந்தை சந்தித்தால் மீண்டும் வேகமாக எழுச்சி பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உருவாகும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆனால், இதுவரை ஒரு நல்ல ஆரோக்கியமான சரிவு ஏற்படவில்லை. இதனால், முதலீட்டாளர்கள் கையில் பணத்தை தயாராக வைத்துக் கொண்டு மூதலீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

இது இந்தியாவில் மட்டும் அல்ல; உலக அளவில் முன்னணி பங்குச் சந்தையிலும் இதே நிலைதான் உள்ளது. தாற்காலிக பீதியின் காரணமாக பங்குச் சந்தை சரிவைச் சந்தித்திருக்கலாம். ஆனால், இந்த ஆண்டு ஓர் ஆரோக்கியமான சரிவை இதுவரை காணவில்லை.

தொழில்நுட்ப ரீதியாக சென்செக்ஸ் 30,000 புள்ளிகள், நிஃப்டி 9,800 புள்ளிகள் என்ற அளவுக்கு கீழே வரும் பட்சத்தில் அதை முதலீட்டுக்கு உகந்த தருணமாக முதலீட்டாளர்கள் பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக பங்குச் சந்தை வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

5 ஆண்டுகளில் 8,500% உயர்ந்த அவந்தி ஃபீட்ஸ்!

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகத்தில் உள்ள சிறுநிறுவனப் பங்கான (ஸ்மால் கேப்) அவந்தி ஃபீட்ஸ் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 8,527 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. இதேபோல, இண்டோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ் (4,376%), சமன்லால் சேத்தியா (1,878%), லா ஓப்லா ஆர்ஜி (1572%) ஆகியவை 1000 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து நல்ல லாபத்தை அளித்துள்ளது. 

இதேபோல பஜாஜ் கார்ப், திரிவேணி டர்பைன், இ-கிளார்க் சர்வீஸஸ், நவ்நீத் எஜுகேஷன், மயூர் யுனிகோட்டா, ஓரியண்ட் ரிஃப்ராக்ஷன், ஸ்வராஜ் என்ஜின்ஸ், தனுகா அக்ரி டெக், எம்பிஎஸ், பாலி மெடிக்யூர், அதுல் ஆட்டோ, கஜாரியா செராமிக்ஸ், வி-கார்டு, கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ், வினாத்தி ஆர்கானிக்ஸ், ரிலாக்úஸா ஃபுட்வேர், அலெம்பிக் பார்மா, அல்கைல் அமினோஸ், பிஎல் இண்ட்ஸ்ட்ரீஸ், சுப்ரஜித் என்ஜினீயரிங் ஆகிய நிறுவனப் பங்குகள் 5 ஆண்டுகளில்150 முதல் 900 சதவீதம் வரை ஏற்றம் கண்டுள்ளன. மேலும், ஹாக்கின்ஸ் குக்கர், கேர் ரேட்டிங்ஸ், டிபி கார்ப், ûஸடஸ் வெல்நஸ், விஎஸ்டி இண்ட்ஸ்ட்ரீஸ் ஆகியவை 25 முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இது போன்று பல்வேறு சிறு நிறுவனப் பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் அதீத ஏற்றத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக லாபம் அளித்த பங்குகள்

ஓராண்டில் 100 சதவீதத்துக்கு மேல் லாபம் அளித்துள்ள முன்னணி நிறுவனப் பங்குகள்

நிறுவனம் லாபம் %
டைட்டன் 149
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் 138
ஜிண்டால் ஸ்டீல் 138
ஷோபா டெவலப்பர்ஸ் 134
ஜிண்டால் ஸ்டெயின்லஸ் 130
டாடா குளோபல் 130
பிரெஸ்டிஜ் 113
பிசி ஜுவல்லர்ஸ் 113
அதானி என்டர்பிரைசஸ் 107
டிஎல்எஃப் 100
ஓராண்டில் 50 முதல் 100 சதவீதம் வரை லாபம் அளித்த நிறுவனப் பங்குகள்
வோல்டாஸ் 95
ஐஜிஎல் 91
டிவிஎஸ் மோட்டார்ஸ் 94
டால்மியா பாரத் 93
ஜூபிலி ஃபுட் 91
எல்&டி பைனான்ஸ் 88
பஜாஜ் ஃபைனான்ஸ் 86
ரிலையன்ஸ் 84 
சன் டிவி 80
மதர்சுமி 73
பஜாஜ் ஃபின் சர்வீஸஸ் 70
சிஇஎஸ்சி 70
மெக்டோவல் 66
டாடா ஸ்டீல் 64
பேஜ் இண்டஸ்ட்ரீஸ் 64
மாருதி சுஸýகி 63
பிஇஎல் 62
செஞ்சுரி டெக்ஸ் 60
பிரிட்டானியா 58
வெல்ஸ்பன் கார்ப் 58
ஹிந்துஸ்தான் காப்பர் 58
பேங்க் ஆஃப் இந்தியா 56
செயில் 54
ஹெச்டிஎஃப்சி பேங்க் 54
இந்தியன் பேங்க் 53
ஃபெடரல் பேங்க் 53
இண்டஸ் இந்த் பேங்க் 52
ஐபிஹவுசிங் ஃபைனான்ஸ் 52
பாரத் ஃபோர்ஜ் 52
அசோக் லேலண்ட் 51
ஹெச்யுஎல் 50
பார்தி ஏர்டெல் 50
நவநீத் 50
10-70 சதவீதம் வரை நஷ்டம் அடைந்த பங்குகள்
ஆர்காம் 67
லூபின் 46
கிளென்மார்க் 37
டாக்டர் ரெட்டீஸ் 31
அஜந்தா பார்மா 30
சன் பார்மா 26
ஸ்டார் 26
டாடா மோட்டார்டிவிஆர் 23
ஐடிஎஃப்சி பேங்க் 20
அமரராஜா பேட்டரி 18
ஆயில் இந்தியா 14
டாடா மோட்டார்ஸ் 13
டிஷ் டிவி 12
கோல் இந்தியா 12
பிஎஃப்சி 11
டிவிஸ் லேப் 10
கிளாக்úஸா 10 
ஐடிபிஐ 11

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.