

கரூரில் விசைத்தறி மூலம் திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள், கிச்சன் டவல்கள், கால்மிதியடிகள், தலையணை உறைகள் ஏற்றுமதித் தரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், டென்மார்க், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. காடா துணிகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இந்த வீட்டு உபயோக ஜவுளி மூலம் ஏற்றுமதியில் பாகிஸ்தான், வங்கதேசம், சீனா போன்ற நாடுகளைப் பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ரூ.3,000 கோடி முதல் ரூ. 4,000 கோடி வரை அந்நிய செலாவணித் தொகையை ஈட்டித் தந்த இந்தத் தொழில் நாளடைவில் சாயப் பட்டறை பிரச்னை, விவசாயிகள் தூக்கிய போர்க்கொடி போன்ற காரணங்களால் பின்னடைவை சந்தித்தது. தற்போது ஆண்டுக்கு ரூ.2,000 கோடி முதல் ரூ. 1,800 கோடி வரை அயல்நாடுகளுக்கு வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாகி வருகிறது.
இந்நிலையில் ஜிஎஸ்டியாலும், நூல் விலையில் ஸ்திரத்தன்மை இல்லாததாலும், தற்போது உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் துவங்கியுள்ள வேலைநிறுத்தத்தினாலும் ஏற்றுமதி ஜவுளித்தொழில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை உறுப்பினரும், கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க உறுப்பினருமான ஆர்.ஸ்டீபன்பாபு கூறுகையில், கரூர் மாவட்டத்தில் சுமார் 400 ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு நூல்களை சாயமேற்றிக் கொடுத்தல், முடிபோடுதல், தையல் போன்றவற்றை செய்து கொடுக்கும் துணை நிறுவனங்கள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த தொழிலில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர்
ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கெனவே, சாயக் கழிவு சுத்திகரிப்பு இயந்திரம் இல்லாததைக் காரணம் காட்டி 90 சதவீத சாயப் பட்டறைகள் நீதிமன்ற உத்தரவின்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏற்றுமதி ரகத் துணிகளுக்கு சாயமேற்ற நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்குச் சென்று வருகிறோம். ஏற்கெனவே வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி குறிப்பிட்ட விலையில் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம்.
இந்த நிலையில், இதுவரை ஏற்றுமதி ரக ஜவுளிக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவீத வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஆர்டர்கள் கொடுக்கும்போது எங்களது துணிகளுக்கு சாயமேற்றுவதில் இருந்து முடிபோடும் வரை 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆர்டர்கள் செய்து கொடுப்போர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் எங்களது உற்பத்தி முடங்கியுள்ளது.
மேலும் நூல் விலையும் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற கண்காட்சியில் கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிடைத்த சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான ஜவுளி ஆர்டரில் இன்னும் 20 சதவீதம் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். நம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை சுட்டிக்காட்டி தற்போது இந்த ஆர்டர்களில் 60 சதவீத அளவு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டன.
மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கையால் நமது பாரம்பரிய ஜவுளி ஏற்றுமதியை அயல்நாடுகளுக்கு தாரை வார்த்துகொடுப்பது போல உள்ளது. நாளுக்கு நாள் இழப்பை சந்தித்து வரும் கரூர் ஜவுளி ஏற்றுமதியைக் காப்பாற்ற நூல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக ஒரு குழு அமைத்து ஆலோசனை நடத்த வேண்டும். முதலில் நூல்களை மில்களில் இருந்து மொத்தமாக வாங்கிப் பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களது கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறச் செய்ய வேண்டும்.
கைத்தறிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது போல, ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த தொழிலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த ஒருங்கிணைந்த சாயப்பூங்கா கட்டுமானப் பணியை உடனே துவங்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்காவிடில் கரூரில் ஜவுளித்தொழில் நாளடைவில் இருந்த சுவடே இல்லாமல் மறைந்துவிடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.