திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வீழும் கச்சா எண்ணெய் விலை...: பங்குச் சந்தைக்கு பாதகமா?

நாளுக்கு நாள் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.ஞாயிற்றுக்கிழமை  நிலவரப்படி, கச்சா எண்ணெயில் விலை பேரல் ஒன்றுக்கு 54.1 டாலராக (சுமார் ரூ.3,794)ஆக இருந்தது.

News image
Updated On :23 டிசம்பர் 2018, 10:06 pm

நாளுக்கு நாள் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை  நிலவரப்படி, கச்சா எண்ணெயில் விலை பேரல் ஒன்றுக்கு 54.1 டாலராக (சுமார் ரூ.3,794)ஆக இருந்தது.
சனிக்கிழமையைவிட இது 1 சதவீதத்துக்கும் மேல் குறைவு. இந்த விலை, வருகிற நாள்களில் மேலும் குறையக் கூடும் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.
இப்படி கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதற்கு என்ன காரணம்?
அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் லிபியாவில், அரசுக்கும், பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதன் காரணமாக அந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.
மேலும், அமெரிக்காவும் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை மளமளவென்று அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக அந்த நாட்டுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் கனடா போன்ற நாடுகள், தற்போது அதிக அளவில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளன.
உக்ரைனிலும், மத்தியக் கிழக்கு நாடுகளிலும் கடுமையான அரசியல் பதற்றம் நிலவினாலும், கச்சா எண்ணெயை அந்த நாடுகள் அபரிமிதமாக உற்பத்தி செய்து வருகின்றன.
எப்போதுமே உற்பத்தியும், அளிப்பும் அதிகரிக்கும்போது விலை குறையும் என்ற விதியின் அடிப்படையில், இதுபோன்ற காரணங்களினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது.
ஈரான் மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் கச்சா எண்ணெய்ச் சந்தையில் கடும்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கப்படும் நிலையிலும், அந்த நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா சலுகை அறிவித்தது.
எனவே, தற்போதைய சூழலில் அந்தப் பொருளாதாரத் தடையும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைவது, இந்திய பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கவலையை சிலருக்கு ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.
""கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைவதால், இந்தியச் சந்தையில் எரிபொருள்களின் விலைகள் குறையும். மேலும், எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக இந்திய அரசு செலவிடும் தொகையும் பெருமளவில் மிச்சமாகும்.
இது நமது ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கே ஆரோக்யத்தை தரும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, பணவீக்கம் போன்ற விஷயங்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு, ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை ஸ்திரமாக வைத்திருக்கவும், குறைப்பதற்கும் கூட வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழல்கள் பங்குச் சந்தைக்கு சாதகமாகவே அமையும்'' என்கிறார்கள் அவர்கள்.
எனினும், இந்த விலை வீழ்ச்சி எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்தால் ஒட்டுமொத்த ஏற்றுமதி நிறுவனங்களுமே பாதிக்கப்படும் என்பதையும் சில நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இருந்தாலும், இந்தச் சூழல்கள் இறக்குமதி நிறுவனங்களுக்கு சாதமாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அந்த வகையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பங்குச் சந்தைக்கு மிகப் பெரிய பாதிப்பு இருக்காது என்றே நம்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.