அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பங்குச் சந்தையிலும் "மோடி' மேஜிக்!

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான நான்கு ஆண்டு கால பாஜக ஆட்சியில் தேர்தல் வெற்றி மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும் மோடி மேஜிக் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

News image
Updated On :11 ஜூன் 2018, 5:19 am

எம். சடகோபன்

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான நான்கு ஆண்டு கால பாஜக ஆட்சியில் தேர்தல் வெற்றி மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும் மோடி மேஜிக் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, 2014-இல் ஆட்சிக்கு வந்தது. அது முதல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெரும்பாலானவற்றில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதற்கு மோடி மேஜிக்கே காரணம் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். அதேபோல, மோடி மேஜிக் பங்குச் சந்தைகளிலும் விட்டு வைக்கவில்லை.

இந்த நான்கு ஆண்டுகளில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மொத்தம் 300-க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர பங்குகள் முதல் தரப் பங்குகள் அளவுக்கு மல்டிபேக்கர்களாக ஜொலித்துள்ளன. 
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து கடந்த மே 27-ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்தக் கால கட்டத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை அளவைப் பதிவு செய்தது. இந்த ஆண்டு ஜனவரியில் சென்செக்ஸ் 36,443.98 புள்ளிகள் வரையிலும் நிஃப்டி 11,171 புள்ளிகள் வரையிலும் உயர்ந்து வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. ஆனால், அதன் பிறகு தற்போது சிறிதளவு சுணக்கம் கண்டாலும், மத்திய அரசின் உத்வேகம் பெற்று வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் சந்தையை அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மேலும் உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும் பொருளாதார நிலைகள் சாதகமாக இல்லாத நிலையையும் வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை அபரிமிதமாக ஏற்றம் பெற்றுள்ளன. இதன் மூலம், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் மூலதன மதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, 2014, மே 26-இல் ரூ.85 கோடியாக இருந்த மும்பை பங்குச் சந்தை மூலதன மதிப்பு 2018, மே 25 அன்று ரூ.147 கோடியாக உயர்ந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 2014, மே 26 அன்று சென்செக்ஸ் 24,716.88 புள்ளிகளில் நிலை கொண்டிருந்தது. அதன் பிறகு நான்கு ஆண்டுகளில் சுமார் 10,000 புள்ளிகள் ஏற்றம் பெற்று 2018-இல் 34,000 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்தது. இது 40 சதவீத உயர்வாகும்.

சிறிய நிறுவனப் பங்குகள்: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட சில சிறு நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் இன்டெக்ஸ், கடந்த 4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 90 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக 400 நிறுவனப் பங்குகளின் விலை 100 முதல் 6000 சதவீதம் வரை ஏற்றம் பெற்றது. இதில், யுனிப்ளை இண்டஸ்ட்ரீஸ், மிண்டா இண்டஸ்ட்ரீஸ் அவந்தி ஃபீட்ஸ், கேபிடல் டிரஸ்ட், கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்இஜி (ஹெக்), ஐஎஃப்பி இண்டஸ்டிரீஸ், டாடா மெட்டாலிக்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.

ஆனால், 2014 முதல் 2017 வரை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த சிறிய நிறுவனப் பங்குகள் (ஸ்மால் கேப்) இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பின்னடைவை சந்திக்கத் தொடங்கியுள்ளன. 

நடுத்தரப் பங்குகள்: சிறிய நிறுவனப் பங்குகளைப் போலவே, பட்டியலிடப்பட்டுள்ள நடுத்தர நிறுவனப் பங்குகளில் 38 நிறுவனப் பங்குகளின் விலை 100 முதல் 600 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதில் டால்மியா பாரத், ஐஐஎஃப்எல் ஹோல்டிங்க்ஸ், நாட்கோ பார்மா, என்பிசிசி, டிவிஎஸ் மோட்டார், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், பயோகான், அசோக் லேலண்ட், ராஜேஸ் எக்ஸ்போர்ட்ஸ், 3எம் இண்டியா உள்ளிட்டவை அடங்கும்.

குறிப்பிட்ட சில நடுத்தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் இன்டெக்ஸ் நான்கு ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சிறிய நிறுவனப் பங்குகளைப் போல நடுத்தர பங்குகளின் விலையும் அடிவாங்கத் தொடங்கியுள்ளது.

உயர் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்த்தது போல அமையவில்லை. மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு, அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வாங்கும் நடுத்தர பங்குகளுக்கு செபி விதித்துள்ள கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்டவை சிறிய, நடுத்தர பங்குகளின் விலை வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

மதிப்பீட்டு அடிப்படையில் பார்த்தால், முதல் தர நிறுவனப் பங்குகளுடன் ஒப்பிடுகையில், நடுத்தர பங்குகளின் விலை சற்று அதிகமாகவே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

பொதுவாக பங்குச் சந்தையைப் பொருத்தமட்டில் காளையின் ஆதிக்கம் முழுவீச்சில் இருக்கும் போது, சிறிய நிறுவனப் பங்குகளின் விலை உச்சத்துக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்நிறுவனப் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்து வருகின்றன. இன்னும் பங்குச் சந்தையில் 7-10 சதவீதம் வீழ்ச்சி ஏற்படும் பட்சத்தில் சிறிய நிறுவன பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்களிடம் நல்ல ஆதரவு கிடைக்கும் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள். அதேசமயம், நல்ல லாபம் அளித்துள்ள நடுத்தரப் பங்குகளை தொடர்ந்து 3-4 ஆண்டுகள் வைத்துக் கொள்ள விரும்பாத பட்சத்தில் முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில் லாபத்தை பதிவு செய்து வெளியேறிவிடலாம் என்று வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெய்: கச்சா எண்ணெய், பருவ மழை ஆகியவற்றில் மோடி தலைமையிலான அரசுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக அதிர்ஷ்டம் கை கொடுத்ததாகவே கருதப்படுகிறது. அதே சமயம், நிதிப் பற்றாக்குறையும், நடப்பு கணக்கப் பற்றாக்குறையும் உயர்ந்தது. ஆனால், ஐந்தாம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். கச்சா எண்ணெய் விலை இன்னும் ஏற்றம் காணும் பட்சத்தில் அது பணவீக்க உயர்வுக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே சமயம் கடந்த 4 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதமாக இருந்தது. இது முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது சராசரியாக 7.6 சதவீதமாக இருந்தது. அண்மையில்தான் இது 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரூபாய் மதிப்பு: கடந்த நான்கு ஆண்டு கால பாஜக ஆட்சியின் போது, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2014, மே 26 அன்று ரூபாயின் மதிப்பு ரூ.58.72 ஆக இருந்தது. ஆனால், 2018, மே 25 அன்று இது ரூ.67.75 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது நான்கு ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பில் 15 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலமாக பங்குச் சந்தை, நிதி சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் மேற்கொண்டிருந்த முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்து 2019-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ரூ.70-க்கு செல்லும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

மேலும் ஜொலிக்குமா?

கடந்த நான்கு ஆண்டுகளில் அவ்வப்போது ஏற்பட்ட பொருளாதார, அரசியல் நெருக்கடி ஆகியவற்றால், பங்குச் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. இதன் காரணமாக ஏற்றம், இறக்கம் இருந்தாலும், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் சாதனை அளவைப் பதிவு செய்துள்ளது. மோடி தலைமையிலான அரசின் திட்டங்களும், அதன் செயல்பாடுகளும் நேர்கோட்டில் இருப்பது, பல்வேறு கொள்கை முடிவுகளில் அரசின் ஆணித்தரமான நிலைப்பாடு ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்ற நம்பிக்கை மார்க்கெட் வட்டாரத்தில் நிலவுகிறது.

இந்நிலையில், பங்குச் சந்தையில் மோடி மேஜிக் தொடரும் என்றே வல்லுநர்கள், ஆய்வாளர்கள், புரோக்கிங் நிறுவனத்தினர் கருதுகின்றனர். குறிப்பாக, 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பங்குச் சந்தைக் குறியீட்டு எண்கள் மேலும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொடும் என்று கணித்துள்ளனர். ஏற்கெனவே, சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி, இந்த நிதியாண்டு முடிவில் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளுக்கும், நிஃப்டி 13,000 புள்ளிகளுக்கும் உயர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சென்செக்ஸ் கடந்து வந்த பாதை

கடந்த 2014, மே 26 முதல் 2018
மே 25 வரையிலும் சென்செக்ஸ் கடந்து வந்த பாதை
2014 மே 26 24,716.88
2015 மே 25 27,809.35
2016 மே 25 25,230.36
2017 மே 25 30,301.64
2018 மே 25 34,924.87
2018 ஜூன் 35,443.67

இந்த ஆண்டு ஜனவரி

முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை சென்செக்ஸ் கடந்து வந்த பாதை
ஜனவரி 35,965.02
பிப்ரவரி 34,184.04
மார்ச் 32,968.68
ஏப்ரல் 35,160.36
மே 35,322.38
ஜூன் 35,443.67

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி)

நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் சரக்கு, சேவை வரியை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்து அடிக்கடி பேசப்பட்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகளிடையே பலத்த எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை இந்த ஆட்சியின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள அனைத்து மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. இதன் மூலம், வர்த்தகத்தை எளிதாக செய்யலாம் என்றும், சரக்கு பரிவர்த்தனைகள் நன்றாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. மேலும், பொருளாதார வளர்ச்சியில் ஜிஎஸ்டியின் பங்களிப்பு குறைந்தபட்சம் 1-2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பங்குச் சந்தைக்கு வலுச்சேர்க்கும் என்றே புரோக்கிங் நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.


ஏற்றத்துக்கு காரணம் என்ன?

கடந்த நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் மும்பை பங்குச் சந்தை 40 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. இதற்கு மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியும், அவரது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், முயற்சிகள்தான் காரணம் என்று சந்தை வட்டாரத்தில் கூறுகின்றனர். கருப்புப் பணத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட உயர் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா, குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தரும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் செயல்பாட்டால் சென்செக்ஸ் ஏற்றம் சாத்தியமாகியுள்ளது என்கின்றனர். 

உயர் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை

நாட்டில் புழுக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 ஆகியவை செல்லாது என கடந்த 2016, நவம்பர் 8-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியம் என்றும் கூறினார். இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தின. ஆனால், மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டது. இது பொருளாதார வளர்ச்சிக்கு நேர்மறைவானதாகவே இருக்கும் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ரொக்கம் இல்லா பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது பொருளாதார வளர்ச்சிக்கு கை கொடுக்கும் என நம்பப்படுகிறது. 

அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டம்

பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா), தேசம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுவாக்கில் அனைவருக்கும் வீடு அளிக்கும் விதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடிசைவாசிகள் உள்பட நகர்ப்புற ஏழை மக்களின் வீட்டுவசதித் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு அதிகபட்ச ஆண்டு வருமானம் 3 லட்சமும், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு ஆண்டு வருமானம் 3 முதல் 6 லட்சம் வரையிலும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவைச் சேர்ந்த பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் உதவிபெறத் தகுதி உடையவர்கள். ஆனால், குறைந்த வருவாய்ப் பிரிவினரோ, கடன் வசதியோடுகூடிய மானியத்திட்டத்தின் மூலம் மட்டுமே பயன்பெறமுடியும்.

மேலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட திட்டங்களும் செயல்ப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களுக்கு 5 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி யுஜ்வாலா யோஜ்னா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு வலுச்சேர்க்கும் என்று நம்பப்படுவதால் இது பங்குச் சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஜன்-தன் யோஜனா

நாட்டில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற நோக்கில் பாஜக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் பிரதான் மந்திரி ஜன்-தன் திட்டம். இதன் மூலம் மொத்த மக்கள் தொகையில் வங்கிக் கணக்கில்லாத குறைந்தபட்சம் 15 சதவீதம் பேருக்காவது வங்கிக் கணக்கு தொடங்குவதே இதன் லட்சியமாக இருந்தது. இதன் மூலம் ஒருவர் கணக்கு தொடங்கி தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர் வட்டி இல்லாமல் ரூ.5,000 வரை ஓவர் டிராஃப்டாக பெற முடியும். 

விபத்துக் காப்பீடாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும், ஜன்-தன் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் திடீரென உயிரிழக்க நேரிட்டால், ரூ.30,000 இழப்பீடும் வழங்கப்படும். இதன் மூலம் ஒருவருக்கு பணப் பரிவர்த்தனை, கடன் வசதி, காப்பீடு, ஓய்வூதியத் தொகை வழங்கல் உள்ளிட்டவை ஒரே குடையின் கீழ் வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.