மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

லார்ஜ், மிட், ஸ்மால் கேப்ஸ், முதலீட்டுக்கு சிறந்தது எது?

பங்குச் சந்தையில் முதலீடு என்பது மிகவும் இடர்பாடான ஒன்று என்று பரவலான கருத்து உள்ளது. இதற்கு ஆம் என்றே பதில் கூறலாம்.

News image
Updated On :12 மார்ச் 2018, 8:47 am

எம். சடகோபன்

பங்குச் சந்தையில் முதலீடு என்பது மிகவும் இடர்பாடான ஒன்று என்று பரவலான கருத்து உள்ளது. இதற்கு ஆம் என்றே பதில் கூறலாம். ஆனால், பங்குச் சந்தையில் நல்ல வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ள, வளர்ச்சி மேல் வளர்ச்சி பெற்று வரும் நிறுவனப் பங்குகளை நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் வாங்கிப் போட்டால், அது ஈட்டித் தரும் ஆதாயம் அபரிமிதமாக இருந்துள்ளது என்பதுதான் பங்குச் சந்தையின் புள்ளி விவர வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் புரிய வரும்.

இந்நிலையில், அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதுதான் முதலீட்டாளர்களிடம் எழும் தலையாய கேள்வியாக உள்ளது. உண்மையில் சொல்லப் போனால், கண்ணை மூடிக் கொண்டு பங்குச் சந்தையில் முதலீடுகளை மேற்கொண்டால் இடர்பாடு மிகவும் அதிகம் என்பது பங்குச் சந்தையின் வரலாறு. எனவே, பங்குச் சந்தையில் குறுகிய, நடுத்தர, நீண்ட காலம் என எந்த அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்வதற்கும் நிதி ஆலோசகர்கள், பங்குச் சந்தை வல்லுநர்கள், அனாலிஸ்ட்ஸ் என்று சொல்லப்படும் ஆய்வாளர்கள் ஆகியோரிடம் முறையான ஆலோசனைகளைப் பெற்று முதலீடுகளை மேற்கொள்ளும்பட்சத்தில் இடர்பாடு மிக, மிகக் குறைவாகவே இருக்கும். மேலும், முதலீட்டுப் பணம் மோசம் போகாது என்பதும் உண்மை. அதற்கு பல்வேறு காரணங்களை வல்லுநர்கள் எடுத்துரைக்கின்றனர்.
முதலீட்டுக்காக ஒரு குறிப்பிட்ட நிறுவனப் பங்கை வாங்குவதற்கு முன் பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது. அவை குறித்த முழு ஞானம் பெரும்பாலான முதலீட்டாளர்களிடம் இருப்பது மிக, மிக அரிது. அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் என்று சொல்லப்படும் நிதி நிலை அறிக்கை, வளர்ச்சி விகிதம், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு நிகர லாபம், பங்கு சம்பாத்தியம், புத்தக மதிப்பு, நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, போனஸ், டிவிடெண்ட், பங்குகள் பிரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக அந்தக் குறிப்பிட்ட நிறுவனம், அதன் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சி, நிகர லாபம், அந்த நிறுவனம் இடம் பெற்றுள்ள துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் உள்ளிட்டவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர். மேலும், அந்த நிறுவனம் நல்ல அடிப்படைகளைக் கொண்டிருந்தால் மட்டுமே அதன் வளர்ச்சி, நிகர லாபம் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும் என்பது வல்லுநர்களின் தீர்மானமான கருத்து. ஆனால், சில சமயங்களில் நல்ல அடிப்படைகளைக் கொண்டிராத நிறுவனப் பங்குகளின் விலை தாறுமாறாக உயர்ந்தாலும், திடீரென்று அதல-பாதாள சரிவைச் சந்தித்த வரலாறும் பங்குச் சந்தையில் உண்டு...! 

பொதுவாக முதல் தரப் பங்குகள் (லார்ஜ் கேப்ஸ்), நடுத்தர பங்குகள் (மிட் கேப்ஸ்), சிறு நிறுவனப் பங்குகள் (ஸ்மால் கேப்ஸ்) ஆகியவை பங்குச் சந்தையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பட்டியலுக்கும் தனித்தனியாக குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவை தற்போதைய சந்தை மூலதன மதிப்பை அடிப்படையாகக் கொண்டு லார்ஜ், மிட், ஸ்மால் கேப் என பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் நல்ல லாபம் பெறுவதற்கு எந்தப் பங்கில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் கேள்வி. சில நேரங்களில் நடுத்தர பங்குகள், சிறு நிறுவனப் பங்குகள் முதல் தரப் பங்குகளை காட்டிலும் நல்ல லாபத்தை அளித்திருந்தாலும், பல்வேறு தருணங்களில் ஏராளமான முதலீட்டாளர்களுக்கு கடும் நஷ்டங்களை அளித்து தூங்காத இரவுகளைக் கொடுத்துள்ளது என்பதே உண்மை. உதாரணமாக சுஸ்லான் எனர்ஜி உள்ளிட்ட சில பங்குகளைக் கூறலாம்.

ஒரு காலத்தில் முதல் தரப் பங்குகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த ரூ.2முகமதிப்பு கொண்ட சுஸ்லான் எனர்ஜி நிறுவனப் பங்கில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களுக்கு நல்ல அபரிமித லாபம் கிடைத்தது. ஆனால், தற்போது சுஸ்லான் எனர்ஜி வெறும் ரூ.10.96-இல் அதாவது 52 வார குறைந்தபட்ச அளவான ரூ.10.63-க்கு அருகில் வர்த்தகம் ஆகி வருகிறது. இந்நிறுவனப் பங்கில் முதலீடு செய்துவிட்டு விலையுயர்ந்த நிலையில் லாபத்தைப் பதிவு செய்யாத முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து வருகின்றனர். இதுபோன்று ஏராளமான நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்கள் சிக்குவது உண்டு. இதற்கு அந்தந்த நிறுவனத்தின் சந்தை செயல்பாட்டை சரிவர கணிக்காமல் இருந்ததே காரணமாகக் கூறலாம்.

மொத்தத்தில் பார்த்தால், நடுத்தர, சிறு நிறுவனப் பங்குகளைக் காட்டிலும், முதல் தரப் பங்குகளில் முதலீடுகளை மேற்கொண்டால் இடர்பாடு (ரிஸ்க்) மிகக் குறைவு என்கிறார்கள் வல்லுநர்கள். காரணம் அவை அனைத்தும் நல்ல வலுவான அடிப்படைகளைக் கொண்டிருக்கும். மேலும், முதல் தர நிறுவனங்களின் செயல்பாடு உடனுக்குடன் வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்கப்படுவது வழக்கம். அதே சமயம், நடுத்தர, சிறு நிறுவனங்களின் செயல்பாடு குறித்த தகவல்கள் எப்போதாவதுதான் தெரிவிக்கப்படுகின்றன. 

கடந்த 2017-ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தவர்களுக்கு, குறிப்பாக நடுத்தர, சிறு நிறுவனப் பங்குகளை வாங்கிப் போட்டிருந்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. அந்த ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி-50 ஆகியவை 27.50 சதவீதம் ஏற்றம் கண்டது. ஆனால், நடுத்தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் இன்டெக்ஸ் 46 சதவீதமும், சிறு நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் இன்டெக்ஸ் 58 சதவீதமும் லாபத்தை அளித்துள்ளது. இந்த நிலை 2013 முதல் தொடர்ந்து வந்தாலும், குறிப்பிட்ட பல பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கடும் நட்டத்தை அளித்துள்ளது என்பதும் உண்மை.

பங்குச் சந்தையில் பாதுகாப்பான முதலீடு என்று பார்த்தால், முதல் தரப் பங்குகள்தான் என்கின்றனர் வல்லுநர்கள். எப்போதும் நடுத்தர, சிறு நிறுவனப் பங்குகள் ஒரே மாதிரியாக ஒரே நேர்கோட்டில் முதலீட்டாளர்களுக்கு அபரிமித லாபத்தை அளிப்பது இல்லை என்பதை ஆணித்தரமாக கூற முடியும் என்கின்றனர் அவர்கள். எனவே, பாதுகாப்பான முதலீடு என்று பார்க்கும் போது, பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொகுப்பு நிதித் திட்டத்துக்கு (போர்ட்போலியோ) நடுத்தர, சிறு நிறுவனப் பங்குகளை குறைந்த எண்ணிக்கையிலும், முதல் தரப் பங்குகளை அதிக எண்ணிக்கையிலும் முதலீட்டுக்கு பரிந்துரைக்கின்றனர் என்பதுதான் நிதர்சன உண்மை. 

பங்குச் சந்தையைப் பொருத்தவரையிலும், நடுத்தர, சிறு நிறுவனப் பங்குகள் அவ்வப்போது நல்ல லாபத்தை அளித்தாலும் அவற்றில் ஒருவித அச்ச உணர்வுடன்தான் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

அதே சமயம் முதல் தரப் பங்குகளில் முதலீடு செய்யும் போது பெரிய அளவில் இடர்பாடு இருப்பதில்லை. எனவே, முதலீட்டுக்கு முதல்தரப் பங்குகளே சிறந்ததாக உள்ளன என்கின்றனர் நீண்ட காலமாக பங்குச் சந்தையில் முதலீடுகளை மேற்கொண்டுவரும் முதலீட்டாளர்கள்.

சந்தை மூல தன மதிப்பு

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிறுவனத்தின் மொத்த பங்குகளை தற்போதைய பங்கின் விலையுடன் பெருக்கி கிடைக்கும் தொகைதான் அந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பாகும். குறிப்பாக பட்டியலிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மொத்தம் 10,000 பங்குகள் உள்ளதாகக் கொண்டால், அதன் ஒரு பங்கு விலை தற்போது ரூ.10 ஆக இருந்தால், அதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.1 லட்சமாகும் (10,000 ஷ் ரூ.10).

முதலீட்டாளர்களை கவரும் பங்குகள்! 

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி -50 பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் தர பங்குகள் (லார்ஜ் கேப்ஸ்) கடந்த ஒரு மாதத்தில் மொத்தத்தில் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கவில்லை. ஆக்ஸிஸ் பேங்க், யெஸ் பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, பிபிசிஎல், இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ், அம்புஜா சிமெண்ட், ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, டாடா ஸ்டீல் ஆகியவை மட்டும்தான் 5 முதல் 10 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதில் வங்கிப் பங்குகள் பிஎன்பி மோசடி விவகாரம் குறித்து வெளியான செய்திகளாலும், அமெரிக்க அதிபர் உலோக இறக்குமதிக்கு 10-25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்ததால் ஸ்டீல் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன.

நிறுவனம் ஓராண்டு லாபம்/நஷ்டம் (%) ஒரு மாத நஷ்டம் (%)

ஆக்ஸிஸ் பேங்க் -0.62 -10.06
யெஸ்பேங்க் 2.70 -10.60
எஸ்பிஐ -6.02 -13.06
ஐசிஐசிஐ பேங் 17.68 -11.23
வேதாந்தா 20.94 -5.18
டாடா மோட்டார்ஸ் -26.10 -8.91
ஹிண்டால்கோ 16.38 -9.43
அம்புஜா சிமெண்ட் 4.33 -7.95
பிபிசிஎல் 3.33 -5.78
இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் 40.47 -7.16


சாதனையும்...! வேதனையும்...!

பிஎஸ்இ ஸ்மால் கேப் இன்டெக்ஸில் இடம் பெற்றுள்ளவற்றில் கடந்த 2017-ஆம் ஆண்டு 20 முதல் 570 சதவீதம் வரை ஏற்ற கண்டிருந்த பங்குகள் இந்த ஆண்டில் இதுவரை இரண்டு மாதங்களில் 30 முதல் 70 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அண்மைக் காலமாக ஊடகங்களில் அடிக்கடி பரபரப்பு செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கும் கீதாஞ்சலி ஜெம்ஸ், கடந்த 2017-ஆம் ஆண்டு மொத்தம் 21 சதவீதம் உயர்ந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜன-மார்ச் 5 வரையிலான காலத்தில் இரண்டு மாதங்களில் 70 சதவீதத்துக்கும் மேல் சரிவைக் கண்டுள்ளது. அதேபோல, 2017-இல் மொத்தம் 575 சதவீதம் ஏற்றம் கண்ட மொஹாதா இண்டஸ்ட்ரீஸ் இப்போது 35 சதவீதம் சரிவைச் சந்தித்த நிலையில் உள்ளது. மேலும், 2017-இல் அதிக லாபம் அளித்த பட்டியலில் இருந்த ஓரியண்ட் பேப்பர் (106%), வக்ராங்கீ (208%), ஜேபி இன்ஃப்ரா (223%), பிஎல் காஸ்யாப் சன்ஸ் (226%), ஜெபி பவர் வெஞ்சூர் (140%), ரத்தன் இந்தியா இன்ஃப்ரா (162%), ஐஎல் அண்ட் எஃப்எஸ் (118%), ஜேபி அசோசியேட்ஸ் (222%) ஆகியவை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 30 முதல் 70 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளன. 

நிறுவனம் 2017 டிசம்பர் விலை 2018 மார்ச் 5 விலை நஷ்டம் (%) 2017 லாபம்/நஷ்டம் (%)

கீதாஞ்சலி ஜெம்ஸ் 68.30 19.30 -71.74 21.10
ஓரியண்ட் பேப்பர் 141.40 40.00 -71.71 106.27
வக்ராங்கீ 421.00 162.55 -61.39 208.20
பனாஃபிக் 1.23 0.50 -59.35 -90.20
யாமினி இன்வெஸ்ட்மென்ட் 13.80 6.47 -53.12 -41.40
ஓம்கார் கெமிக்கல்ஸ் 73.55 36.05 -50.99 -53.79
ஜேபி இன்ஃப்ரா 23.93 12.06 -49.60 223.38
எல்ட்ரரோஸ்டீல் ஸ்டீல்ஸ் 5.76 3.08 -46.53 48.84
சுப்ரீம் இன்ஃப்ரா 120.35 69.15 -42.54 47.49
எஸ்ஆர்எஸ் ரியல் இன்ஃப்ரா 8.40 4.95 -41.07 -66.77
பிஎல் கெளஸியாப் சன்ஸ் 65.45 39.80 -39.19 226.43
ஜெபி பவர்வெஞ்சர் 9.52 5.80 -39.08 140.40
கேஸ்டெக்ஸ் டெக் 7.28 4.58 -37.09 13.95
ரத்தன் இந்தியா இன்ஃப்ரா 7.87 4.96 -36.98 162.33
ஐஎல் அண்ட் எஃப்எஸ் 31.35 19.85 -36.68 118.31
ஃபிளக்ஸி டஃப் 110.40 70.90 -35.78 -36.91
டயமண்ட் பவர் இன்ஃப்ரா 18.30 11.78 -35.63 -37.86
ஜேபிஎஃப் இண்டஸ்ட்ரீஸ் 225.10 147.30 -34.56 8.04
ஜேபி அசோசியேட்ஸ் 26.00 17.05 -34.42 222.18
மொஹோதா இண்ட்ஸ்ட்ரீஸ் 425.85 280.00 -34.25 576.49
பார்ஸ்வநாத் டெவலப்பர்ஸ் 30.30 20.10 -33.66 134.88


வேறுபாடு

முதல் தரப் பங்குகள்: பொதுவாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மார்க்கெட் கேப் என்று சொல்லப்படும் சந்தை மூலதன மதிப்பு ரூ.20,000 கோடிக்கு மேல் உள்ள நிறுவனங்கள் முதல் தரப் பங்குகளாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. இந்த நிறுவனங்கள், நடுத்தர, சிறு நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதல் பண்புகளைக் கொண்டிருக்கும். மேலும், ஒரே சீராக வருவாய், லாபம் ஈட்டும் திறனும் கொண்டிருக்கும். நடுத்தர, சிறுநிறுவனப் பங்குகளைக் காட்டிலும் முதல் தரப் பங்குகளில் முதலீடு செய்வோருக்கு இடர்பாடு (ரிஸ்க்) குறைவாகத்தான் இருக்கும்.
நடுத்தர, சிறுநிறுவனப் பங்குகள்: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளவற்றில் ரூ.5000 கோடி -ரூ.20000 கோடிக்குள் சந்தை மூலதனத்தைக் கொண்டிருக்கும் நிறுவனப் பங்குகள் நடுத்தரப் பங்குகள் (மிட்கேப்ஸ்) என்று அழைக்கப்படுகின்றன. அதே சமயம், ரூ.1000 கோடி - ரூ.5000 கோடி சந்தை மூலதனத்தைக் கொண்டிருக்கும் பங்குகள் சிறு நிறுவனப் பங்குகள் (ஸ்மால் கேப்ஸ்) பட்டியலில் இடம் பெறும்.

இவை இரண்டிலும் முதலீடு செய்யும் போது இடர்பாடு அளவு மிக அதிகம் இருக்கும். அதே சமயம், வருங்காலத்தில் நல்ல வளர்ச்சியைக் காணும் என்று அடையாளம் காணப்படும் நடுத்தர, சிறுநிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல அபரிமித லாபத்தை அளிக்கும். இதை சந்தை வல்லுநர்கள், ஆய்வாளர்கள் பல்வேறு ஆராய்ச்சி, ஆய்வுகளின் பயனாக கண்டுபிடித்து முதலீட்டுக்கு பரிந்துரை செய்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.