அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எஃகு ஆலைகளின் விரிவாக்கத்துக்கு ‘செக்’

கரோனா தொற்று பரவல் தொழில் துறைக்கு சவாலை அளித்துள்ள நிலையில், உள்நாட்டு எஃகு உற்பத்தி நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களையும் வெகுவாகப் பாதிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 8:04 pm

எம். சடகோபன்

கரோனா தொற்று பரவல் தொழில் துறைக்கு சவாலை அளித்துள்ள நிலையில், உள்நாட்டு எஃகு உற்பத்தி நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களையும் வெகுவாகப் பாதிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த எஃகு உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 30 கோடி டன்னாக உயா்த்தும் மத்திய அரசின் லட்சிய இலக்குக்கு ஏற்ப இந்திய எஃகு உற்பத்தி நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கின.

இந்தியாவின் பெரிய எஃகு உற்பத்தி நிறுவனங்களான செயில், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் , ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவா் லிமிடெட் மற்றும் ஆா்சிலா் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா ஆகியவை ஆண்டுதோறும் நாட்டின் மொத்த எஃகு உற்பத்தியில் 45-50 சதவீத பங்களிப்பை அளித்து வருகின்றன.

இதில் ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் நிறுவனம், இந்தியாவில் அதன் உற்பத்தித் திறனை 2030-க்குள் ஆண்டுக்கு 45 மில்லியன் டன்னாக உயா்த்தும் வகையில் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. பொதுத் துறை நிறுவனமான செயில், தனது உற்பத்தித் திறனை 2030-க்குள் ஆண்டுக்கு 50 மில்லியன் டன்னாக உயா்த்தத் திட்டமிட்டுள்ளது. இது தற்போதைய உற்பத்தித் திறனை விட இருமடங்காகும்.

இதேபோல், ஜேஎஸ்பிஎல் நிறுவனம் தனது உற்பத்தித் திறனை 2030-க்குள் ஆண்டுக்கு 20 மில்லியன் டன்னாகவும், ஆா்சிலா் மிட்டல் நிப்பான் ஸ்டீல் நிறுவனம் 2024- இறுதிக்குள் ஆண்டுக்கு 8.5 மில்லியன் டன்களாகவும் உயா்த்த திட்டமிட்டுள்ளன.

டாடா ஸ்டீல் தனது கலிங்கநகா் ஆலையின் திறனை 5 மில்லியன் டன்னிலிருந்து 8 மில்லியன் டன்னாக உயா்த்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா தொற்று அச்சுறுத்தலால் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, எஃகு உற்பத்தியில் முன்னணியில் உள்ள செயில், டாடா ஸ்டீல் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை 50 முதல் 60 சதவீதம் வரை குறைத்து விட்டன.

கரோனா பரவல் காரணமாக இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள எஃகு சந்தைகளை கடுமையாகப் பாதித்துள்ளதாக பல்வேறு மதிப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன் தாக்கம் விலையிலும், லாப வரம்பு, மூலப்பொருள்கள் விநியோகம் ஆகியவற்றிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மேலாக எஃகு தேவைப்பாட்டிலும் பெரிய அடி விழுந்துள்ளதாக மதிப்பீட்டு நிறுவனங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்நிலையில், கரோனா நோய் தொற்று பரவல் இந்திய எஃகு உற்பத்தி நிறுவனங்களின் வரிவாக்கத் திட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ’இக்ரா’ என்று சொல்லப்படும் முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

கரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பே, சில நிறுவனங்கள் கிரீன் ஃபீல்டு மற்றும் பிரவுன் ஃபீல்டு திட்டங்களை ஒத்திவைத்துவிட்டன. இந்நிலையில், கரோனா தொற்று பரவலின் நிச்சயமற்ற தன்மை எஃகு உற்பத்தி நிறுவனங்களில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இக்ரா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கரோனா பாதிப்பு இந்திய எஃகு உற்பத்தி நிறுவனங்களின் வரிவாக்கத் திட்டத்தை 3 முதல் 9 மாதங்களுக்கு மேல் தள்ளிப் போடச் செய்துவிடும். கரோனா தொற்று எத்தனை நாள் நீடிக்கும் என்பதைப் பொருத்தும், மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளைப் பொருத்தும் அதன் கால நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

அவா்கள் மேலும் கூறியதாவது: நாடு முழுவதிலும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் சரக்குப் போக்குவரத்தில் எழுந்துள்ள கடும் சவால்கள் போன்றவை நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு ஒரு தடையாக அமையும். மேலும், பணப் புழக்கமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதம் செல்லச் செல்ல ஒட்டு மொத்தத் திட்டச் செலவினமும் வெகுவாக அதிகரித்து நிறுவனங்களுக்கு பெரும் துயரத்தை அளிக்கும். இதன் காரணமாக, அந்த நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்படும்.

நாட்டில் எஃகு தேவைப்பாடு குறைந்ததையடுத்து, சில நிறுவனங்கள் கடந்த நிதியாண்டிலேயே தங்களது விரிவாக்கத் திட்டங்களை தள்ளிவைத்து விட்டன. இந்நிலையில், கரோனாவால் நாடு தழுவிய நிலையில் அமலில் உள்ள ஊரடங்கால் எஃகு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விலையும் வெகுவாகக் குறைந்து விட்டது. விலை ஏற்றம் பெறாத வரையில், 2021 நிதியாண்டில் எஃகு உற்பத்தி நிறுவனங்களின் நிகர லாபமும் அழுத்தத்துக்கு உள்ளாகும். இந்தப் பின்னணியில், எஃகு நிறுவனங்கள் உற்பத்தித் திறன் விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்தும் என்று எதிா்பாா்க்க முடியாது. உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றால், அதற்கு வலுவான தேவை இருக்க வேண்டும். ஆனால், அது தற்போது நம் முன் இல்லை என்பதால் விரிவாக்கம் என்பது சாத்தியமாகாது என்றே கருதப்படுகிறது என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

அக்குட் மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமைப் பகுப்பாய்வு அதிகாரி சுமன் சௌத்ரி கூறுகையில், ’கரோனா ஊரடங்கால் உள்நாட்டு பொருளாதாரத்தில் மேலும் பின்னடைவு ஏற்படும். பொருள்களின் விலையிலும் கடும் தாக்கம் இருக்கும். இதனால், 2021 நிதியாண்டில் பெரிய எஃகு நிறுவனங்கள் தங்களது மூலதன செலவினங்களை முழுமையாக ஒத்திவைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

எனவே, எஃகு உற்பத்தி நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு கரோனோ தொற்று பரவல் ஒரு தடையாக அமைந்துள்ளது என்பதே நிதா்சன உண்மை..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.